மம்தா வீட்டருகில் வாக்கு சேகரிக்கத் தடை!


மேற்கு வங்க முதலமைச்சரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியின் வீட்டருகில் வாக்கு சேகரிக்க, மாநில காவல் துறை தங்களை அனுமதிக்கவில்லை என்று பாரதிய ஜனதா மாநிலத் தலைவர் சுகந்த மஜும்தார் குற்றம்சாட்டினார்.

மம்தா போட்டியிடும், பவானிபூர் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம் இப்போது தீவிரம் பெற்றுள்ளது. மம்தா குடியிருக்கும் ஹரீஷ் சட்டர்ஜி தெருவில் வாக்கு சேகரிக்க பாஜகவினர் புதன்கிழமை சென்றபோது, கொல்கத்தா காவல் துறை துணை ஆணையர் (தெற்கு) ஆகாஷ் மகாரியா அவர்களைத் தடுத்து திருப்பி அனுப்பினார். பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிர்மயசிங் மகதோவுக்கும் அவருக்கும் இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது.

தேர்தல் ஆணையம் அனுமதித்த எண்ணிக்கையில்தான் தங்கள் குழுவினர் இருந்ததாகவும், அனுமதிக்கப்பட்டதை விட அதிகம் பேர் என்று கூறி காவலர்கள் தடுத்ததாகவும் மகதோ குற்றம்சாட்டினார். செப்.30-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ”பவானிப்பூரிலும் மம்தா தோற்றுவிட்டால் என்னாவது என்ற தோல்வி பயத்தில் ஆளும் கட்சி இப்படி நடந்துகொள்கிறது, காவல் துறை அவர்களுக்கு உடந்தையாகச் செயல்படுகிறது, மேற்கு வங்க காவல் துறையின் தொழில் நேர்மை, கொல்கத்தா நகர காவல் துறையின் கம்பீரம் எல்லாம் நாசமாகிவிட்டது” என்று சுகந்த மஜும்தார் கூறினார். அந்த வீதியில் வாக்கு சேகரிக்க செவ்வாய்க்கிழமை (செப். 21) தன்னையும் அனுமதிக்கவில்லை என்று பாஜக வேட்பாளர் பிரியங்கா திப்ரேவால் கூறினார். திரிணமூல் தொண்டர்கள் எங்கு வேண்டுமானாலும் எத்தனை பேர் வேண்டுமானாலும் பிரச்சாரம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர் என்று அவர் குற்றம்சாட்டினார்.

x