நன்றியுள்ள பிராணிகளுக்கு நன்றிமிக்கவர்களின் அஞ்சலி!


நன்றிக்கு உதாரணம் என்றால் நாயைத்தான் நினைவுகூர்வார்கள். அப்படி தாங்கள் வளர்க்கும் நாய்களின் பிரிவைத் தாளாமல் துயரத்தில் ஆழ்பவர்கள் அநேகம். ஒடிஷா மாநிலம் பத்ரக் நகரில் துரித உணவுக் கடைகளை நடத்துவோரால் மறக்க முடியாதவளாகிவிட்டாள் 13 வயது சம்பி.

அவளுடைய மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க, டிஜிட்டல் பேனர் வைத்து மாலையிட்டு அஞ்சலி செலுத்தியதுடன் நிற்காமல், ஐந்நூறுக்கும் மேற்பட்டவர்களுக்கு சாப்பாடு போட்டு, ‘நடப்பு’ சடங்கை நடத்தியிருக்கிறார்கள்.

அந்த வீதியில் கடை வைத்திருந்த வேறு இருவர் தலையை மழித்து, நாய்க்கும் தங்களுக்குமுள்ள ‘உறவை’ வெளிப்படுத்தி இருக்கிறார்கள். சிலர் இதை கேலி செய்யலாம், சிலர் இதைக் கிறுக்குத்தனம் எனலாம். அன்பு ஏற்படுத்தும் பிணைப்பு இது என்பதே உண்மை.

சின்னக் குட்டியாக இருந்தபோது சம்பியை, அங்கே கடை வைத்திருந்த சுஷாந்த் பிஸ்வால் என்பவரிடம் சிலர் கொடுத்தார்கள். அவர் தன்னுடைய கடைக்கு அருகிலேயே அதை வைத்துப் பராமரித்தார். கடையில் பிரியாணி சூடாக தயாரானவுடன் அதற்குத்தான் முதலில் பரிமாறுவார். மற்ற நாய்களைவிட சம்பி வித்தியாசமானவள். தரையிலோ, வீதியோரத்திலோ சாப்பாடு போட்டால் தொடக்கூட மாட்டாள்.

பிரியாணி, ரசகுல்லா, ரொட்டி, அரிசிச் சோறு என்று எதைக் கொடுத்தாலும் தட்டில் வைத்துத் தந்தால்தான் சாப்பிடுவாள்.

அவளுக்கென்று ஒரு தட்டை வைத்து தினமும் அதில் போட்டால் மட்டுமே சாப்பிடுவாள். பிரியாணி, ரசகுல்லா, ரொட்டி, அரிசிச் சோறு என்று எதைக் கொடுத்தாலும் தட்டில் வைத்து தந்தால்தான் சாப்பிடுவாள். அவ்வளவு ஏன், பிஸ்கெட்டைக் கூட அப்படியே கையிலிருந்து வாங்கியோ, தரையில் வீசிய பிறகோ சாப்பிடமாட்டாள் என்று நினைவுகூர்கிறார் பிஸ்வால்.

நாயாக இருந்தாலும், பிற ‘நாய்களை’ ஏறெடுத்தும் பார்க்க மாட்டாள். அவற்றோடு சேரவும் மாட்டாள். இரவு நேரங்களில் கடைக்குக் காவலாக, கடைக்குள்ளேயே படுத்திருப்பாள். சுஷாந்துக்கு மட்டுமல்ல மற்றவர்களுக்கும் செல்லமாகிவிட்டாள். சுஷாந்த் தன்னுடைய மகளாகவே பாவித்தார். இந்தியர்களிடம் உள்ள நல்ல குணங்களில் இதுவும் ஒன்று. தங்களை அண்டி நிற்கும் பிராணிகள், பறவைகள் என்று அனைத்தையுமே தங்களில் ஒருவராகக் கவனித்துக் கொள்வார்கள்.

ஒடிஷாவிலேயே, ஒரு காவல் நிலையத்துக்கு அருகில் குரங்கு ஒன்று அடிக்கடி வந்து காவலர்கள் தரும் உணவைப் பெற்றுக்கொள்ளும். அது இறந்த அன்று காவலர்கள் மிகவும் துக்கமடைந்தனர். பிறகு, இந்து மதச் சடங்கின்படி ஆழக் குழி வெட்டி அதில் அதை இறக்கி, அதன் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்தனை செய்தனர். ஒடிஷாவின் ஜெய்ப்பூர் மாவட்டத்து வாலிசந்திரபூர் என்ற ஊரில் இது நடந்தது.

பிஹாரின் சமஷ்டிப்பூரில், கடந்த மே மாதம் ஒரு நாய் இறந்தது. அதை வளர்த்தவர் அதற்குப் பாடை கட்டி வீதியில் ஊர்வலமாக எடுத்துச்சென்று, பிறகு இறுதிச் சடங்குகளைச் செய்தார்.

x