மீட்சியடையும் பொருளாதாரம்: ரிசர்வ் வங்கி கணிப்பு பலிக்குமா?


இந்தியப் பொருளாதாரம் குறித்து அக்கறை கொண்டவர்களுக்கோர் ஆறுதல் செய்தி! நிதியாண்டு 2022-ல். இந்தியாவின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சி 9.5 சதவீதமாக இருக்கும் என்று இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கிறது. சில்லறைப் பணவீக்கம் 5.7 சதவீதமாக இருக்கும் என்று முன்னர் கணித்திருந்த ரிசர்வ் வங்கி, அது 5.3 சதவீதமாக இருக்கும் என்று தற்போது கணித்திருக்கிறது.

சொன்னது நடந்தது

ரிசர்வ் வங்கியின் பணக் கொள்கை வகுப்புக்குழு (எம்.பி.சி.) கூட்டம் வெள்ளிக்கிழமை (அக்.8) நடந்தது. வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி தரும் பணத்துக்கும், வங்கிகள் ரிசர்வ் வங்கியில் முதலீடு செய்யும் உபரித் தொகைக்குமான (ரெபோ 4 சதவீதம் – ரிவர்ஸ் ரெபோ 3.35 சதவீதம்) வட்டி வீதங்களை மாற்றாமல் அப்படியே தொடருவது என்றும் பணக் கொள்கை வகுப்புக் குழு முடிவு செய்தது. இவற்றை ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் அறிவித்தார்.

நுகர்வோர் விலை குறியீட்டெண் ஜூலை – ஆகஸ்ட் மாதங்களில் தணிந்து, தாங்கும் வரம்புகளுக்குள் சென்றது. உணவுப் பொருட்கள், பழங்கள், காய்கறிகளின் விலையும் சற்றே குறைந்தது. கடந்த மே மாதம் இவற்றின் விலை அதிகரித்தது. அப்போது பணவீக்க விகிதம் கட்டுக்கடங்காமல் போய்விடுமோ என்ற அச்சம் பலருக்கும் ஏற்பட்டது. ஆனால், இது பருவகாலத்தையொட்டிய விலையேற்றம் என்றும், புதிய விளைச்சல்கள் சந்தைக்கு வரத் தொடங்கியதும் விலைவாசி குறையும் என்றும் ரிசர்வ் வங்கி கூறியது. அது அப்படியே நடந்திருக்கிறது.

செப்டம்பர் மாதத்தில் நாட்டின் பல பகுதிகளில் பருவமழை வழக்கமான அளவுக்கு, எதிர்பார்த்ததைப் போலப் பெய்தது. இதனால், காரிஃப் பருவ உணவு தானிய விளைச்சல் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போதுமே அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவு தானியங்கள் போதிய அளவில் கையிருப்பில் உள்ளன. காய்கறிகளின் விலையும் குறைவாகவே இருக்கின்றது.

விலைவாசி நிலவரம்

பெருந்தொற்றுக்கால முழு ஊரடங்கு பெருமளவு தளர்த்திக்கொள்ளப்பட்டாலும், இன்னமும் பெரும்பாலானவர்கள் வீடுகளிலேயே இருக்கின்றனர். ஓரளவுக்குத்தான் சுற்றுலா, ஹோட்டல் துறைகளில் மக்கள் வரத் தொடங்கியுள்ளனர். எனவே காய்கறி, பழங்கள் ஆகியவற்றின் நுகர்வு அதிகரித்துவிடவில்லை. இதனாலேயே விலைவாசி கட்டுக்குள் இருக்கிறது.

அதேவேளையில் சர்வதேசச் சந்தையில் கச்சா பெட்ரோலியத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. செமி கண்டக்டர் உள்ளிட்டவற்றுக்குத் தேவை அதிகரித்தாலும் அவற்றின் உற்பத்தியைக் குறுகிய காலத்துக்குள் அதிகப்படுத்த முடியாமல் இருக்கிறது. உலக அளவில் வர்த்தகம் முழுவீச்சில் இயல்பு நிலைக்கு இன்னமும் வர பல மாதங்களாகும். எனவே, பண்டங்களுக்குத் தேவை இருந்தாலும் கொண்டுவருவதில் நிறைய இடர்கள் இருக்கின்றன. சரக்குகளை ஏற்றி அனுப்ப சரக்குப் பெட்டகங்களுக்கும் சரக்குக் கப்பல்களுக்கும் தேவை அதிகமாக இருக்கிறது. இதனால் அவற்றின் விலை, வாடகை ஆகியவை அதிகமாக இருக்கின்றன. இவையும் பணவீக்க வீதத்தில் (விலைவாசி உயர்வு) எதிரொலிக்கிறது.

தொழில் துறையில் பல சாதனங்களுக்குத் தட்டுப்பாடு நிலவுகிறது. சிமென்ட் தொழிலில், இடு பொருட்களுக்குத் தேவை அதிகரித்ததாலேயே விலை அதிகரித்து, உற்பத்திச் செலவும் கூடியிருக்கிறது. இது, இப்போது சிமென்ட் விற்பனை விலையிலும் தெரிகிறது.

