போர் முரசறையும் போதைப்பொருள் ஊடுருவல்!


புஜபல பராக்கிரமத்துக்கான மரபான போர்களை இனி வரலாற்றில் மட்டுமே அறிய முடியும். நேரிடைப் போரில் பெரும் நாசங்களை ஏற்படுத்தும் அணு, உயிரி, வேதி என புதிய ரக ஆயுதங்களை மிரட்டலுக்காக வைத்துக்கொண்டு, மறைமுகப் போர்களுக்கே தேசங்கள் முக்கியத்துவம் தருகின்றன. இணைய வழித் தாக்குதல், பொருளாதாரத்தை நசுக்கும் வர்த்தகக் கால்வாரல்கள் போன்றவற்றின் வரிசையில் அதீத உத்தியாகப் பயன்பாட்டில் இருக்கிறது போதைப் போர். எதிரி தேசத்தின் எல்லைகளுக்குள் போதைப் பொருட்களை ஊடுருவவிட்டு, அந்நாட்டை எண்ணில்லா பிரச்சினைகளுக்கு ஆளாக்குவது இதில் அடங்கும். இன்றைய இந்தியா, இப்படியான போதைப்பொருளுக்கு எதிராகவும் போரிட வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியிருக்கிறது.

போதைக்கு ஆட்பட்டவர்- சித்தரிப்பு படம்

மனிதவளத்தை நசுக்கும் போதை

இளைஞர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில், மனித வளத்தில் உலகிலேயே முதன்மையான இடத்திலிருக்கும் தேசம் இந்தியா. போதைப்பொருள் பயன்பாட்டில் உலக சராசரியைவிட, இந்தியாவின் சராசரி மும்மடங்கு அதிகம் என்கிறது கரோனாவுக்கு முந்தைய புள்ளிவிவரம். சுமார் அரை கோடி இளையோர்கள், திரும்ப முடியாத அளவுக்கு போதையின் பாதையில் விழுந்துள்ளனர். இந்தப் பெருந்தொற்று காலத்தில் அதன் எண்ணிக்கை மேலும் அதிகரித்திருக்கக்கூடும். போதைப் பொருட்களின் இளவரசியான ஹெராயின் உபயோகிப்போரின் குறைந்தபட்ச வயது என்பது, சில ஆண்டுகள் முன்புவரை 15-16 ஆக இருந்தது, தற்போது 10-12 எனக் குறைந்திருக்கிறது.

வட மாநில மாநகரங்களை மையப்படுத்திய போதைத் தடுப்பு அதிகாரிகளின் ஆவணங்களும், போதை மீட்பு மையங்களின் தகவலும் இந்த அதிர்ச்சியைத் தருகின்றன. வழிப்பறிகள், திருட்டுகள், பாலியல் மிரட்டல்கள் எனப் பல்வேறு குற்றங்களில் சிக்கும் சிறார்களை பின்னிருந்து எய்வது போதையின் தேவையாகவே பெரும்பாலும் இருக்கிறது. தனிப்பட்டவரின் உடல்நலம், எதிர்காலம் மட்டுமல்ல சட்டம் - ஒழுங்கு, பொது அமைதி சார்ந்த சமுதாயப் பிரச்சினைகளுக்கும் இந்த போதை வஸ்துகளே காரணமாகின்றன.

ஹெராயின் -மாதிரி படம்

தீவிரவாதத்தின் உயவுப்பொருள்

இந்தியாவில் கைப்பற்றப்படும் போதைப்பொருட்களின் அளவு திடீரென அதிகரித்திருப்பதற்கு, எல்லைகளின் போதைப்பொருள் முற்றுகையை நாம் முழுவதுமாகப் புரிந்துகொள்ளாததே காரணம். அதிலும் அண்மையில் அரசியல் மாற்றத்துக்கு ஆளான ஆப்கானிஸ்தான் இதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. உலகில் விளைவிக்கப்படும் ஓப்பியத்தில் 85 சதவீதம் ஆப்கனில் பயிராகிறது. தாலிபான்கள் அசைக்கமுடியாத சக்தியாக வளர்ந்திருப்பதற்கு ஓப்பியமும் ஒரு காரணம். ஆப்கன் மட்டுமல்ல கொலம்பியா, மெக்சிகோ போன்ற அடுத்த இடத்தில் வரும் நாடுகளிலும் தீவிரவாத கலாச்சாரத்துக்கு போதை வர்த்தகமே காரணமாக இருக்கிறது.

