பெண்களின் துணிகளைத் துவைக்க உத்தரவிட்ட பிஹார் நீதிபதி பணிகளிலிருந்து நிறுத்திவைப்பு


பிஹாரின் மதுபனி மாவட்டத்தின் ஜஞ்சார்பூர் சார்பு நீதிமன்ற நீதிபதியான அவினாஷ் குமாரை நீதிமன்றப் பணிகளைத் தொடர்வதிலிருந்து நிறுத்திவைத்திருக்கிறது பாட்னா உயர் நீதிமன்றம்.

இவர் வழக்கத்துக்கு மாறான பல தீர்ப்புகளை வழங்கியவர்.

சில நாட்களுக்கு முன்னர், லாலன் குமார் சஃபி எனும் சலவைத் தொழிலாளி தன்னிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாக ஒரு பெண் புகார் அளித்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த அவினாஷ் குமார், லாலன் குமாருக்குப் பிணை வழங்கியதுடன், அதற்கு ஈடாக கிராமத்தின் உள்ள அனைத்துப் பெண்களின் ஆடைகளையும் ஆறு மாதங்களுக்கு இலவசமாகத் துவைத்து சலவை செய்துதர வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தார். இந்தச் செய்தி ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

அதேபோல், மதுவிலக்குச் சட்டத்தின்கீழ் ஆகஸ்ட் மாதம் கைதுசெய்யப்பட்டிருந்த நிதீஷ் குமார் என்பவருக்குப் பிணை வழங்கிய அவினாஷ் குமார், நிதீஷ் குமார் தனது கிராமத்தைச் சேர்ந்த ஐந்து ஏழைக் குழந்தைகளுக்கு மூன்று மாதங்களுக்கு இலவசக் கல்வி அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தார்.

இன்னொரு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபருக்குப் பிணை வழங்கிய அவினாஷ் குமார், அதற்கு ஈடாக பட்டியலினத்தைச் சேர்ந்த ஐந்து குழந்தைகளுக்குத் தலா அரை லிட்டர் பால் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

மதுபனி மாவட்டப் போலீஸ் அதிகாரிகள் இருவருக்கு, சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான சட்டங்கள் குறித்த தகவல்கள் தெரியவில்லை என்று கூறி அவர்களுக்குச் சிறப்புப் பயிற்சி அளிக்க உத்தரவிட்டார்.

இவர் பாட்னா நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணிபுரிந்தபோது, சில வழக்குகளில் முறையாக விசாரணை நடத்தவில்லை என்று கூறி பாட்னா மாவட்ட நீதிபதிக்கும், போலீஸ் எஸ்.பி-க்கும் அபராதம் விதித்தது குறிப்பிடத்தக்கது.

x