பஞ்சாபுக்கு பட்டியலின முதல்வர்: காங்கிரஸ் தேர்தல் நாடகம் என மாயாவதி காட்டம்


சரண்ஜீத் சிங், மாயாவதி

பஞ்சாப் மாநிலத்தில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த சரண்ஜீத் சிங் சன்னி முதலமைச்சர் ஆக்கப்பட்டிருப்பது தேர்தலுக்கான நாடகம் என்று கண்டித்தார் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி.

புதிய முதலமைச்சருக்கு வாழ்த்து தெரிவித்த மாயாவதி, ”பட்டியல் இனத்தவருக்கு காங்கிரஸ் முக்கியத்துவம் தருவதாக இருந்தால், பொதுத் தேர்தல் முடிவு வந்தவுடனேயே சரண்ஜீத்தை முதலமைச்சர் பதவியில் அமர்த்தியிருக்கலாமே” என்று கேட்டார்.

மேலும் அவர் பேசுகையில்:
இப்போதும்கூட பட்டியல் இனத்தவர் மீதும் அவர்களுடைய தலைமை மீதும் தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதைத்தான் காங்கிரஸ் கட்சி வெளிப்படையாக அறிவித்திருக்கிறது. வரும் பஞ்சாப் சட்டசபை பொதுத் தேர்தலை நவ்ஜோத் சிங் சித்து தலைமையில் காங்கிரஸ் எதிர்கொள்ளும் என்று ஹரீஷ் ரவாத் அறிவித்திருக்கிறார். அப்படியானால் சரண்ஜீத் சிங்கின் தலைமையில் தங்களால் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்று அஞ்சுகிறார்கள் என்று பொருள்.

முதலமைச்சராகப் பதவி வகிப்பவர் தலைமையில் கட்சி தேர்தலைச் சந்திக்காது என்றால் கட்சிக்குள் அவர் மீது என்ன மரியாதை இருக்கும், அவரால் எப்படி தன்னம்பிக்கையுடன் நிர்வாகத்தை நடத்த முடியும் என்றும் கேட்டார் மாயாவதி. வரும் 2022 சட்டசபை பொதுத் தேர்தலைச் சந்திக்க இந்த ஆண்டு ஜூன் மாதம் சிரோமணி அகாலி தளத்துடன் பகுஜன் சமாஜ் கட்சித் தேர்தல் உடன்பாடு செய்துகொண்டுள்ளது. இதனால் கதிகலங்கிப் போன காங்கிரஸ், பட்டியல் இனத்தவரை முதல்வராக அறிவித்திருக்கிறது.

இவ்வாறு மாயாவதி தெரிவித்தார்.

”முதலமைச்சராக சரண்ஜீத் சிங்கைப் பதவியில் அமர்த்திவிட்டு தேர்தலை நவ்ஜோத் சிங் சித்து தலைமையில் காங்கிரஸ் சந்திக்கும்” என்று ரவாத் அறிவித்திருப்பதால், சரண்ஜீத் சிங் சன்னி வெறும் பொம்மைதான் என்ற எண்ணத்தையே அனைவர் மனங்களிலும் உருவாக்கும் என்று சுட்டிக்காட்டினார் சுநீல் ஜாக்கர்.

x