ஆட்சியில் இல்லாதபோதே தங்களது கட்டுப்பாட்டு பிரதேசங்களில் ஓப்பியம் பயிரிடலை ஊக்குவித்துவந்த தாலிபான்கள், அண்மையில் ஆட்சியைப் பிடித்ததும் ’ஸ்டாக் கிளியரன்ஸ் சேல்’ அறிவித்தார்கள். நாட்டில் தேங்கிக் கிடக்கும் ஓப்பிய கச்சா அனைத்தையும் வந்த விலைக்கு விற்றார்கள். புதிய சாகுபடி, தரமும் செறிவுமான போதைப்பொருளுக்கு ஆப்கன் தயாராகிறது. தாலிபான்கள் மட்டுமல்ல உலகின் பெரும்பாலான தீவிரவாதக் குழுக்களின் ஆயுதக் கொள்முதல் முதல் ஆள்சேர்ப்பு வரை பணப்புழக்கத்துக்கு போதை வர்த்தகமே துணையாகிறது. இந்தியாவின் பாகிஸ்தான் எல்லையிலும் ஆயுதங்களுடன் அவ்வப்போது போதைப்பொருட்கள் பிடிபடுவதற்கும் இதுவே காரணம். போதைப்பொருட்களின் பாதையை அடைப்பது தீவிரவாதப் பரவலை அழிப்பதற்கு ஒப்பானது.

போதைக்கு ஆட்பட்டவர்- சித்தரிப்பு படம்

போதையில் விழுந்த வடமாநிலங்கள்

பஞ்சாப்பின் நில எல்லை, குஜராத்தின் கடல் எல்லை ஆகியவையே ஹெராயின் ஊடுருவலுக்குப் பிரதான கேந்திரங்கள். இவை தவிர்த்து வடகிழக்கு மாநிலங்களும் அவற்றின் எல்லைகள் வழியே தேசத்தின் அதிகப்படி போதைக் கடத்தலுக்கு ஆளாகின்றன. நேபாள எல்லையில் கஞ்சா, மியான்மர் எல்லையில் அம்பெடமைன் மற்றும் மெத்தம்பெடமைன், பாகிஸ்தான் எல்லையில் ஓப்பியம் ஆகியவையே இதுவரையிலான போதைக்கடத்தலின் பாதையாக இருந்துவந்தன. கிலோ கணக்கில் இருந்த இந்தக் கடத்தல்கள் தற்போது டன் கணக்குக்கு அதிகரித்திருப்பதும் அதிர்ச்சி தரக்கூடியதே. போதையில் விழுந்த வட மாநிலங்களின் வரிசையில் பஞ்சாப், ஹரியாணா, குஜராத், உ.பி, டெல்லி, மகாராஷ்டிரம், ராஜஸ்தான் ஆகியவை வருகின்றன. இந்த வரிசையில் இடம்பெறும் ஒரே தென்னிந்திய மாநிலம் ஆந்திரா. தமிழகம், கேரளம், புதுச்சேரி உள்ளிட்ட தென்னிந்தியர்களை கரைபுரண்டோடும் மது ஏற்கெனவே மதிமயக்கி வைத்திருப்பதால், இதர போதை வஸ்துகள் இங்கே பின்தங்கியே இருக்கின்றன.

ஓப்பியம் தாவரம்

கிரிப்டோ கரன்சி- கால்சென்டர்

மாறும் காலத்துக்கு ஏற்ப போதைப்பொருள் விற்பனையும் நவீன வடிவம் எடுத்துள்ளது. முகமறியா விநியோகஸ்தரிடம், தம்மையும் அடையாளம் காட்டாது போதையாளர்கள் தொடர்புகொள்கிறார்கள். டார்க் வெப் வாயிலாக ஒருமுறை பதிவு செய்துகொண்டால், அடுத்தடுத்த அழைப்புகளை கால்சென்டர் வாயிலாகத் தொடரலாம். இந்தியாவின் கொகெய்ன் தலைநகரான மும்பையின் கால்சென்டரைத் தொடர்புகொள்வோரை பெரு, பிரேசில், சிலி என தென்னமெரிக்க நாடுகளில் இருந்து ஒருங்கிணைக்கிறார்கள்.

