காஷ்மீரின் உரி பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவல் முயற்சி; இந்திய ராணுவம் முறியடிப்பு


இந்திய ராணுவ வீரர்

காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில், தீவிரவாதிகள் மேற்கொண்ட ஊடுருவல் முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்திருக்கிறது. ராணுவத்தினர் இப்பணியில் கடந்த 3 நாட்களாக ஈடுபட்டிருக்கிறார்கள். இது சமீபத்தில் நடந்திருக்கும் மிகப் பெரிய ஊடுருவல் முயற்சி என்று கூறப்படுகிறது.

கடந்த சனிக்கிழமை (செப்.19) மாலை, எல்லைப் பாதுகாப்புக் கோட்டைத் தாண்டி இந்தியாவுக்குள் ஊடுருவ தீவிரவாதிகள் முயற்சித்ததை ராணுவத்தினர் கண்டறிந்தனர். பாகிஸ்தான் எல்லையிலிருந்து 6 தீவிரவாதிகள் ஊடுருவ முயன்றதாகவும், அப்போது நடந்த துப்பாக்கிச் சண்டையில், இந்திய ராணுவ வீரர் ஒருவர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து, காஷ்மீரின் வடக்குப் பகுதியான உரி பகுதியில் தொலைபேசி, அலைபேசி மற்றும் இணைய இணைப்புகள் தற்காலிகமாகத் துண்டிக்கப்பட்டிருக்கின்றன. மிகப் பெரிய அளவில் தேடுதல் முயற்சிகளையும் ராணுவம் முடுக்கிவிட்டிருக்கிறது.

கடந்த பிப்ரவரி மாதம் இந்திய – பாகிஸ்தான் ராணுவ உயரதிகாரிகளுக்கு இடையில் சண்டை நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், பாகிஸ்தான் தரப்பிலிருந்து நடந்திருக்கும் 2-வது ஊடுருவல் முயற்சி இது.

2016-ல், உரி ராணுவத் தளத்தில் நடந்த தாக்குதல் சம்பவத்தின் 5-வது நினைவுதினத்தையொட்டி இந்த ஊடுருவல் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது. 2016 செப்டம்பர் 18-ல், எல்லைப் பாதுகாப்புக் கோடு அருகில் உள்ள உரி பகுதியில் இருக்கும் ராணுவப் படைப் பிரிவின் நிர்வாகத் தலைமையகத்தின் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 18 வீரர்கள் உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். ஜெய்ஷ்-இ-முகம்மது அமைப்பின் தற்கொலைப்படைப் பிரிவு இந்தத் தாக்குதலில் ஈடுபட்டது எனக் கருதப்பட்டது. பின்னர், லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு இந்தத் தாக்குதலில் ஈடுபட்டதாக தேசியப் புலனாய்வு முகமை அறிவித்தது.

x