விவசாயிகளின் குரலுக்குச் செவிசாய்க்கட்டும் அரசு


மத்திய அரசின் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்திப் போராடிவந்த விவசாயிகள், தங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி பாரத் பந்த் நடத்தியிருக்கிறார்கள். இப்போதாவது மத்திய அரசு தனது பிடிவாதத்தைத் தளர்த்திக்கொள்ளுமா எனும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. காலம் கனியும் வரை சிலவற்றுக்குக் காத்திருக்கத்தான் வேண்டும். விவசாயிகள் ஆதரவோடு சீர்திருத்தங்களைச் செய்தால்தான் முழுப் பலனும் கிடைக்கும்.

விடை தேடும் கேள்விகள்

நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு கொண்டு வந்துள்ள சர்ச்சைக்குரிய மூன்று வேளாண் சட்டங்களை அடியோடு கைவிட வேண்டும் என்று விவசாயிகள் கோருவது நியாயமா? விவசாயிகளின் நலன்களுக்காகக் கொண்டு வந்துள்ள சட்டங்களைக் கைவிட மாட்டோம் - தேவைப்பட்டால் திருத்தம் மட்டும் செய்கிறோம் என்று மத்திய அரசு சொல்வது சரிதானா? இரண்டு தரப்பும் 11 முறை சந்தித்துப் பேசியும் தீர்வு ஏற்படாமல் போவது ஏன்? அரசு குற்றஞ்சாட்டுவதைப் போல அரசியல் தலையீடும், பெரும் பணக்காரர்களான கமிஷன் ஏஜெண்டுகளின் செல்வாக்கும் மட்டுமே காரணமா? ஓராண்டாகத் தொடர்ந்து விவசாயிகளைப் போராட வைப்பதால் மத்திய அரசுக்குக் கிடைத்துள்ள பலன்தான் என்ன? விவசாயிகளின் நலனுக்காகத்தான் என்றால் அவர்கள் கோரும்படி புதிய சட்டம் இயற்ற தயக்கம் ஏன்? இப்படிப் பல கேள்விகள் எழுகின்றன.

விவசாயிகளின் துயரம்

விவசாயிகளின் இந்தக் கிளர்ச்சிக்கு முன்னால் செய்தித்தாள்களிலும் ஊடகங்களிலும் அன்றாடம் தவறாமல் இடம் பெற்றுவந்த செய்தி, விவசாயிகள் தற்கொலைதான். 1995 முதல் 2015 வரையில் கிட்டத்தட்ட மூன்று லட்சம் பேர் (2,96,438) பயிர்கள் பொய்த்ததாலும் கடன் சுமை காரணமாகவும் மன அழுத்தம் தாங்காமலும் அல்லது ஜப்தி நடவடிக்கைகளால் மன உளைச்சல் அடைந்தும் தற்கொலை செய்துகொண்டார்கள். இந்திய விவசாயம் பல்வேறு பிரச்சினைகளைச் சந்தித்து வருகிறது. தொழில் துறை, வணிகத் துறை போல இதில் அதிக முதலீடுகள் வெளியிலிருந்து வருவதில்லை. நிலங்களை வைத்திருப்பவர்கள் தங்களுடைய வருமானத்திலிருந்தோ சேமிப்பிலிருந்தோதான் செலவு செய்ய நேர்கிறது. விவசாயம் தவிர வேறு தொழிலும் செய்து அதன் மூலம் வருமானம் பெறுகிறவர்களால் ஓரளவு சமாளிக்க முடிகிறது. முழுக்க முழுக்க விவசாயத்தையே நம்பி வாழ்கிறவர்கள் தொடர்ந்து கடனாளியாகிறார்கள்.

