மக்கள் பிரச்சினைகளை பேசும் நாடாளுமன்ற எம்பி-க்களின் நிலைக்குழுக்கள் கடந்த செப்டம்பர் 12-ல் காலாவதியாகின. ஒவ்வொரு வருடமும் உடனடியாக அமைக்கப்படும் இப் புதிய குழுக்களுக்கான அறிவிப்பு இந்தமுறை தாமதமாகவே வெளியாகி உள்ளன.
நாடாளுமன்ற மாநிலங்களவை, மக்களவையின் அனைத்து எம்பி-க்களுக்கும் மக்கள் பிரச்சினைகளை எழுப்பும் வாய்ப்புகள் கிடைப்பதில்லை. இதனால் பலருக்கும் மக்கள் பிரச்சினைகளை தாங்களும் பேசமுடியவில்லையே என்ற ஆதங்கம் இருந்தது. 1990-ம் ஆண்டிற்கு பின் இந்தப் பிரச்சினை இன்னும் அதிகமானது. இதைச் சமாளிக்கும் பொருட்டு 1993-ல் மக்களவை சபாநாயகராக இருந்த சிவராஜ் பாட்டீல் யோசனைப்படி எம்பி-க்களைக் கொண்ட நிலைக்குழுக்கள் உருவாக்கப்பட்டன.
இந்தக் குழுக்களில் ஆளும் கட்சி மட்டுமல்லாது அனைத்துக் கட்சி எம்பி-க்களுக்கும் பிரநிதித்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. பாராளுமன்ற நிலைக்குழுக்களானது ஆண்டு தோறும் திருத்தி அமைக்கப்படும். அந்த வகையில் கடந்த ஆண்டு அமைக்கப்பட்ட நிலைக்குழுக்களின் காலம் 28 நாட்களுக்கு முன்பு காலாவதியாகின.
இந்த நிலையில், திருத்தி அமைக்கப்பட்ட நாடாளுமன்ற நிலைக்குழுக்கள் பற்றிய விவரம் தற்போது வெளியாகி உள்ளது. நேற்று வெளியான இதற்கான அறிவிப்பில், செப்டம்பர் 13-ம் தேதியிலிருந்து பாராளுமன்ற நிலைக்குழுக்கள் திருத்தி அமைக்கப்பட்டுள்ளதாக முன் தேதியிட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நிலைக்குழுக்கள் குறித்த அறிவிப்பு தாமதமாக வெளியிடப்பட்டதன் பின்னணியில் பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன.
இது குறித்து நாடாளுமன்ற விவகாரங்களைக் கவனிக்கும் உயர் அதிகாரிகள் தரப்பிலிருந்து ‘காமதேனு’ இணையத்திடம் பேசியவர்கள், “நாடாளுமன்றக் கூட்டங்களை நடத்தவிடாமல் முடக்கும் எம்பி-க்களுக்கு நிலைக்குழுக்கள் மட்டும் எதற்கு என மத்திய அரசிடம் ஒருவிதமான வெறுப்பு உருவாகிவிட்டது. இதன் காரணமாகவே நிலைக்குழுக்களை திருத்தி அமைப்பதிலும் அதற்கான அறிவிப்பை வெளியிடுவதிலும் அதிக அக்கறை எடுத்துக்கொள்ளவில்லை மத்திய அரசு” என்றனர்.
நிலைக்குழுக்களில் அங்கம் வகிக்கும் எம்பி-க்கள் எழுப்பும் பிரச்சினைகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் இருக்கிறது. எந்த அதிகாரியையும் நிலைக்குழுவின் முன்பாக ஆஜராக வைத்து கேள்வி எழுப்பலாம். துறை சார்ந்த திட்டங்களையும் யோசனைகளையும் அக்குழுவில் இருக்கும் எம்பி-க்கள் முன்வைக்கலாம். இந்தத் திட்டங்களை தமது தொகுதியில் ஏன் செயல்படுத்தவில்லை என்று கேள்வி எழுப்பவும் இந்த எம்பி-க்களுக்கு அதிகாரம் இருக்கிறது. ஆனால், இதுபோன்ற வாய்ப்புகளை எல்லாம் சரியாகப் புரிந்து கொள்ளாமல், தமிழகம் உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்களைச் சேர்ந்த எம்பி-க்கள் இக்குழுக்களில் பெயரளவிற்கே உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.
