சக்திகாந்த தாஸ்: நம்பிக்கையளிக்கும் பதவிநீட்டிப்பு


ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸின் பதவிக்காலம் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இது நாட்டின் பொருளாதாரம் குறித்த நம்பிக்கையைப் பிரதிபலிக்கும் நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.

கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் நாட்டின் பொருளாதாரத்தைத் தொடர்ந்து செயல்பட வைப்பதில், இந்திய ரிசர்வ் வங்கி ஆற்றிய பணி குறிப்பிடத்தக்கது. பெருந்தொற்றுக்கு முன்னதாக அரசுடைமை வங்கிகளின் வாராக்கடன் அதிகரிப்பு, அரசின் வரி வருவாயில் பற்றாக்குறை, வேலையின்மை, தொழில் துறையில் சுணக்கம் போன்ற பிரச்சினைகளால் இந்தியா தள்ளாடியது. போதாக்குறைக்கு, லடாக் எல்லையில் சீன ராணுவம் நிகழ்த்திய அத்துமீறல்களும் தொடர்ந்து எல்லையில் அதனுடைய உறுமல் சத்தமும் போர் அபாயச் சூழலையே நினைவுபடுத்திவந்தன.

இந்நிலையில் 2019 இறுதியில் தோன்றிய கோவிட்-19 பெருந்தொற்று இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலகின் வல்லரசு நாடுகளுக்குமே பெரிய உயிரச்சத்தை ஏற்படுத்தியது. இந்தியாவில் பொதுமுடக்க நடவடிக்கைகள், அனைத்துத் தரப்பு மக்களையும் பாதித்தது நாம் அறிந்ததுதான்.

எல்லோரும் அவரவர் வீடுகளிலேயே முடங்கினால் உற்பத்தி என்னாவது, மக்களுக்கு எப்படி வேலைவாய்ப்பு, வருவாய், உணவு, அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கும், பொதுப் போக்குவரத்து உட்பட அனைத்தையும் நிறுத்திவிட்டால் தேவைப்படும் மருந்து மாத்திரைகளையும் அரிசி, கோதுமையையும் சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டுபோய்ச் சேர்ப்பது எப்படி என்ற கேள்விகளும் அந்தத் தருணத்தில் எழுந்தன.

இந்த நிலையில்தான் கடன் வழங்க நிதிப் புழக்கத்தை அதிகப்படுத்தியது, வட்டி வீதத்தைக் குறைத்தது, விலைவாசியைக் கட்டுக்குள் வைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுத்தது, உற்பத்தி – ஏற்றுமதி ஆகிய துறைகளுக்குத் தேவைப்பட்ட நிதி மற்றும் நிதியல்லாத உதவிகளை வழங்கியது என்று இந்திய ரிசர்வ் வங்கி இடையறாது செயல்பட்டது. ஐஏஎஸ் அதிகாரியாக இருந்து கவர்னர் பதவிக்கு நியமிக்கப்பட்டதால் அரசு இயந்திரத்தின் தன்மை, வேகம், வீச்சு ஆகியவற்றை நன்கு அறிந்திருந்த சக்திகாந்த தாஸ், அரசையும் நிதித் துறையையும் ஒருங்கிணைத்துச் செயல்பட்டார். அவருடைய வழிகாட்டல்களாலும் நடவடிக்கைகளாலும் மிகப் பெருமளவுக்கு நிதித் துறையில் கோளாறுகள் ஏற்பட்டுவிடாமல் வருவாயும் பெருகியது, அரசின் செலவும் முறையாகவும் விரைவாகவும் உரிய துறைகளுக்குக் கிடைத்தன.

அமெரிக்கா, ஜெர்மனி, பிரேசில், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் அரசின் செலவைப் பல மடங்கு அதிகப்படுத்தி உலகத்துக்கே முன்னுதாரணமாகத் திகழ்ந்தபோது, இந்திய அரசு தன்னுடைய நிதிநிலை அனுமதிக்கும் அளவுக்கு மட்டுமே செலவுகளை முன்னுரிமைத் துறைகளில் மட்டுமே செலவிட்டது. இதைக் கடுமையாக விமர்சித்தவர்கள் அநேகம். முன்னாள் நிதியமைச்சர்கள் உட்பட பலரும் ரூபாய் நோட்டுகளைக் கோடிக்கணக்கில் அச்சடித்து புழக்கத்தில் விட வேண்டும், நுகர்வை அதிகப்படுத்த வேண்டும் என்றெல்லாம் யோசனை கூறினார்கள். அப்படிச் செய்த நாடுகளில் அதற்கேற்ற பலன்கள் ஏற்படவில்லை என்று ஆய்வறிக்கைகள் வந்துகொண்டிருக்கின்றன. காரணம் முழு ஊரடங்கை அமல்படுத்திவிட்டு, மக்களிடையே பணத்தைக் கொடுப்பதால் அது பெருக்கல் விளைவுகளை ஏற்படுத்துவதற்குப் பதிலாக சில துறைகளில் மட்டும் நுகர்வை ஏற்படுத்திவிட்டு அடங்கிவிட்டது. அதனால் அரசின் நிதி நிர்வாகத்தில் வரவுக்கும் செலவுக்கும் பெரிய இடைவெளி ஏற்பட்டிருப்பதால், முக்கியமான இந்தக் கட்டத்தில் அதிகம் செலவிட முடியாமல் அந்நாடுகள் திகைக்கின்றன. பெட்ரோல்-டீசல் விலையுயர்வு எல்லா நாடுகளையும் இப்போது நிதி நெருக்கடியில் தள்ளியிருக்கிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை, அரசின் கைவசம் இருந்த அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவு தானியங்கள் நியாயவிலைக் கடைகள் மூலம் நாட்டின் பெரும்பகுதி மக்களுக்கு வழங்கப்பட்டன. கடன் சுமையில் இருந்த நிறுவனங்களுக்கான அபராத வட்டி நீக்கப்பட்டு, கடன் தவணைக் காலம் நீட்டிக்கப்பட்டது. துறைவாரியாகத் தொழில் நிறுவனங்களுக்கு நிதிச் சலுகைகளும் கடன் உதவிகளும் வழங்கப்பட்டன. சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் கடன்களைத் தள்ளுபடி செய்வதற்குப் பதிலாக புதிய கடன்கள் குறைந்த வட்டியில் வழங்கப்பட்டன. இப்படிப்பட்ட செயல்களால் தொழில், சேவைத் துறைகள் மீட்சி அடைந்ததல்லாமல் பணவீக்கமும் கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டது. அரசின் நிதிப் பற்றாக்குறை அதிகரித்தாலும் அது நிர்வகிக்கக்கூடிய அளவிலேயே கட்டுக்குள் இருக்கிறது.

