திசைமாற்றப்படுகிறதா போதை வழக்கின் பாதை? ஷாருக் கான் மகன் கைது எழுப்பும் கேள்விகள்


பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான், போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருக்கிறார். அரபிக் கடலில் மிதந்த சொகுசுக் கப்பல் ஒன்றில்இ போதையில் மிதந்ததாக கைதானவர்களில் ஆர்யனும் அடங்குவார்.

2 வாரம் முன்பாக குஜராத்தை மையமாகக் கொண்ட மிகப்பெரும் போதைப்பொருள் கடத்தல் விவகாரம், உத்தரப் பிரதேசத்தில் அரங்கேறிய விவசாயிகள் படுகொலை என இருவேறு நிகழ்வுகள், இந்த ஆர்யன் கான் போதை வழக்கின் பாதையைத் தீர்மானிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுவதையும் புறக்கணிப்பதற்கில்லை.

அந்த அரபிக் கடலோரம்...

கார்டெலியா என்ற கப்பல் நிறுவனத்துக்குச் சொந்தமானது ‘எம்பிரஸ்’ என்ற புத்தம் புது சொகுசுக் கப்பல். இன்றைக்கு, இந்தியாவின் சொகுசுக் கப்பல்களில் இதுவே முதன்மையானது. பெருந்தன வர்த்தகர்கள், மாடல்கள், பாலிவுட் பிரபலங்கள் என பெரும்பாலும் இளம்வயது பயணிகளை ஏற்றிக்கொண்டு இதன் முதல் உல்லாசப் பயணம் கடந்த சனிக்கிழமை அன்று தொடங்கியது. மும்பையில் கிளம்பி கோவாவில் முடியும் 3 நாள் பயணத்தில், ‘ஃபேஷன் டிவி இந்தியா’வுடன் இணைந்து ஒரு தனியார் நிறுவனம் ‘ரேவ் பார்ட்டி’ பெயரிலான கேளிக்கை நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்திருந்தது. வழக்கமான மும்பை-கோவா பயணக் கட்டணம் 13,500 ரூபாய் மட்டுமே. ஆனால், இந்த உல்லாசப் பயணத்துக்கான டிக்கெட் விலை 82,000 ரூபாயில் தொடங்கி இருக்கிறது.

இந்தப் பயணத்தில் பங்கேற்ற பிரபலங்களில் பாலிவுட் ‘பாஷா’ ஷாருக் கானின் 23 வயது மகன் ஆர்யன் கானும் அடங்குவார். அப்படி நுழைந்த நூற்றுக்கணக்கானோரில், போதைப்பொருள் தடுப்பு பிரிவின்(என்.சி.பி) மும்பை மண்டல இயக்குநர் சமீர் வான்கடே தலைமையிலான 22 அதிகாரிகளும் ஊடுருவியிருந்தனர். மும்பையின் நட்சத்திர விடுதிகள் மற்றும் பண்ணை வீடுகளில் இம்மாதிரி கேளிக்கைகள் புதிதல்ல. சனி மாலையில் தொடங்கி ஞாயிறு விடியவிடிய இந்தக் கேளிக்கைகள் களைகட்டும். கரைபுரண்டோடும் வெளிநாட்டு மதுபானங்களுடன் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்களும் தாராளமாய் புழங்கும் என்பது ஊரறிந்த ரகசியம். ஆனால், என்.சி.பி அதிகாரிகள் சொகுசுக் கப்பலைக் குறிவைத்ததன் பின்னணியில், சமீபத்தில் குஜராத்தைக் கதிகலக்கிய சுமார் 3 டன் ஹெராயின் விவகாரம் இருந்தது.

முந்த்ராவில் கரை தட்டிய ஹெராயின்

குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில், அதானி குழுமத்தின் கட்டுப்பாட்டில் முந்த்ரா துறைமுகம் இயங்கிவருகிறது. இங்கு சந்தேகத்துக்கு இடமான சர்வதேச போதைக் கடத்தல் நடக்க இருப்பதாக, செப்டம்பர் மத்தியில் வருவாய் நுண்ணறிவு இயக்குநரக அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது. அதிரடியில் இறங்கிய அவர்கள், ஆப்கானிஸ்தானிலிருந்து வந்த 2 கன்டெய்னர்களைக் கைப்பற்றினர். அதில் ஒளித்து வைக்கப்பட்டிருந்த சுமார் 2,988 கிலோ ஹெராயின் கைப்பற்றப்பட்டது. இதன் சர்வதேச மதிப்பு ரூ.21 ஆயிரம் கோடி. அந்தப் போதைப்பொருள் அப்படியே இந்திய ஜனத்திரளில் கலந்திருப்பின் சட்டம் - ஒழுங்கு, மனிதவள சேதம் என எண்ணிலடங்கா பாதிப்புகளை அவை ஏற்படுத்தி இருக்கும். எனவே, வழக்கை விசாரித்த குஜராத் போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றமும் தனது கண்டனத்தைக் கடுமையாகப் பதிவுசெய்தது.