பெட்ரோல் வரி குறைய வேண்டும்

எல்லாத் துறைகளிலும் நிலைமை மேம்பட்டிருந்தாலும் ஒட்டுமொத்த உற்பத்தியில் தொய்வு தொடர்கிறது. பெருந்தொற்று ஏற்பட்டதற்கு முன்பிருந்த அளவுக்கு உற்பத்தி உயர்ந்துவிடவில்லை. எல்லாத் துறைகளிலும் மீட்சி ஒரே அளவாக இல்லை. அரசு எந்தெந்தத் துறைகளாகப் பார்த்துப் பார்த்துச் சலுகைகளையும் ஊக்குவிப்புகளையும் வழங்குகிறதோ அந்தத் துறைகளும், வெளிநாடுகளுக்குத் தேவைப்படும் பொருட்களைத் தயாரிக்கும் துறைகளும்தான் மீண்டு வருகின்றன. பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்கள் மீது விதிக்கப்படும் வரியைக் கணிசமாகக் குறைத்தால்தான், பல்வேறு துறைகளிலும் உற்பத்திச் செலவும் குறைந்து, நுகர்வும் அதிகமாகும் என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கருதுகிறார்.

2021-22-ல் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சி வீதம் 9.5 சதவீதமாக இருக்கும் என்று பணக் கொள்கை வகுப்புக் குழு (எம்பிசி) கருதுகிறது. ஒட்டுமொத்தத் தொழில் துறை தேவையில், கணிசமான அளவு மீட்சி ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது. நுகர்வோர்களுக்கும் தன்னம்பிக்கை அதிகரித்து பல்வேறு துறைகளிலும் வாங்கத் தொடங்கியுள்ளனர். இதுவரை பொருட்களை வாங்காமல் ஒத்திப்போட்டவர்களும், பண்டிகைக்காக வாங்குபவர்களும் சந்தைக்கு வரும்போது நிதியாண்டின் 2-வது பாதியில் நுகர்வு அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு வலுவாக இருக்கிறது.

2021-22 நிதியாண்டில், காரிஃப் பருவ விளைச்சல் சாதனை அளவாக இருக்கும் என்று வேளாண் துறை வட்டாரங்கள் தெரிவிப்பதால் கிராமப்புறங்களிலும் நுகர்வும், தேவையும் கடந்த ஆண்டைவிட அதிகமாகவே இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. மத்திய, மாநில அரசுகளுமே மூலதனச் செலவுகளை அதிகப்படுத்திவருகின்றன. இது புதிய சொத்துகளை உருவாக்குவதுடன் நுகர்வையும் மக்களிடையே பணப்புழக்கத்தையும் அதிகப்படுத்த வல்லவை. அத்துடன் வேலைவாய்ப்புகளும் நேரடியாகவும் சார்புத் துறைகளிலும் அதிகரிக்கும். சேவைத் துறையும் மீட்சி பெற்றுவருகிறது.

பெருந்தொற்று தொடங்கிய பிறகு உற்பத்தி, வேலைவாய்ப்பு, நுகர்வு ஆகியவற்றை ஊக்குவிக்க ரிசர்வ் வங்கி நூற்றுக்கும் மேற்பட்ட நடவடிக்கைகளை எடுத்தது. இதற்கும் முன்னர் வகுத்திருந்த விதிகள், நடைமுறைகளை மீறக்கூடாது என்று எண்ணாமல், சந்தையின் தேவைக்கும் மக்களுடைய தேவைக்கும் ஏற்ப தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தொழில், வர்த்தகத் துறையினரின் நிதித் தேவையை நிறைவேற்ற வங்கிகளிடம் போதிய அளவில் பணம் இருப்பதை ரிசர்வ் வங்கி உறுதி செய்தது.

இப்போது பெரிய அளவில் கடன் கேட்போர் இல்லை. வங்கிகளும் கடன் தருவதில் தயக்கம் காட்டுகின்றன. இதனால் வங்கிகளிடம் உபரியாகவே ரொக்கம் தங்கியிருக்கிறது. சிலர் இதை ஊக வியாபாரத்துக்குப் பயன்படுத்த நினைக்கின்றனர். எனவே, கூடுதலாக உள்ள கையிருப்புப் பணத்தை முறையான துறைகளுக்குத் திருப்பிவிட ரிசர்வ் வங்கி சிந்தித்து வருகிறது. வழக்கமான தேவைக்கும் மேல் ரூ.13 லட்சம் கோடி ரொக்கம் தேக்கமடைந்திருக்கிறது. அரசின் கடன் பத்திரங்களை வங்கிகள் வாங்கிக்கொள்ள அனுமதித்த நடைமுறையை நிறுத்தவும் ரிசர்வ் வங்கி முடிவு செய்திருக்கிறது.

பெருந்தொற்று ஏற்படுத்திய பாதிப்புகளிலிருந்து பொருளாதாரம் மீண்டுவருகிறது. உறுதியான கரையை நோக்கி படகு வந்துகொண்டிருப்பதால், அதை அநாவசியமாக ஆட்டி அலைக்கழித்து சேதப்படுத்த விரும்பவில்லை என்று உவமானத்தோடு சொல்லியிருக்கிறார் தாஸ். எனவே, தேவைப்படுவோருக்கும் பணம் கிடைக்க வேண்டும், அந்தப் பணமும் நல்ல வகையில் செலவிடப்பட வேண்டும் என்ற நோக்கில், அடுத்தகட்ட அறிவிப்புகள் இருக்கும் என்பதைக் குறிப்பாகத் தெரிவித்திருக்கிறார்.

நல்லது நடக்கட்டும்!

x