ரிசர்வ் வங்கி கவர்னர்கள் நிதி நிபுணர்களாகவும் மேதைகளாகவும் இருந்தால் மட்டும் போதாது, அரசு இயந்திரத்தைச் சிக்கலின்றி இயங்க வைக்கத் தெரிந்தவர்களாகவும், அரசின் அங்கமாகவே செயல்படுகிறவர்களாகவும் இருக்க வேண்டும்.

வேலைவாய்ப்பின்மைப் பிரச்சினை தீர்ந்துவிடவில்லை, விலைவாசி ஒரேயடியாகக் குறைந்துவிடவில்லை, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்துக்கு இப்போதும் தேவை இருந்தாலும் ஒதுக்கப்பட்ட நிதி முழுக்க செலவாகிவிட்டது. இவ்வளவுக்கும் நடுவில் நாட்டில் உணவுப் பொருட்களுக்குப் பெரிய அளவில் தட்டுப்பாடு ஏற்படவில்லை. இப்படி அரசின் நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருந்ததுடன், அரசுக்கே வழிகாட்டியாகவும் செயல்பட்ட சக்திகாந்த தாஸுக்கு கவர்னர் பதவியை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்ததன் மூலம் பொருள் சந்தை, நிதிச் சந்தை, பங்குச் சந்தை என்று அனைத்துச் சந்தைகளுக்கும் நிம்மதியை அளித்திருக்கிறது அரசு. ரிசர்வ் வங்கி கவர்னர்கள் நிதி நிபுணர்களாகவும் மேதைகளாகவும் இருந்தால் மட்டும் போதாது, அரசு இயந்திரத்தைச் சிக்கலின்றி இயங்க வைக்கத் தெரிந்தவர்களாகவும், அரசின் அங்கமாகவே செயல்படுகிறவர்களாகவும் இருக்க வேண்டும். இந்தியப் பாரம்பரிய தொழில், வர்த்தக நடைமுறைகளையும் புரிந்தவர்களாக இருக்க வேண்டும்.

இந்தியா போன்ற வளரும் நாட்டில் தொழில்-வர்த்தக நிறுவனங்கள், வங்கிகளிடம் வாங்கும் கடன்களைத் தவணை தவறாமல் செலுத்துவது என்பது நிச்சயமானதல்ல. அதற்காகத் தவணையில் அசலும் வட்டியும் சேர்ந்தோ, அல்லது வட்டி மட்டுமோகூட சில மாதங்கள் செலுத்தாவிட்டால் அதை வாராக்கடனாக அறிவித்து நடவடிக்கை எடுப்பதென்பது கடன் வாங்கிய நிறுவனங்களுக்கு மட்டுமல்ல, கடன் கொடுத்தவர்களுக்குமே இடராகத்தான் முடியும். இந்த நீக்குபோக்குகளையெல்லாம் தெரிந்த சக்திகாந்த தாஸ், தமிழக அரசில் தான் பணியாற்றியபோது பெற்ற கள அனுபவத்தை அனைத்திந்திய அளவுக்கு விரிவுபடுத்திச் செயலாற்றியதை, அரசு நிர்வாகத்தினர் மட்டுமல்லாது தொழில்-வர்த்தகத் துறையினரும் பாராட்டுகின்றனர்.

பெருந்தொற்றுக் காலத்தில் இந்தியப் பொருளாதாரம் நிர்வகிக்கப்பட்ட விதம் குறித்து, பலருக்கும் விமர்சனங்கள் இருக்கலாம். ஏழைகளுக்கும் தொழிலாளர்களுக்கும் அரசு செய்த உதவிகள் போதாது என்பதில் கருத்து வேற்றுமை இல்லை. ஆயினும் கடுமையான விமர்சகர்கள்கூட சக்திகாந்த தாஸின் நடவடிக்கைகளைத் திருப்திகரமானவையாகவே கருதுவார்கள். நிலையான வளர்ச்சிக்கு அவருடைய வழிகாட்டலும் தலைமையும் நிச்சயம் உதவும். பதவி நீட்டிப்பை அவருடைய பதவிக்காலம் முடிவதற்கு முன்னதாகவே, அரசு அறிவித்ததும்கூட வரவேற்கப்பட வேண்டியதே.

பெருந்தொற்று இன்னமும் முடிவுக்கு வராத சூழலில், சக்திகாந்த தாஸுக்கு இன்னும் நிறைய சவால்கள் காத்திருக்கின்றன. அடுத்த 3 ஆண்டுகளில் அவற்றை அவர் வெற்றிகரமாக எதிர்கொள்வார் என்று நம்புவோம்!

x