இது குறித்தும் பேசிய நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அதிகாரிகள், “பெரும்பாலும் பாராளுமன்ற நிலைக்குழுக்களில் இந்தி அல்லது ஆங்கிலத்திலேயே உரையாடல்கள் நடைபெறுவதால் மொழிப் பிரச்சினையில் இருக்கும் எம்பி-க்கள் இந்தக் கூட்டங்களில் கலந்துகொள்வதை தவிர்த்து விடுகிறார்கள். இப்படியான சிக்கலில் இருப்பவர்களுக்கு மொழிபெயர்ப் பாளர்கள் உதவி செய்வார்கள். ஆனால், பெரும்பாலான எம்பி-க்கள் இந்த வசதியையும் பயன்படுத்திக்கொள்வதில்லை. இன்னொரு விஷயம் என்னவெனில், நிலைக்குழு கூட்டங்களில் பங்கெடுக்கும் எம்பி-க்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் அலவன்ஸ் உள்பட சில சலுகைகள் முன்பு வழங்கப்பட்டு வந்தது. கடந்த 2018-ம் ஆண்டிலிருந்து இந்த சலுகைகளை ரத்து செய்துவிட்டார் பிரதமர் மோடி. நிலைக்குழு கூட்டங்களுக்கு அதன் எம்பி-க்கள் ஆர்வம் காட்டாமல் போனதற்கு இதுவும் ஒரு காரணம்.
கடந்தமுறை திமுக உள்ளிட்ட சில முக்கிய கட்சிகளின் மூத்த எம்பி-க்கள், கரோனா பரவலைக் காரணம். காட்டி நிலைக் குழுக் கூட்டங்களைத் தவிர்த்ததும் குறிப்பிடத் தக்கது” என்றனர்.
நிலைக்குழுக்கள் விவரம்
அனைத்து துறைகளுக்குமாக மக்களவைக்கு 16, மாநிலங்களவைக்கு 8 என மொத்தம் 24 நிலைக்குழுக்கள் உள்ளன. ஒவ்வொரு குழுவிலும் தலா 31 எம்பி-க்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். மக்களவைக்கான நிலைக்குழுவில் மக்களவையின் 21 எம்பி-க்களும், மாநிலங்களவையின் 10 எம்பி-க்களும் இடம் பெறுவார்கள். அதேபோல், மாநிலங்களவைக்கான நிலைக் குழுவில் மாநிலங்களவை எம்பி-க்கள் 21 பேரும் மக்களவை எம்பி-க்கள் 10 பேரும் இடம்பெறுவார்கள். எதிர்க்கட்சி எம்பி-க்களின் எண்ணிக்கையைப் பொறுத்து அவர்களுக்கும் நிலைக்குழுவின் தலைவர் பதவிகள் கிடைக்கும்.
மீண்டும் குழுத் தலைவராக கனிமொழி
பெட்ரோலியம் மற்றும் உரத்துறைக்கான நிலைக் குழுவின் தலைவராக இருந்த திமுகவின் எம்பி-யான கனிமொழி மீண்டும் அதே பொறுப்பில் அமர்த்தப்பட்டிருக்கிறார். இதேபோல் தமிழகம் உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்களங்களைச் சேர்ந்த எம்பி-க்களுக்கு கடந்தமுறை இருந்த துறைகளுக்கான நிலைக் குழுவிலேயே இந்த முறையும் தொடர அனுமதிக்கப் பட்டிருக்கிறார்கள்.