மீண்டும் சீண்டும் சீனா


லடாக் அருகே நடப்புக் கட்டுப்பாட்டுக் கோடு (Line of Actual Control- LAC) பகுதியில் குவிந்திருந்த சீன ராணுவத்தினர்... (2021 பிப்ரவரி 26-ல் இந்திய ராணுவம் வெளியிட்ட புகைப்படம்)

லடாக் எல்லையில் மீண்டும் அசாதாரணமான சூழல் உருவாகியிருக்கிறது. கிழக்கு லடாக்கில் தன்னுடைய கட்டுப்பாட்டு எல்லைக்கோடு அருகில் தொடர்ந்து துருப்புகளைக் குவித்துவரும் சீனா, போருக்குத் தேவையான தளவாடங்கள், ஆயுதங்கள், கருவிகளை முன்னரங்கக் களத்தில் வெவ்வேறு உயரங்களில் குவித்துக்கொண்டிருக்கிறது. இதை வெளியுறவுத் துறை அமைச்சக வட்டாரங்களும் விமானப் படைத் தலைமைத் தளபதி வி.ஆர். சௌத்ரியும் இன்று (அக்.5) தெரிவித்துள்ளனர்.

சீனாவின் சீண்டும் போக்கும், ஏற்கெனவே நிலவிவரும் எல்லைப்புற அடையாளங்களை ஒருதலைப்பட்சமாக மாற்றிவிட அந்நாடு எடுக்கும் நடவடிக்கைகளும்தான், சமீப காலங்களில் கிழக்கு லடாக்கில் இரு நாட்டுப் படையினருக்கும் இடையில் மோதல்களை உருவாக்கியது என்று குறிப்பிட்டிருக்கும் வெளியுறவுத் துறை அமைச்சகம், சீனாவின் நகர்வுகளுக்கு ஏற்ப இந்தியாவும் ஆங்காங்கே சரிசமமாக துருப்புகளையும் ஆயுதங்களையும் தளவாடங்களையும் நிறுத்த வேண்டியிருக்கிறது என்றும் சுட்டிக்காட்டியிருக்கிறது.

தொடரும் அத்துமீறல்

செப்டம்பர் மாதம் 30-ம் தேதி, உத்தராகண்ட் மாநில எல்லைக்கு அருகில் பாராஹோட்டி பகுதியில் இந்தியாவின் கட்டுப்பாட்டு எல்லைக்கோட்டைத் தாண்டி சீன மக்கள் விடுதலை சேனை (பிஎல்ஏ) அமைப்பைச் சேர்ந்த நூறு வீரர்கள் இந்திய எல்லைக்குள் வந்தனர். அங்கே சில மணிநேரம் இருந்துவிட்டுப் பிறகு எங்கிருந்து வந்தனரோ அந்த இடத்துக்குத் திரும்பிவிட்டனர். இந்த எல்லைப் பகுதியில் இந்திய – திபெத் எல்லைப்படை போலீஸார்தான் காவல் காக்கின்றனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் விதத்தில், இந்தியப் படையினர் அந்தப் பகுதியில் ரோந்துக் காவல் பணியை உடனே தொடங்கினர். எனினும், சீனாவின் இந்த அத்துமீறல் குறித்து அதிகாரபூர்வமாக இந்திய அரசு இதுவரை எதையும் கூறவில்லை.

பதற்றத்தை அதிகப்படுத்தும் இரண்டு முக்கிய இடங்களிலிருந்து இரு நாட்டுத் துருப்புகளும் முன்னர் விலக்கிக்கொள்ளப்பட்டாலும், இரு நாட்டுப் படைகளும் இன்னும் முறைத்துக்கொண்டேதான் இருக்கின்றன. கட்டுப்பாட்டு எல்லைக்கோடு எதுவரையில் செல்கிறது என்ற கண்ணோட்டத்திலேயே இரு நாடுகளுக்கு இடையிலும் கருத்து வேறுபாடுகள் நிலவுவதால், சில வேளைகளில் இரு நாட்டு ராணுவ வீரர்களும் இப்படி எல்லைதாண்டிச் சென்றுவிடுவது உண்டு. ஆனால் ஒரே சமயத்தில் நூறு பேர் வந்ததால், இது திட்டமிட்ட நடவடிக்கை என்பது தெளிவாகியிருக்கிறது.

