அவசியமானால் வீட்டுக்கே சென்று ஊசி போடலாம்: மத்திய அரசு அனுமதி


படுத்த படுக்கையாக இருக்கும் முதியவர்கள், நடமாட முடியாதபடிக்கு உடல் நலிவுற்றவர்கள், வீடுகளைவிட்டு வெளியே வர முடியாத சூழலில் இருப்பவர்கள் ஆகியோருக்கு அவரவர் வீடுகளுக்கே சென்று கரோனா தடுப்பூசி போடலாம் என்று மத்திய அரசு அனுமதி அளித்திருக்கிறது.

இந்த நடவடிக்கையின்போது வழக்கமான சுகாதார விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும், ஊசி மருந்தை வீணடிக்கக் கூடாது, ஊசி போட்டுக்கொண்டவர்களுக்கு எதிர் விளைவுகள் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்ற கவனிப்பும் அவசியம் என்று அரசு வலியுறுத்தியிருக்கிறது. சுகாதார அமைச்சகம் தில்லியில் இதை வியாழக்கிழமை தெரிவித்தது.

பதினெட்டு வயதுக்கு மேற்பட்டவர்களில் 66 சதவீதத்தினருக்கு ஒரு முறையாவது தடுப்பூசி போடும் இலக்கை இந்தியா எட்டிவிட்டது என்று நிதி ஆயோக் (சுகாதார) உறுப்பினர் டாக்டர் வி.கே. பால் தெரிவித்தார்.

செப்டம்பர் 17-ல் ஒரே நாளில் நாடு முழுவதும் இரண்டு கோடிப்பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. இப்போது லட்சத்தீவு, சண்டீகர், அந்தமான்-நிகோபார் தீவுகள், சிக்கிம், கோவா, இமாசல பிரதேசம் ஆகியவற்றில் முதல் தடுப்பூசி 100 பேர்களுக்குப் போடப்பட்டுவிட்டது. தாத்ரா-நாகர் ஹவேலி, கேரளம், லட்சத்தீவு, உத்தராகண்ட், லடாக் ஆகியவற்றில் 90 சதவீதத்துக்கு மேல் முதல்முறை தடுப்பூசி போட்டாகிவிட்டது, அவை இப்போது 100 சதவீதம் என்ற இலக்கை நெருங்குகின்றன.

x