விநியோகத்தைப் பொறுத்தவரை கூரியர் முதல் பிரபல உணவு விநியோக சிப்பந்திகள்வரை, கையாள்பவர் அறியாது கைக்கு வந்து சேர்ந்துவிடும். கிரிப்டோ கரன்சி முதல் இ-வர்த்தக மையங்கள்வரை பணப்பரிவர்த்தனைக்கு டிஜிட்டல் இந்தியாவில் பரஸ்பரம் பலனடைகிறார்கள்.

ஓப்பியம் வயல்

இதிலும் உண்டு கலப்படம்!

சரக்கின் தரத்துக்கு ஏற்ப விலை வைத்து விற்கிறார்கள். இதுதவிர கொள்ளை லாபத்துக்காக வெண் சர்க்கரை, பால் பவுடர், லாக்டோஸ், பேக்கிங் சோடா என கலப்படம் செய்வோரும் உண்டு. ஊசி, புகைத்தல், மூக்கில் உறிஞ்சல் என உடலுக்குள் பரவும் ஹெராயின் நேரடியாக மத்திய நரம்பு மண்டலத்தை மொத்த குத்தகைக்கு எடுத்துக்கொள்ளும். போதை இறங்கும் வரை இன்னொரு பிரபஞ்சத்தில் பித்தேறி உலாத்துவார்கள். கூடவே, கணக்கற்ற உடல் உபாதைகள் மற்றும் மீளமுடியாத அடிமைத்தனம் முதல் நடைபிணமாவது வரை புதைகுழியில் தள்ளிவிடும்.

கலப்படங்கள் தங்கள் பங்குக்கு ரத்தக் குழாய்களை அடைத்து, உள் அவயங்களைத் திடீரென முடக்கிப்போடும். இந்த போதைப்பொருளைத் தவணையில் தந்து பாலியல் உறவு முதல் தீவிரவாத தாக்குதல்வரை வேண்டியதைச் சாதித்துக்கொள்ளும் கூட்டமும் உண்டு. பார்ட்டிகளின் பெயரில் ஊசி உபயோகிப்பாளர்கள் கூட்டாக பங்கேற்பதால், ஹெப்படைடிஸ் தொடங்கி எய்ட்ஸ் வரை தொற்றும்நோய்கள் போனஸாகக் கிடைக்கும். அளவில் பிசகினால் உடனடி நிவாரணமாக மரணமும் கிட்டும்.

முந்த்ரா துறைமுகம்

பிடிபடுபவை சிறுதுளியே

செயற்கைக்கோளின் கண்களில் பிடிபடாத சிறிய படகுகளில் கடல்வழியாகக் கடத்துவோர் அதிகரித்திருக்கிறார்கள். இந்த கடல்வழி சில்லறை கடத்தல்காரர்கள், விமான மார்க்க குருவிகள், எல்லையோர உள்ளூர்வாசிகள் வாயிலாக நாட்டுக்குள் கொண்டுவரப்படும் கச்சா போதைப்பொருள் தரம்பிரித்து விநியோகிப்பாளர்களிடம் அனுப்பப்படும். இவர்கள் அனைவரையும் ஒருங்கிணைக்கும் பெரிய வலைப்பின்னல் கடலுக்கு அப்பாலிருந்து இயக்கப்படும். 2-ம் கட்ட விமான நிலையங்கள், ஆளரவமற்ற கடற்கரைகள் வாயிலாகத் தத்தளிப்பில் இருந்த கடத்தல் போக்குவரத்தும் அண்மைக்காலமாக கன்டெய்னர்களில் நேரடியாகத் துறைமுகங்களை அடைகிறது.

அண்மையில் ஆப்கனிலிருந்து ஈரான் மார்க்கமாக விசாகப்பட்டினத்துக்கு அனுப்பப்பட்ட சரக்குகள், திடீரென குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்துக்குத் திருப்பப்பட்டன. நவீன ஸ்கேனர்களால் கண்டறிய முடியாத அளவுக்கு முகப்பவுடருக்கான மூலப்பொருளின் மத்தியில் ஹெராயின் பாக்கெட்டுகள் ஒளித்துவைக்கப்பட்டிருந்தன. இந்த சம்பவத்துக்குப் பின்னர் முந்த்ரா துறைமுகத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அதானி குழுமம், ஆப்கன், பாகிஸ்தான், ஈரான் சரக்குகளுக்கு இங்கே அனுமதி இல்லை என அறிவித்துவிட்டது. ஆனால், இந்திய எல்லைக்குள் ஊடுருவும் போதைப்பொருளில் 2.5 சதவீதம் மட்டுமே பிடிபடுகின்றன என்ற என்சிபி கணக்கோடு ஒப்பிடுகையில், முந்த்ராவில் சிக்கிய சுமார் 3 டன் ஹெராயின் சிறு துளி மட்டுமே.