எல்லைக்கு அருகில் இரு நாடுகளும் சாலைகளையும் தகவல் தொடர்பு வசதிகளையும் வலுப்படுத்தி வருகின்றன. ஆங்காங்கே விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. எல்லைக்கு அருகில் நல்ல தரமான சாலைகள், பாலங்கள், வாராவதிகள் கட்டப்பட்டு வருகின்றன. உணவு, ஆயுதம், வெடிமருந்துகள், கருவிகள் ஆகியவற்றைச் சாலை வழியாக லாரிகளில் கொண்டு செல்ல சாலைகள் ஆழமாகவும் பலமாகவும் அமைக்கப்படுகின்றன. இரு நாடுகளுக்கும் இடையிலான 3,500 கிலோ மீட்டர் நில எல்லை முழுவதையும் இந்தியத் துருப்புகள் விழிப்புடன் கண்காணித்து வருகின்றனர்.

பாங்காங் ஏரிப் பகுதியில் தாக்குதல்

ஏற்கெனவே லடாக்கில் உள்ள பாங்காங் ஏரிப் பகுதியில் கடந்த மே 5-ல் இரு நாட்டுத் துருப்புகளும் ஆக்ரோஷமான கை கலப்பில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இரு நாடுகளின் எல்லைப்புற ஒப்பந்தப்படி வெறுங்கைகளோடு சென்ற இந்திய வீரர்களை, சீன ராணுவம் கூரான ஆணிகள் பொருத்திய தடிகளால் பலமாக அடித்து காயப்படுத்தியது. ஆயுதம் இல்லாவிட்டாலும்கூட இந்தியத் துருப்புகள் அவர்களை இடித்துத் தள்ளியே எல்லையிலிருந்து விரட்டிவிட்டனர். அதற்குப் பிறகு இரு நாடுகளும் ஆயிரக்கணக்கில் துருப்புகளைக் கொண்டுவந்து குவித்தன. ஜீப்புகள், லாரிகள் மூலம் துருப்புகளும் ஆயுதங்களும் தளவாடங்களும் இறக்கப்பட்டன. ரேடார்கள் நிறுவப்பட்டன. கவச வாகனங்களும் டாங்குகளும் குவிக்கப்பட்டன. விமானப்படை போர் விமானங்களையும் சரக்கு விமானங்களையும் ஹெலிகாப்டர்களையும் கொண்டு சென்றன. டிரோன்கள் மூலமும் செயற்கைக்கோள் உதவியுடனும் நம்முடைய எல்லைக்கு அருகில் சீனா செய்துள்ள ராணுவ ஏற்பாடுகள் கண்காணிக்கப்பட்டன.

நிலைமை மோசமான நிலையில், இரு தரப்பு ராணுவமும் வெளியுறவுத் துறையும் அதிகாரிகள் மூலம் பல சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தின. ஒருவழியாக, கடந்த ஆகஸ்ட் மாதம் கோக்ரா பகுதியிலிருந்து இரு நாடுகளும் அனைத்துத் துருப்புகளையும் விலக்கிக்கொண்டன. அதற்கும் முன்னால் கடந்த பிப்ரவரி மாதமே பாங்காங் ஏரிக்கு வடக்கு, தெற்குக் கரைகளிலிருந்து துருப்புகளை இரு நாடுகளும் விலக்கின. இப்போதும் இரு நாடுகளும் கட்டுப்பாட்டு எல்லைக்கோட்டுக்கு அருகில் 50,000 முதல் 60,000 வரையில் துருப்புகளைக் குவித்துள்ளன.

தைவானுக்கு அச்சுறுத்தல்

இந்திய எல்லையில் மட்டுமில்லை, சென் சீனக் கடலிலும் தன்னுடைய ஆதிபத்தியத்தை நிலைநாட்டும் செயலில் இறங்கியுள்ள சீனா, தைவானை தன்னுடைய நாட்டின் ஒரு பகுதி என்று தொடர்ந்து கூறிவருகிறது. இந்நிலையில் தைவான் வான் எல்லைக்குள், குறிப்பாகத் தலைநகரம் தைபே மீது அக்டோபர் 1 முதல் 4-ம் தேதிவரை மட்டும் 149 முறை தன்னுடைய பல்வேறு வகை போர் விமானங்களைப் பறக்கச்செய்து அச்சுறுத்தியிருக்கிறது. சண்டை விமானம், குண்டுவீசும் விமானம், அணு ஆயுதங்களைத் தாங்கிச் செல்லும் விமானங்கள், ஏவுகணைகள் பொருத்திய விமானங்கள் என்று அனைத்து ரக விமானங்களும் தைவான் வான் எல்லைக்குள் நுழைந்து பறந்துசென்று மிரட்டல் விடுத்திருக்கின்றன.