இந்தியாவில் நில உச்சவரம்பு சட்டம் என்பது பெயரளவிலாவது அமலில் இருக்கிறது. அத்துடன் நிலமும் பிதுரார்ஜித சொத்து என்பதால் தந்தை இறந்த பிறகு அவருடைய வாரிசுகளுக்கிடையே பகிர்ந்து தரப்படுகிறது. இதனால் லாபகரமாக விவசாயம் செய்ய முடியாதபடி அது துண்டு துண்டாகி வீணாகிறது. அது மட்டுமல்லாமல் விவசாயிகளே தங்களுடைய குடும்பச் செலவுக்காகவும் திருமணம், உயர் கல்வி, நோய்க்கு சிகிச்சை ஆகியவற்றுக்காகவும் நிலங்களைப் பகுதி பகுதியாக விற்பதும் தொடர்கிறது. இந்தக் காரணங்களால் இந்தியாவில் நில உடைமையாளர்களில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கினர் ஒரு ஹெக்டேருக்கும் (சுமார் இரண்டரை ஏக்கர்) குறைவான அளவே நிலம் வைத்திருக்கிறார்கள். இதனால் சிறு, குறு, நடுத்தர நில உடைமையாளர்கள்தான் அதிகம். அந்த நிலங்களிலும் நன்செய் நிலங்களைவிட புன்செய் நிலங்கள்தான் (மானாவாரி) அதிகம். எல்லா நிலங்களுக்கும் எல்லா காலங்களிலும் விவசாயத்துக்குத் தண்ணீர் கிடைப்பது நிச்சயமில்லை. இவை இரண்டும் விவசாயத்தை முடக்கிப் போடவல்ல அடிப்படையான இரண்டு காரணங்கள். அடுத்தவை இடுபொருள் செலவு அதிகரிப்பு, விளைச்சல் பாதிப்பு, சாகுபடி பொய்த்தால் கடன் சுமை அதிகரிப்பு, பூச்சித் தாக்குதல் ஆகியவை.

விவசாயத்துக்கு உதவ குறைந்தபட்சக் கொள்முதல் விலை, ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் மூலம் கொள்முதல், கூட்டுறவு வங்கிகள் மற்றும் அரசுடைமை வங்கிகள் மூலம் விவசாயக் கடன், தங்க நகைகளின் பேரில் கடன், மானிய விலையில் உரம், இலவச விதை, குறைந்த மின்சார கட்டணம் அல்லது விலையில்லாத மின்சாரம் மூலம் தண்ணீர் இறைக்க உதவி என்று அரசு பல வழிகளிலும் உதவுகிறது. ஆனால் அவை போதவில்லை.

இரண்டாவது பசுமைப் புரட்சி

இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது, மத்திய அமைச்சர் சி.சுப்பிரமணியம் நிறைவேற்றிய பசுமைப் புரட்சி திட்டத்தால் இந்தியாவில் அரிசி, கோதுமை, கரும்பு சாகுபடி அதிகரித்து அத்தியாவசிய உணவுப் பொருளுக்காகப் பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்தாக வேண்டிய அவலம் தீர்ந்தது. அதற்குப் பிறகு விவசாயத் துறையில் பெரிய முன்னேற்றம் ஏற்படாததால் இரண்டாவது பசுமைப் புரட்சிக்கு நாடு ஆசைப்பட்டது. “இரண்டாவது பசுமைப் புரட்சி தேவை. நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இந்திய வேளாண் ஆராய்ச்சி அமைப்புகளுக்குப் புத்துயிர் அளிக்க வேண்டும், வேளாண் விரிவாக்கத் திட்டங்கள், விவசாயக் கடன் கட்டமைப்புகள் வலுப்பட வேண்டும். வேளாண் துறையில் வணிகமயத்தை அதிகம் புகுத்தினால் நம்முடைய விவசாயிகளுக்கும் வணிக நோக்கம் சார்ந்த இடுபொருள்கள் அதிகம் தேவைப்படும். அப்படித்தான் நம்முடைய விவசாயத் துறையை நவீனப்படுத்தி விவசாயிகளின் வருவாயைப் பெருக்க முடியும். அதற்குக் கடன் வழங்கும் அமைப்புகளையும் நவீனப்படுத்த வேண்டும்.

