ஏன் அப்படிச் சொன்னார் பிரசாந்த் கிஷோர்?


“மோடியைக்கூட மக்கள் தூக்கி எறிந்துவிடலாம் ஆனால், பாஜக எங்கும் சென்றுவிடாது” - புகழ்பெற்ற தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சொல்லியிருக்கும் இந்த வார்த்தைகள் தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. எப்படி காங்கிரஸ் 40 ஆண்டுகளுக்கு ஆட்சியில் இருந்ததோ அதேபோல் பாஜக இருக்கும் என்பது பிரசாந்தின் கணிப்பு.

கோவாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரசாந்த் பயன்படுத்திய இந்த வார்த்தைகள், காங்கிரஸ் முகாமை அதிரச் செய்திருக்கின்றன. கரோனா பெருந்தொற்றை மோடி அரசு கையாண்ட விதம், பெட்ரோல் டீசல் விலை உயர்வு, எல்லையில் சீனா மிரட்டல் என ஏகப்பட்ட பிரச்சினைகள் இருந்தும் பாஜகவுக்கான ஆதரவுத் தளம் அத்தனை எளிதில் கரைந்துவிடாது என்று பிரசாந்த் கிஷோர் முடிவுக்கே வந்துவிட்டார். பாஜக தலைவர்கள் இதனால் அகமகிழ்ந்திருக்க, பாஜக ஆதரவு ஊடகங்கள் இதைப் பெரும் விவாதமாக முன்னெடுத்திருக்கின்றன. மோடி, நிதீஷ் குமார், அர்விந்த் கேஜ்ரிவால், அமரீந்தர் சிங் எனப் பலரின் வெற்றிக்குக் காரணமாக இருந்தவர் பிரசாந்த் கிஷோர். மு.க.ஸ்டாலினை முதல்வராக்கியதன் பின்னணியிலும், மம்தா பானர்ஜி முதல்வர் பதவியைத் தக்கவைத்ததன் பின்னணியிலும் பிரசாந்த் கிஷோர் இருக்கிறார். எனவே, அவரது வார்த்தைகள் மிகுந்த முக்கியத்துவம் பெறுவதில் ஆச்சரியமில்லை.

இதே பிரசாந்த் கிஷோர், மற்றவர்கள் நினைக்கும் அளவுக்கு பாஜக அத்தனை வலிமையான கட்சி அல்ல என்று கூறியவர்தான். மூன்றாவது அணி என்றெல்லாம் முயற்சிக்காமல், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து நின்றால் பாஜகவை வெல்ல முடியும் என்றே அவர் சில மாதங்களுக்கு முன்னர் கூறியிருந்தார். அப்படியெனில், பிரசாந்த் ஏன் இப்போது இப்படிப் பேசுகிறார்?

பஞ்சாப், உத்தராகண்ட், உத்தர பிரதேசம், கோவா, மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலங்களில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், பிரசாந்த் கிஷோரை முறைப்படி காங்கிரஸில் சேர்ப்பதற்கான வேலைகளும் நடந்துவந்தன. எனினும், ராகுல் காந்திக்கு அதில் பெரிய அளவில் ஆர்வம் இல்லை என்றே சொல்லப்படுகிறது. இத்தனைக்கும் காங்கிரஸில் இணைவது எனும் முடிவும்கூட பிரசாந்த் கிஷோரே எடுத்ததுதான்.

ஆனால், அவரது இரட்டை நிலை காங்கிரஸ் தலைவர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. கோவா முன்னாள் முதல்வர் லூசினோ ஃபெலேரோ உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் சேர்வதற்குப் பிரசாந்த் கிஷோர்தான் ஆலோசனை சொன்னார் என காங்கிரஸில் ஏற்கெனவே புகைச்சல் இருந்தது. குறிப்பாகக் கட்சியின் மூத்த தலைவர்களும் பிரசாந்தின் வரவை ரசிக்கவில்லை.