ஆப்கனிலிருந்து ஆந்திராவின் விஜயவாடாவுக்கு அனுப்பப்பட்ட இந்தக் கன்டெய்னர்கள், திடீரென வெகுதொலைவிலுள்ள முந்த்ராவுக்குக் கொண்டுவரப்பட்டதை நீதிமன்றம் சந்தேகத்துக்கு உள்ளாக்கியது. அதானி துறைமுக நிர்வாகம் மற்றும் அதிகாரிகளின் ஆதாயம் குறித்து விசாரிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தச் சம்பவம்இ அதானி குழுமத்துக்கு நெருக்கமான ஆளும் பாஜக அரசுக்கு நெருக்கடியானது. உடனடியாக நாடு முழுக்கவுமே போதைப் பொருள் புழக்கம் தீவிரமாகக் கண்காணிக்க உத்தரவானது. அப்படித்தான் எம்பிரஸ் கப்பலுக்குள் மும்பை என்.சி.பி அதிகாரிகள் ஊடுருவினர்.

ஆர்யன் கைது

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மதுக்கடைகள் அடைக்கப்பட்டு நாடே மகாத்மா புகழ் பாடியபோது, ‘எம்பிரஸ்’ கப்பலில் உல்லாசத்தின் பெயரிலான போதை வைபவங்கள் தறிகெட்டிருந்தன. அதன் உச்சமாய், தடை செய்யப்பட்ட போதைப்பொருட்களின் ரகசிய விநியோகம் நள்ளிரவில் தொடங்கியது. காத்திருந்த என்.சி.பி அதிகாரிகள் தங்களுக்குத் தேவையான வீடியோ ஆதாரங்களைத் திரட்டிய பிறகு, அதிகாரபூர்வமான சோதனையை அறிவித்தனர். பல மணி நேரத்துக்கு நீடித்த சோதனையில் போதையில் மிதந்த ஏராளமானோர் விசாரிக்கப்பட்டு, அவர்கள் வசமிருந்த போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன. அந்த வஸ்துக்களுடன் கைது செய்யப்பட்டவர்களும் தனிப்படகு மூலம் மும்பைக்கு அழைத்து வரப்பட்டனர்.

தந்தையுடன் ஆர்யன் கான்...

கைதானவர்களுள் ஒருவராக ஷாருக் கான் மகன் ஆர்யனும் கணக்கில் இருந்தார். மற்றவர்களைப் போலவே மருத்துவப் பரிசோதனைக்குப் பின்னர், விசாரணைக்கு அழைக்கும்போது ஆஜராகுமாறு அறிவுறுத்தி ஆர்யனும் விடுவிக்கப்பட இருந்தார். ஆனால், மதியம் வாக்கில் ஆர்யனும் அவரது 2 நண்பர்களும் மட்டுமே என்.சி.பி காவலில் தொடர்ந்தனர். இது பாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சினிமா பிரபலங்கள் மத்தியிலான போதைப்பொருள் விவகாரம், அவ்வப்போது எழுந்து அடங்குவது வாடிக்கை என்றபோதும் இம்முறை ஷாருக் கானை முன்னிறுத்தி விவகாரம் ஊதப்பட்டதன் பின்னணியில், அன்றைய தினம் (ஞாயிறு) நடந்தேறிய உத்தரப் பிரதேசத்தில் விவசாயிகள் படுகொலைச் சம்பவம் பற்றிய செய்திகளைத் திசைதிருப்பும் நோக்கம் இருப்பதாகக் காங்கிரஸ் கட்சியின் மகாராஷ்டிரத் தலைவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

நிகழ்ச்சி ஒன்றுக்காக, மத்திய இணை அமைச்சர் மிஸ்ராவின் மகன் அசிஷ் மோனு மிஸ்ராவுடன் பயணித்த கார்களில் ஒன்று விவசாயிகள் கூட்டத்தில் பாய்ந்து இருவரை பலிகொண்டதைத் தொடர்ந்து விவசாயிகள் வன்முறையில் இறங்கினர். பாஜக தலைவரின் வாரிசு ஒருவர் விவசாயிகளை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகவும் சொல்லப்படுகிறது. அந்த வகையில் விவசாயிகள் தரப்பில் 4 பேரும், விவசாயிகள் நடத்திய எதிர்தாக்குதலில் பாஜகவினர் 4 பேரும் இறந்துள்ளனர். தற்போது, விவசாயிகள் போராட்டத்தைவிடவும் ஆர்யன் கைது விவகாரம் ஊடகங்களில் அதிகம் விவாதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

பாலிவுட்டும் போதையும்

பாலிவுட்டில் போதைப்பொருள் உபயோகம் என்பது வெகு சாதாரணமானது. சுஷாந்த் சிங் தற்கொலையில் தொடங்கிய வழக்கு, இதுபோன்ற போதை விவகாரத்தால் விஸ்வரூபம் எடுத்தது. அப்போது பாஜக அபிமான நடிகையான கங்கனா ரனாவத், “பாலிவுட்டின் 90 சதவீதத்தினர் தடைசெய்யப்பட்ட போதைப்பொருள் உபயோகிப்பவர்கள்” என குற்றம்சாட்டினார். கூடவே, போதைப்பொருள் நடமாட்டத்துக்கு ஆதரவளித்து ஆதாயம் அடைகிறார்கள் என்று தாக்கரே குடும்பத்தினரைக் கங்கனா குற்றம்சாட்டியது இன்றுவரை புகைந்துகொண்டிருக்கிறது. போதைப்பொருள் விவகாரங்களில், கங்கனா குற்றச்சாட்டில் தொடங்கி இன்றைய ஆர்யன் கைது வரை பாலிவுட் பிரபலங்கள் கள்ள மவுனம் சாதிப்பதன் பின்னணி அத்தனை ஆழமானது.