போதைப்பொருட்களுக்கு மருத்துவ உபயோகமும் உண்டு

சட்டபூர்வ அனுமதி சாத்தியமா?

போதைப்பொருள் பட்டியலில் இடம்பெறும் பெரும்பாலான வஸ்துகளுக்கு மருத்துவ அடிப்படையிலான பாஸிடிவ் பக்கமும் உண்டு. ஓப்பியத்திலிருந்து உருவாகும் ஹெராயினுடன் பகுதிப் பொருளாக கிடைக்கும் மார்ஃபின் மிகச்சிறந்த வலி நிவாரணியாகப் பயனாகிறது. முற்றிய புற்றுநோயின் பிடியில் தவிப்போர் பொறுக்கமுடியாத வலியைச் சகித்துக்கொள்ள அவர்கள் மரணிக்கும்வரை மார்ஃபின் எடுத்துக்கொள்ள சட்டப்படியான அனுமதி உண்டு. இதுபோன்று இருநூறுக்கும் மேலான மருந்துப்பொருள் உபயோகத்திலும், ஹெராயினின் உடன்பிறப்பான பகுதிப்பொருட்கள் பயனாகின்றன. ஹெராயினுக்கு அடிமையானவர்கள் அவை கிடைக்காதபோது, சட்டத்துக்குப் புறம்பாக இந்த மருந்துப்பொருட்களை நாடுவதும் உண்டு.

அதேபோல வழக்கில் கஞ்சாவாக அறியப்படும் போதை ரகத்திலிருந்து, பவுடர் முதல் எண்ணெய் வரை பிரித்தெடுத்து உற்சாகமூட்டிகளாகப் பயன்படுத்தும் நாடுகள் அதிகம். இவற்றுக்கு அங்கு சட்டபூர்வமான அனுமதியும் உண்டு. அந்த வரிசையில் இந்தியாவிலும் போதைப்பொருள் சந்தை என்பதை அரசே கையகப்படுத்தி, போதைப்பொருட்களின் வீரியத்தை மட்டுப்படுத்தி, மருந்து முதல் போதை அடிமை மீட்புவரை பயன்பாட்டில் அனுமதிப்பது குறித்த விவாதங்கள் அவ்வப்போது எழுந்து அடங்குவது உண்டு. மது விநியோகத்தின் மோசமான முன்னுதாரணங்கள் சமகாலத்தில் இருப்பினும், போதைப்பொருள் ஒழிப்பின் நடைமுறைச் சிக்கல்களை எதிர்கொள்ள இப்படிச் சகலத்தையும் ஆராய வேண்டியிருக்கிறது.

முதலாம் அபினிப் போர் -சித்தரிப்பு படம்

மாறும் போர்க்களம்; தொடரும் போர்கள்

கிழக்கிந்திய கம்பெனி காலத்தில் இந்தியாவுக்கு வெளியே கொள்முதல் செய்வதோடு, வங்காள விவசாயிகளை வற்புறுத்தி பிரிட்டிஷார் ஓப்பியம் விளைவிக்கச் செய்வார்கள். அவற்றை ஒட்டுமொத்தமாகச் சீன இறக்குமதிக்கு ஆளாக்குவார்கள். மக்கள் போதைக்கு அடிமையாவதைப் பார்த்து சகிக்காத சீன மன்னர், பிரிட்டனின் அத்துமீறலுக்கு ஆட்சேபம் தெரிவித்தார். இதை முன்னிட்டே 19-ம் நூற்றாண்டின் மத்தியில் அபினிப் போர்கள் மூண்டன.

காலம் மாறியதில் வரலாறும் மாறியிருக்கிறது. நாட்டுக்குள் திணிக்கப்படும் போதை சந்தைக்கு எதிராகப் போர்க்கால நடவடிக்கையாய் செயல்பட வேண்டிய கட்டாயத்துக்குச் சுதந்திர இந்தியா ஆளாகி இருக்கிறது. மக்கள் மத்தியிலான அதிகரிக்கும் விழிப்புணர்வும், இளைய வயதினரின் வளர்ப்பில் போதிய அக்கறை காட்டுவதும் இந்தப் போர்க்கள செயல்பாடுகளில் அடங்கும்.

x