அதேபோல், காங்கிரஸின் சமீத்திய நகர்வுகளில் பிரசாந்த் கிஷோரின் பங்கு இருப்பதாகச் சொல்லப்பட்ட நிலையில், அப்படியெல்லாம் எதுவும் இல்லை என அவரது தரப்பிலிருந்து செய்திகள் வெளியாகின. பஞ்சாப் முதல்வர் பதவிக்கு சரண்ஜீத் சிங்கைத் தேர்ந்தெடுத்ததன் பின்னணியில் பிரசாந்த் கிஷோர் இருப்பதாக முதலில் சொல்லப்பட்டது. ஆனால், காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயின் ஆலோசனையின்பேரில்தான் அந்த முடிவு எடுக்கப்பட்டதாகப் பின்னர் செய்திகள் வெளியாகின.

2019 மக்களவைத் தேர்தலையொட்டி உத்தர பிரதேச காங்கிரஸில் பிரியங்கா காந்திக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆலோசனை சொன்னதே பிரசாந்த் தான் எனச் செய்திகள் வெளியாகின. அவர் அதை மறுத்தாலும், பிரியங்காவின் வருகை காங்கிரஸுக்குப் பலம் சேர்க்கும் என்று உறுதியுடன் கூறினார். தற்போது, உத்தர பிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தல் காத்திருக்கும் சூழலில் காங்கிரஸைப் பலவீனப்படுத்தும் வகையில் இப்படி அவர் பேசியிருப்பது பலரையும் புருவமுயர்த்தச் செய்திருக்கிறது.

உத்தர பிரதேசத்தின் லக்கிம்பூர் கெரியில் விவசாயிகள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை வைத்து காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் உடனடியாகச் செயலாற்றத் தொடங்கும் என எதிர்பார்த்திருந்த பிரசாந்த் கிஷோர், அப்படி எதுவும் நடக்காததால் பெரும் ஏமாற்றம் அடைந்தார். இத்தனைக்கும் அங்கு பிரியங்கா காந்தியும் ராகுல் காந்தியும் பயணம் செய்து பரபரப்பை ஏற்படுத்தினாலும் அதன் மூலம் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பதில் காங்கிரஸ் கவனம் செலுத்தவில்லை எனும் ஆதங்கம் பிரசாந்த் கிஷோருக்கு இருந்தது. அடுத்த ஆண்டு உத்தர பிரதேச சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், அநேகமாகத் தனியாகத்தான் காங்கிரஸ் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவை அனைத்தும் பிரசாந்த் கிஷோரை ஏமாற்றத்துக்குள்ளாக்கியிருக்கும் எனக் கருதப்படுகிறது. உட்கட்சி விவகாரங்களைக் களைவதில், நிர்வாக ரீதியான முடிவுகளை எடுப்பதில் காங்கிரஸ் தலைமையிடம் இருக்கும் சுணக்கமும் பிரசாந்தை அதிருப்தியில் தள்ளியிருக்கிறது. அத்துடன், காங்கிரஸை மட்டும் பிரசாந்த் குறைசொல்லவில்லை. எதிர்க்கட்சிகளிடையே நிலவும் ஒற்றுமையின்மையையும் அவர் ரசிக்கவில்லை.

வழக்கமான வியூகங்கள் மூலமே காங்கிரஸை மீட்டெடுக்க முடியும் என்று ராகுல் காந்தி கருதுகிறார் என்று ஒரு பேட்டியில் அதிருப்தியுடன் பேசியிருக்கிறார் பிரசாந்த். அதைத் தாண்டிய வியூகங்களுக்குக் காங்கிரஸ் தயாராக இல்லை என்பது அவரது ஏமாற்றங்களில் ஒன்று. மோடியை வீழ்த்திய பின்னர்தான் காங்கிரஸ் புத்தெழுச்சி பெறும் என்று ராகுல் கருதுவது பிரசாந்துக்கு ஏற்புடையதாக இல்லை. அரசியல் அணுகுமுறையில் மோடிக்கும் ராகுலுக்கும் இடையிலான வித்தியாசங்கள் குறித்து ஒரு புத்தகமே எழுதலாம் என்றும் பிரசாந்த் குறிப்பிட்டார். மோடி ரிஸ்க் எடுக்கத் தயங்காதவர்; ராகுலோ நடப்புச் சூழலில் பெரிய மாற்றத்தை உருவாக்கும் முனைப்பு இல்லாதவர் என்று பிரசாந்த் சுட்டிக்காட்டினார்.