‘நாங்கள் நினைத்தால் தைவானை எப்போது வேண்டுமானாலும் எங்கள் வசம் எடுத்துக்கொண்டுவிடுவோம்’ என சீனா விடுக்கும் நேரடியான மிரட்டல் இது. குறிப்பாக இவ்விஷயத்தில் தலையிடக் கூடாது என அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியாவை எச்சரிக்கும் விதத்தில் சீனா இப்படிச் செயல்பட்டுள்ளது. தைவானுக்கும் ஜப்பானை அடுத்துள்ள ஓக்கினாவா கடற்கரைக்கும் இடையில் அமெரிக்க, ஜப்பானிய, ஆஸ்திரேலிய, நியூசிலாந்து, கனடா நாடுகளின் போர்க் கப்பல்கள் கூட்டு ஒத்திகையைச் சில நாள்களுக்கு முன்னால் மேற்கொண்டன. தென் சீனக் கடலில் தனக்கு மட்டும்தான் உரிமை என்று சீனா செயல்பட்டால் தாக்குவோம் இதன் மூலம் அந்நாடுகள் சீனாவுக்கு உணர்த்தியிருந்தனர். அதில் யுஎஸ்எஸ் ரொனால்டு ரீகன், யுஎஸ்எஸ் கார்ல்வின்சன், எச்எம்எஸ் எலிசபெத் போன்ற பிரம்மாண்ட போர்க்கப்பல்கள் இருந்தன. இது சீனாவுக்கு ஆத்திரத்தை அதிகப்படுத்தியிருக்கிறது. சீனாவின் இந்த அத்துமீறல் தைவானை எச்சரிப்பதுடன் சொந்த நாட்டு மக்கள் முன் வீராப்பைக் காட்டுவதற்காகவும் என்று சர்வதேசப் பார்வையாளர்கள் கருதுகின்றனர். அதே வேகத்தில் இந்தியா மீதும் சீனா தனது அச்சுறுத்தலைத் தொடங்கியிருப்பதாகக் கருதப்படுகிறது.

இந்தியா தயார்

இந்திய விமானப் படையின் தலைமைத் தளபதி வி.ஆர். சௌத்ரி, தரைப்படைத் தலைமைத் தளபதி மனோஜ் முகுந்த் நரவானே ஆகியோரும்கூட சீனாவின் புதிய படைகுவிப்பு முயற்சிகளைச் சுட்டிக்காட்டி, தாங்களும் தயார் நிலையில் இருப்பதாகவே தெரிவித்துள்ளனர்.

இந்திய - பசிபிக் கடல் பகுதியில், தான் இன்னமும் செல்வாக்குடனேயே இருப்பதை நிரூபித்தாக வேண்டிய கட்டாயம் அமெரிக்காவுக்கு இருக்கிறது. கடந்த ஆகஸ்டில் திடீரென்று ஆப்கானிஸ்தானிலிருந்து அனைத்துத் துருப்புகளையும் விலக்கிக்கொண்டு போய்விட்டதால் சர்வதேச அரங்கில் அமெரிக்கா மீதான மதிப்பு குறைந்துவிட்டது. இருந்தாலும் தைவானை சீனா கைப்பற்றிக்கொள்ளும்படி அமெரிக்கா விட்டுவிடாது என்றே பலரும் நினைக்கின்றனர். குவாட் என்று புதிய ராணுவக் கூட்டு தனக்குப் பதிலடி தருவதற்காகத்தான் என்பது சீனாவுக்குப் புரிந்திருக்கிறது.

எல்லையில் பதற்றம் நிலவும்போது எல்லைப் பிரச்சினையை நிரந்தரமாகத் தீர்த்துக்கொள்ள பேச முடியாது என்பதை இந்தியா ஏற்கெனவே தெரிவித்துவிட்டது. சீனாவின் அடுத்தகட்ட நடவடிக்கைகளைப் பொறுத்து எதிர்வினையாற்றுவது என்று இந்தியா உள்ளிட்ட நாடுகள் தீர்மானித்திருக்கின்றன. சீனா எப்படி நடந்துகொள்ளும் என்பதைத்தான் எளிதில் அனுமானிக்க முடியாதே!

x