வாரிசுகளால் வளரும் போதை சாம்ராஜ்யம்

கொகைன், எக்ஸ்டஸி உள்ளிட்ட பல போதை மருந்துகளுக்கான கச்சாப் பொருட்கள் ஆப்கன் மற்றும் கம்போடியாவிலிருந்து பஞ்சாபின் எல்லை மற்றும் குஜராத் துறைமுகங்கள் வாயிலாக இந்தியாவுக்குள் நுழைகின்றன. போதை சாம்ராஜ்யத்தை நடத்துவோர் இவற்றைத் தரம்பிரித்து, தேவையானதை செறிவூட்டி தங்களது விநியோகஸ்தர்களுக்கு அனுப்புகிறார்கள். கஞ்சா, சரஸ் போன்ற போதை வஸ்துகள் ஒப்பீட்டளவில் விலை குறைவானவை என்பதால், போதைக்கு அடிமையான கல்லூரி வயது இளைஞர்கள் மற்றும் யுவதிகளைக் குறிவைத்து அவை விற்கப்படுகின்றன. ஆனால் ஹெராயின், கொகைன், எக்ஸ்டஸி போன்ற விலை உயர்ந்த போதைப் பொருட்களுக்கு அரசியல், அதிகாரம், சினிமா என பணக்கார வீட்டு பிள்ளைகளே வாடிக்கையாளராக இருக்கிறார்கள்.

உரிய விலையை அவர்களால் மட்டுமே கொடுக்க முடியும் என்பது மட்டுமன்றி, போலீஸ் பிரச்சினை வராது என்பதும் முக்கியக் காரணம். அதிலும் பாலியல் கிளர்ச்சியுடன் தொடர்புடையது என்ற அபத்த நம்பிக்கையால் எக்ஸ்டஸிக்கு டிமாண்ட் அதிகம். உடலை வனப்பாகவும், கட்டுக்குலையாமலும் வைத்திருக்க எக்ஸ்டஸி ரகத்தை மாடல் உலக மற்றும் நடிப்புலக யுவதிகள் அதிகம் பயன்படுத்துகின்றனர். இந்த போதைப்பொருள் பரிமாற்றம் மற்றும் உபயோகச் சந்தையாக, ‘ரேவ் பார்ட்டி’ என்ற பெயரிலான கேளிக்கைகள் அவதாரம் எடுத்துள்ளன.

ரேவ் பார்ட்டி ரகசியங்கள்

வழக்கமாய் வார இறுதியில் சனிக்கிழமை மாலைகளில் கூடும் இந்த ரேவ் பார்ட்டிகள், பெருந்தொற்று அலைகள் காரணமாகச் சிதறிப்போயின. பெரிய அளவில் அவை கூடாவிட்டாலும் சிறு குழுக்களாக நடக்க ஆரம்பித்தன. அந்த வகையில் ஆக.14 குவாஹாட்டி பார்ட்டி ஒன்றில், துப்பாக்கி முனையில் 18 பேர் கைதானார்கள். ஜூன் மாதம் நாசிக் பகுதியில் 25 பேர், ஏப்ரலில் கர்நாடகத்தின் ஹசன் பகுதியில் நூற்றுச் சொச்சம் பேர் என கைதுகள் தொடர்ந்தன. இவர்களிடமிருந்து தடைசெய்யப்பட்ட எல்.எஸ்.டி மாத்திரைகள், எக்ஸ்டஸி போதை வஸ்துகள் ஏராளமாய் கைப்பற்றப்பட்டன.

கரோனா முதல் அலையின்போது (2019, மே) கேரளப் பின்னணியில் கோவை ரேவ் பார்ட்டி ஒன்றில் 160 பேர் கைதானார்கள். தற்போதைய ஆர்யன் கைது சம்பவத்திலும் கைப்பற்றப்பட்ட செல்போன் வாட்ஸ்-அப் தகவல் பரிமாற்றங்களை முறையாக விசாரித்தாலே, பெரும் போதை வலைப்பின்னல் சிக்கும். ஆனால், ஆர்யன் விவகாரம் இதர அரசியல் விவகாரங்களை நீர்த்துப்போகச்செய்ய மட்டுமே உபயோகிக்கப்படும் எனில், இந்தியாவின் போதைத் தலைவிதியை இப்போதைக்குத் திருத்த முடியாது!

x