அமித் ஷா, பிரசந்த் கிஷோர் யுகத்தில் தேர்தல் வியூகங்களின் முகம் பெரிய அளவில் மாறியிருக்கிறது. பிரமோத் மகாஜன், அருண் ஜேட்லி ஆகியோர் கட்சிக்குள் இருந்தபடியே பாஜகவுக்குத் தேர்தல் வியூகங்கள் வகுத்துவந்த நிலையில், பிரசாந்த் கிஷோரின் வரவு அதை வேறொரு தளத்துக்குக் கொண்டுசென்றது. 2014 மக்களவைத் தேர்தலில், ஊடகங்கள் அதிகம் சென்றடையாத உத்தர பிரதேசத்தின் மூலை முடுக்குகளில்கூட மோடியைக் கொண்டுசென்றதில் பல்வேறு உத்திகளைப் பயன்படுத்தியவர் பிராந்த் கிஷோர். மோடியைப் பொறுத்தவரை, தனக்குச் சொல்லப்படும் ஆலோசனைகளைக் கவனத்துடன் செவிமடுப்பவர் என்றும், அதை அமல்படுத்துவதில் முனைப்பு காட்டுபவர் என்றும் பிரசாந்த் குறிப்பிட்டிருக்கிறார்.

தேர்தலில் ஒரு கட்சி வெற்றி பெறுவதற்குத் தேவையான விஷயங்களை முன்வைப்பதும், சூழலைப் பொறுத்து அவற்றை வலியுறுத்துவதும் பிரசாந்தின் பாணி. அவரது யோசனைகளை அமல்படுத்தியதன் பலனை அரசியல் கட்சிகளும் பெற்றன. பாஜகவுக்கு எதிராகத் திரிணமூல் காங்கிரஸை மேற்கு வங்கத்தில் மீண்டும் அரியணை ஏற்றியதன் மூலம் தனது வியூக பலத்தை அழுத்தமாகவே பதிவுசெய்துகாட்டியிருக்கிறார் பிரசாந்த்.

ஐக்கிய ஜனதா தளத்தில் இணைந்திருந்த பிரசாந்த், நிதீஷ் குமாரின் ஆட்சியில் அமைச்சருக்கு நிகரான பதவியில் இருந்தவர். எனினும், கட்சியின் மூத்த தலைவர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு ஏற்பட்டது. மேலும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு நிதீஷ் குமார் ஆதரவளித்ததைக் கடுமையாக விமர்சித்ததற்காக கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார் பிரசாந்த். அப்போது ‘பாத் பிஹார் கி’ (பிஹாரைப் பற்றிப் பேசுவோம்) எனும் முழக்கத்துடன் மாநிலம் முழுவதும் 100 நாட்களுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, நிதீஷ் குமார் ஆட்சியின் குறைகளைச் சுட்டிக்காட்டிப் பிரச்சாரம் செய்தார். எனினும், 2020 சட்டமன்றத் தேர்தலில் நிதீஷ் மீண்டும் வென்று முதல்வர் பதவியைத் தக்கவைத்துக்கொண்டது கவனிக்கத்தக்கது.

எனவே, என்னதான் சிறந்த வியூக வகுப்பாளர் என்றாலும் தேர்தல் முடிவுகளை மக்கள்தான் தீர்மானிக்கப்போகிறார்கள். இது பிரசாந்த் கிஷோரின் கணிப்புதான். மக்கள் மனதில் இருப்பதை யாரால் இப்போதே சொல்லிவிட முடியும்?

x