சோஷியல் மீடியா ஜொள்ளர்களை குறிவைத்து பாலியல் வழிப்பறி?


சமூக ஊடகங்களில் பெண்களிடம் வழியும் ஆண்களை குறிவைத்து, கோடிகளில் சுருட்டிய கும்பலை உத்திரபிரதேச மாநிலம் காஸியாபாத் போலீஸார் கைது செய்துள்ளனர். கரோனா காலத்தில் 200-க்கும் மேற்பட்ட ஆண்களுக்கு இவர்கள் வலை விரித்து, பல நூறு கோடிகளை சுருட்டியதும் தெரிய வந்துள்ளது.

வர்த்தகர் ஒருவர் அளித்த புகாரின்கீழ், ரூ.80 லட்சம் கையாடல் செய்த அவரது ஊழியரிடம் போலீஸார் துருவி விசாரித்தனர். அதில் கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக, பாலியல் விவகாரங்கள் வெளிவந்தன. வாட்ஸ் அப் பாலியல் மிரட்டலுக்கு ஆளானதில் மானத்துக்கு பயந்து கையாடல் செய்ததாகவும், மிரட்டல் பேர்வழிகளிடம் அந்த லட்சங்களை கொடுத்து ஏமாந்ததாகவும் அந்த ஊழியர் ஒப்புக்கொண்டார். அவரளித்த ஆவணங்கள் அடிப்படையில் போலீஸார் வேறு திசைகளில் விசாரிக்க ஆரம்பித்தனர்.

அந்த வகையில் ஆண்களுக்கு வலைவிரித்து ஏமாற்றும் பாலியல் மிரட்டல் கும்பலை பிடிக்க, போலீஸார் தனியாகப் பொறி வைத்தனர். அதன்படி கணவன் மனைவியான யோகேஷ் கவுதம்- சப்னா கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவல்கள் அனைத்தும் பகீர் பாலியல் ரகம்.

முதலில், சமூக ஊடகங்களில் கவர்ச்சிகரமான பெண்களின் அடையாளத்துடன் நிறைய கணக்குகள் தொடங்குகின்றனர். நட்பின் பெயரில் அங்கே இணையும் ஆண் நண்பர்களில் வழியல் பேர்வழிகளாக பொறுக்கி எடுக்கிறார்கள். அவர்களில் வசதியுள்ளவர்கள் அடுத்தகட்டமாக வடிகட்டப்படுகிறார்கள். இப்போது சிக்கும் விலாங்கு மீன்களிடம் படிப்படியாக பழகி, வாட்ஸ் அப் எண் பரிமாறுகிறார்கள். ஜொள் எல்லை மீறும்போது வீடியோ காலுக்கு முன்னேறுகிறார்கள். அங்கே மேற்படி ஆண்கள் அரைகுறையாய் காட்சியளிக்கும்போது அதை ஸ்க்ரீன் ஷாட் மற்றும் வீடியோ எடுத்துக்கொள்கிறார்கள்.

அடுத்தபடியாக இந்த டிஜிட்டல் சாட்சியங்களை, அதே வாட்ஸ் அப்பில் அனுப்பி மிரட்ட ஆரம்பிக்கிறார்கள். மானம் மரியாதை ஆகியவற்றுக்கான விலையாக லட்சங்களில் தொடங்கி கோடிகள் வரை, பாலியல் வழியல் ஆண்கள் இழக்க ஆரம்பிப்பார்கள். தங்கள் தரப்பில் தவறு இருப்பதால் போலீஸுக்கும் செல்ல மாட்டார்கள். இது மிரட்டல் கும்பலுக்கு வசதியாக, பொன் முட்டையிடும் வாத்தாக பாவிப்பார்கள். இப்படி யோகேஷ்-சப்னா ஜோடி அண்மையில் மட்டும் ரூ.22 கோடிக்கு இணைய வழிப்பறி நடத்தியிருக்கிறது. இதற்கென மாதம் ரூ.25 ஆயிரம் ஊதியத்தில் 3 பெண்களை வேலைக்கு அமர்த்தி, பல்வேறு பெயர்களில் வங்கிக் கணக்குகள், இணையத்தில் பரிவர்த்தனைகள் நடத்தி இருக்கிறார்கள். கரோனா காலத்தில் நெருங்கிப் பழக பெண்கள் கிடைக்காது காய்ந்துகிடந்த ஆண்கள் பலர். இப்படி இணையத்தில் ஏமாந்து போனதோடு அவற்றை வெளியே சொல்ல முடியாத வேதனையுடன் பம்மிக் கிடக்கிறார்கள்.

இது 2 பேர் நடத்திய மோசடியாக தெரியவில்லை என்றும் இவர்களுக்குப் பின்னே பெரும் கும்பல் இருக்கலாம் என்றும் போலீஸார் சந்தேகிக்கின்றனர். ஏமாந்த ஆண்களில் எவரும் வாய்திறக்க மறுப்பதாலும் போலீஸ் விசாரணை சுணங்கி நிற்கிறது. எனவே, விசாரணையை வேறு தளங்களில் விரிவு செய்து வருகின்றனர்.

செக்ஸ்டார்சன்(Sextortion) எனப்படும் இணையத்தில் நடக்கும் பாலியல் வழிப்பறி குறித்,த 'பணம் பறிக்கும் பாலியல் மிரட்டல்கள்! ஆபத்தில் தள்ளும் ஆபாச வலைகள்?’ என்ற விரிவான விழிப்புணர்வு கட்டுரையை வாசிக்க..

பணம் பறிக்கும் பாலியல் மிரட்டல்கள்!

x