இப்போதுள்ள வேளாண்மைச் சந்தைப்படுத்தும் நடைமுறைகள் 1930-ல் அறிமுகம் செய்யப்பட்டவை, கட்டுப்பாடுகள் நிறைந்தவை. எங்கே அதிக விலை கிடைக்கிறதோ அங்கே விவசாயிகளால் விற்க முடியாமல் அவர்களுடைய கைகளைக் கட்டிப்போடுபவை. இந்தச் சிக்கல்களையெல்லாம் நீக்க வேண்டும், இந்தியா முழுக்க ஒரே சந்தையாக மாற வேண்டும்” என்று 2004-ல் அளித்த பேட்டியில் அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் கூறியிருந்தார். 2021 பிப்ரவரி 8-ல் மாநிலங்களவையில் இதை சுட்டிக்காட்டிப் பேசிய பிரதமர் மோடி. “மன்மோகன் இதைப் பற்றிப் பேசியிருக்கலாம் ஆனால் இதை நிறைவேற்றுவது மோடியின் கடமையாகிவிட்டது, அதற்காகப் பெருமைப்படுகிறேன்” என்று கூறினார்.

இரண்டாவது பசுமைப்புரட்சி குறித்து 2015, 2016, 2017 ஆகிய ஆண்டுகளில் தொடர்ச்சியாகப் பேசினார் மோடி. 2017-ல் மாதிரி விவசாயப் பண்ணைச் சட்டங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. அதில் பரிந்துரைத்த சீர்திருத்தங்கள் எதையும் மாநில அரசுகள் மேற்கொள்ளவில்லை. இவற்றை அமல்படுத்துவது குறித்து விவாதிக்க 2019 ஜூலையில் ஏழு முதலமைச்சர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இதையடுத்தே 2020 ஜூனில் மூன்று அவசரச் சட்டங்களை மத்திய அரசு கொண்டுவந்தது. 2020 ஜூன் முதல் வாரத்தில் கொண்டுவரப்பட்ட அந்த அவசரச் சட்டங்கள் விவசாய உற்பத்தி, அவற்றின் விற்பனை, பதுக்கல், ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், ஒப்பந்த பண்ணைய சீர்திருத்தம் தொடர்பானவை. பிறகு இந்த அவசரச் சட்டங்கள், மசோதாக்களாக 2020 செப்டம்பர் 15, 18-ல் மக்களவையில் நிறைவேற்றப்பட்டன. இவையே மாநிலங்களவையில் செப்டம்பர் 20, 22-ல் அறிமுகப்படுத்தப்பட்டு, ‘குரல் வாக்கெடுப்பில் நிறைவேறியதாக’ அறிவிக்கப்பட்டு ஏற்கப்பட்டன. மாநிலங்களவையில் ஆளும் கூட்டணிக்குப் பெரும்பான்மை வலு கிடையாது. குரல் வாக்கெடுப்பு கூடாது என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. எதிர்க்கட்சிகளின் பலத்த எதிர்ப்புக்கிடையே மசோதாக்கள் நிறைவேறியதாக அறிவித்து குடியரசுத் தலைவரின் கையெழுத்துக்கும் அனுப்பப்பட்டன. அவரும் ஒப்புதல் தந்தார். விவசாயமும் வேளாண் சந்தை விவகாரங்களும் மாநில அரசுகளின் அதிகாரப் பட்டியலில் இருக்கும்போது மத்திய அரசு இவற்றின் மீது சட்டமியற்றுவது செல்லுமா என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது.

