விவசாயிகள் ’பாரத் பந்த்’: வங்கி அதிகாரிகள் ஆதரவு


மத்திய அரசு இயற்றியுள்ள மூன்று வேளாண் மசோதாக்களை ரத்து செய்யக் கோரி போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக, வரும் 27-ம் தேதி (திங்கள்கிழமை) நடைபெறும் (பாரத் பந்த்) முழு அடைப்புக்கு அனைத்திந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு (ஏஐபிஓசி) ஆதரவு தெரிவித்துள்ளது. இது தார்மிக ஆதரவா, வேலைநிறுத்தம் செய்வார்களா என்பது விளக்கப்படவில்லை.

சம்யுக்த கிசான் மோர்ச்சா தலைமையிலான விவசாய சங்கங்களுடன் அரசு பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வேண்டும் என்று வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு கோரியுள்ளது.

இந்தக் கிளர்ச்சிக்குத் தொழிற்சங்கங்கள், ஊழியர் சங்கங்கள், மாணவர் சங்கங்கள், போக்குவரத்து சங்கங்கள் ஆகியவற்றின் ஆதரவைக் கேட்டு ஒருங்கிணைத்து வருகிறோம் என்று சம்யுக்த கிசான் மோர்ச்சா அறிக்கை வாயிலாகத் தெரிவித்துள்ளது.

இது வெறும் விவசாய கோரிக்கைகளுக்கான போராட்டம் மட்டுமல்ல, இந்திய ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டமுமாகும் என்று கிசான் மோர்ச்சா தலைவர்கள் தெரிவித்தனர். இந்த கிளர்ச்சிக்கு ஆதரவு திரட்ட கிசான் மகா பஞ்சாயத்துக்களும் சைக்கிள், மோட்டார்-சைக்கிள் பேரணிளும் நடத்தப்படும் என்று மோர்ச்சா தெரிவிக்கிறது.

”மூன்று சட்டங்களும் விலக்கிக்கொள்ளப்படும் வரையில் டெல்லி மாநகர எல்லையிலிருந்து விவசாயிகள் அகலமாட்டார்கள்” என்று பாரதிய கிசான் சங்கத்தின் பிரிவுத் தலைவர் ஹரியாணாவின் குருநாம்சிங் சடுனி புதன்கிழமை அறிவித்தார். விவசாயிகள் சங்கத்தின் இன்னொரு தலைவர் ரவி ஆசாதும் இதையே வலியுறுத்தினார்.

”தேசியத் தலைநகருக்குள் போக்குவரத்து எளிதாக வந்து செல்ல முடியாமல் தடுக்கும் இந்தச் செயல் தொடர்பாக டெல்லி யூனியன் அரசும் உத்தரப் பிரதேசம், ஹரியாணா, பஞ்சாப் ஆகிய மாநில அரசுகளும் கூடி தீர்வு காண வேண்டும்” என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருக்கிறது.

கடந்த ஆண்டு செப்டம்பரில் நிறைவேற்றப்பட்ட இந்த சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நவம்பர் முதல் கிளர்ச்சி செய்து வருகின்றனர். இந்தச் சட்டங்கள் பெருந்தொழில் நிறுவனங்களுக்குச் சாதகமாக இயற்றப்பட்டிருப்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

விவசாயிகளுடன் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்திய அரசு, இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஏற்கத் தக்கவை அல்ல என்று நிராகரித்துவிட்டது. விவசாயிகளின் நன்மைக்காகக் கொண்டுவரப்பட்ட சீர்திருத்தச் சட்டங்கள் தொடர்பாகச் சரியான தகவல்களைத் தெரிந்துகொள்ளாமல், எதிர்க்கட்சிகள் தரும் தவறான தகவல்களை நம்பியே கிளர்ச்சி நடைபெறுகிறது என்று அரசு பதிலுக்குக் குற்றம்சாட்டுகிறது.

x