கேரளா ஆட்டோ டிரைவருக்கு லாட்டரியில் ரூ.12 கோடி !


இந்த முறை ஓணம் பண்டிகையை அடக்கமாக அவரவர் வீட்டுக்குள்ளேயே கொண்டாடுங்கள் என்று கேரள அரசு கட்டளையிட்டதால், பெரும்பாலானவர்கள் அடக்கியே வாசித்தனர். ஆனால், எர்ணாகுளத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் பி.ஆர். ஜெயபாலனுக்கு இந்த ஓணம் உண்மையிலேயே பொன் ஓணமாகிவிட்டது.

அவர் வாங்கியிருந்த ஓணம் பம்பர் லாட்டரிச் சீட்டுக்கு முதல் பரிசு ரூ.12 கோடி விழுந்திருக்கிறது. 12 கோடியா என்று வயிற்றெரிச்சல்பட வேண்டாம், மத்திய அரசு வருமான வரியைக் கழித்துக் கொண்ட பிறகு, ரூ.7 கோடிதான் கிடைக்கும்.

இந்த லாட்டரிச் சீட்டை இம்மாதம் 10-ம் தேதி திருப்பணித்துறா என்ற இடத்தில் வாங்கியிருக்கிறார் ஜெயபாலன். வாங்கும்போது ஃபேன்சி நெம்பராக பார்த்து வாங்கினார். 'டிஇ 645465' என்பது சீட்டின் எண். ஓணத்துக்கு மறுநாள் லாட்டரிச் சீட்டு குலுக்கல் நடந்தது. வாங்கியவரை திங்கள்கிழமை அடையாளம் கண்டனர்.

தமிழ்நாட்டில் அரசு லாட்டரிச் சீட்டை, அண்ணாதுரை முதலமைச்சராக இருந்தபோது தொடங்கி வைத்தார். ‘விழுந்தால் வீட்டுக்கு – விழாவிட்டால் நாட்டுக்கு’ என்று சொன்னார். தமிழர்கள் எது ஒன்றைப் புதிதாக அறிமுகப்படுத்தினாலும் ஆழ்ந்துவிடுவார்கள். அப்புறம் லாட்டரி மோகம் வேகம் பெற்றது.

எங்கோ இந்தியாவின் வட கிழக்கில் இருக்கும் அசாம், மணிப்பூர், நாகாலாந்து, சிக்கிம் எல்லாம் ஏராளமான லாட்டரிச் சீட்டுகளை அச்சிட்டு அவற்றைப் பெரும்பாலும் தமிழ்நாட்டிலேயே கொண்டுவந்து விற்றன. லாட்டரி விற்பனைக் கடைகள் தெருவுக்குத் தெரு பெருகின. லாட்டரிச் சீட்டுகளை விற்றே கோடீஸ்வரர்களானார்கள் பலர். இந்த மோகம் தலைக்கேறியதால் போலி வரிசை எண்கள், போலி லாட்டரிகள் என்று பெருகின.

கடைசியில் ஒரு நம்பர் லாட்டரி வந்தது. நாள் முழுவதும் சம்பாதித்த தொகையை அதில் தொலைத்துவிட்டு, பித்துப் பிடித்தது போல மனைவி குழந்தைகளையும் அடித்து உதைத்தனர். வீட்டில் இருக்கும் பண்ட, பாத்திரங்களையெல்லாம் விற்று லாட்டரியில் தொலைத்தனர். பிறகு அவையெல்லாம் ஒழிக்கப்பட்டன.

முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு, வருவாயைப் பெருக்க லாட்டரிச் சீட்டை அமல்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு சில வட்டாரங்களில் இருந்தது. தற்போது அப்படியெல்லாம் இல்லை என்று திட்டவட்டமாக மறுக்கப்பட்டுவிட்டது குறிப்பிடத்தக்கது.

x