1. விவசாய விளைச்சல் வர்த்தகம் – விற்பனை (ஊக்குவித்தல், வசதி செய்து தருதல்) சட்டம், 2. பண்ணை சேவைகள் சட்டம் – விலை உத்தரவாதம் தொடர்பாக விவசாயிகள் (அதிகாரமளித்தல் – பாதுகாத்தல்) ஒப்பந்த சட்டம், 3. அத்தியாவசியப் பொருள்கள் (திருத்த) சட்டம் ஆகியவையே அந்த மூன்று சர்ச்சைக்குரிய சட்டங்கள்.

இந்த வேளாண்மைச் சட்டங்களுக்கு சர்வதேச அளவிலேயே ஆதரவாகவும் எதிராகவும் முன்னுதாரணங்களும் உண்டு. கென்யாவில் இப்படிப்பட்ட சட்டம் இயற்றிய பிறகு வேளாண் பொருள்களைக் கொள்முதல் செய்வது எளிதாகி வியாபாரம் பெருகிற்று. ஆனால், விவசாயிகளுக்குப் பிரச்சினைகள் ஏற்பட்டன. அமெரிக்காவில் ரொனால்ட் ரீகன் அதிபராக இருந்தபோது பெடரல் அரசு கொண்டு வந்த விவசாய சீர்திருத்த சட்டங்களால் விவசாயத் துறையில் நெருக்கடிகள் முற்றின. விவசாயிகளுக்குக் கிடைத்துவந்த லாபகரமான கொள்முதல் விலை குறைந்து, இழப்புகளைச் சந்திக்க நேர்ந்தது.

நியாயமான சந்தேகங்கள், அச்சங்கள்

புதிய சட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு ஏற்பட்டிருக்கும் சந்தேகங்களும் அச்சங்களுமே நியாயமானவைதான். வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களைத் தவிர வேறு இடங்களிலும் விற்றுக்கொள்ளலாம் என்று அனுமதிப்பதன் மூலம் அவற்றை வலுவற்றதாக்கி, நாளடைவில் அந்த அமைப்பே மறைந்துபோக வழியேற்படும். ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்துக்குத் தடையில்லாமல் வேளாண் பொருள்களைக் கொண்டு செல்ல அனுமதிப்பதன் மூலம், மின் வணிகம் ஊக்குவிக்கப்படும். புதிய சட்டம் காரணமாக வெளியில் நடைபெறும் விற்பனைகள் தொடர்பாக மாநில அரசுகளால் கட்டணம் வசூலிக்க முடியாது. இதனால் மண்டி மூலம் விற்கும் முறை குறைந்து நாளடைவில் மண்டிகளே இல்லாமல் போய்விடும். மண்டிகள் மறைந்த பிறகு, விவசாயிகளிடம் நேரடியாகக் கொள்முதல் செய்யும் பெரு நிறுவனங்கள், தங்களுக்குள் பேசி வைத்துக்கொண்டு கொள்முதல் விலையை வெகுவாகக் குறைத்துவிடும். அவர்களைத் தவிர வேறு எவருக்கும் விற்க முடியாத நிலைமையே ஏற்படும். இதனால் விவசாயிகள் சுரண்டப்படுவதுதான் அதிகம் நடக்கும்.

மண்டிகளின் தரகர்கள் சரக்குகளை வாங்குவது மட்டுமல்லாமல், சாகுபடிச் செலவுக்கும் கடன் தந்து உதவுகிறார். அவர்களுடனான உறவு குலைந்து, தேவைக்குப் பணம் வேண்டுமென்றால், அதிக வட்டிக்குக் கடன் தரும் லேவாதேவிக்காரர்களைத்தான் நாட நேரும். அதற்குப் பிறகு குறைந்தபட்ச ஆதரவு விலை என்ற முறையையே அரசும் கைவிட்டுவிடும். பிறகு விவசாயிகள் சந்தை நிலவரத்துக்கேற்ப விற்க நேரிடும். விளைச்சல் அதிகமென்றால் விலை சரியும். விளைச்சல் குறைவென்றாலும் ஏற்கெனவே ஒப்புக்கொள்ளப்பட்ட விலைக்குத்தான் விவசாயிகளால் விற்க முடியும்.

இந்த நிலையில் விவசாயிகளின் கோரிக்கை இரண்டுதான். விவசாயிகளின் நலனுக்கு எதிராக இருப்பதாலும் மாநில அரசுகளின் விவகாரங்களில் தலையிடுவதாலும் இந்த வேளாண் சட்டங்களை மத்திய அரசு கைவிட வேண்டும். அதற்குப் பதிலாக குறைந்தபட்ச ஆதரவு விலை முறை தொடரும், எந்த நாளும் இது கைவிடப்பட மாட்டாது என்ற சட்டத்தை மத்திய அரசு இயற்ற வேண்டும். ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் எந்தக் காலத்திலும் மூடப்பட மாட்டாது என்றும் சட்டம் இயற்ற வேண்டும் என்று விவசாயிகள் கோருகின்றனர். விவசாயிகளின் நலன்தான் முக்கியம் என்று கருதும் அரசுக்கு இப்படியொரு சட்டம் இயற்றுவதில் என்ன நெருடல் என்று புரியவில்லை.

பத்து கோரிக்கைகள்

இதற்கிடையே, ‘நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி, சர்ச்சைக்குரிய மூன்று சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும். குறைந்தபட்ச ஆதரவு விலை முறையும் விவசாயிகளின் விளைபொருள்களைக் கொள்முதல் செய்யும் நடைமுறையும் விவசாயிகளின் அடிப்படை உரிமைகள் என்று அறிவிக்கும் சட்டத்தை இயற்ற வேண்டும். பாரம்பரியமாகத் தொடரும் கொள்முதல் நடைமுறை தொடர்ந்து அமலில் இருக்கும் என்று அரசு உறுதியளிக்க வேண்டும்.வேளாண் விஞ்ஞானி சுவாமிநாதன் தலைமையிலான குழுவின் பரிந்துரைகளை அரசு நிறைவேற்ற வேண்டும். மின்சாரம் தொடர்பான 2020 அவசரச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். மாநில அரசுகளின் அதிகாரப்பட்டியலில் உள்ள விஷயங்களில் மத்திய அரசு தலையிட்டு சட்டம் இயற்றக்கூடாது’ என்பன உள்ளிட்ட 10 கோரிக்கைகளை விவசாயிகள் முன்வைத்திருக்கிறார்கள்.

537 விவசாயிகள் சாவு

இந்தப் போராட்டத்தில் 2020 டிசம்பர் தொடங்கி ஜூலை 2021 வரையில் 537 விவசாயிகள் கிளர்ச்சியில் இறந்திருக்கிறார்கள். மழை, பனி, குளிர் ஆகியவற்றால் உடல் நலிவடைந்தும், விபத்தில் சிக்கியும், தற்கொலை செய்துகொண்டும் இறந்துள்ளனர். விவசாயிகள் காந்திய வழிமுறையில் தங்களுக்குத் தாங்களே உணவு, குடிநீர், இருப்பிட வசதிகளைச் செய்துகொண்டு தொடர்ச்சியாகப் போராடுகிறார்கள். மற்றவர்கள் செலவு செய்கிறார்கள் என்பதை வாதத்துக்கு ஒப்புக்கொண்டாலும் உண்மையான ஈடுபாடு இல்லாமல் இத்தனைக் காலம் எவராலும் போராட்டத்தில் ஈடுபட முடியாது. அது மட்டுமின்றி அரசியல்வாதிகளைத் தங்களுடைய மேடைகளில் ஏற்றாமல் கவனமாகத் தவிர்க்கிறார்கள். இதையெல்லாம் அரசு கருத்தில் கொண்டு விரைவில் சுமூகத் தீர்வு காண்பது நல்லது.

x