மதச்சார்பற்ற அரசு மத நிகழ்ச்சியை விளம்பரப்படுத்தக் கூடாது!


விநாயகர் சதுர்த்தி பூஜையைத் தொலைக்காட்சி சேனல்கள் மூலம் நேரலையாக ஒளிபரப்பவும், பூஜை பந்தல்களுக்கு மக்களை வரவழைக்கவும் அரசுப் பணத்தையும் அதிகாரத்தையும் செலவிட்டது டெல்லி மாநில ஆளுங்கட்சியான ஆம்ஆத்மி.

இதன் காரணமாக அக்கட்சியின் அங்கீகாரத்தைத் தேர்தல் ஆணையம் ரத்து செய்ய வேண்டும் என பொதுநல வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம் ஆம்ஆத்மி கட்சி, தேர்தல் ஆணையம், மத்திய அரசு ஆகிய மூன்றுக்கும் இது தொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புமாறு இன்று (செப்.20) உத்தரவிட்டது.

நீதிபதிகள் டி.என். படேல், அமித் பன்சால் அடங்கிய அமர்வு, மனுவை அனுமதித்ததுடன் நவம்பர் 18-ல் அடுத்து விசாரணை நடைபெற உத்தரவிட்டது. வழக்கறிஞர் எம்.எல். சர்மா இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

”மதச்சார்பற்ற அரசு எந்த மத நிகழ்ச்சிக்கும் வருமாறு மக்களுக்கு நேரடியாக அழைப்பு விடுக்கக் கூடாது, அதற்காக அரசுப் பணத்தை விளம்பரம் செய்ய பயன்படுத்தக் கூடாது” என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்திய தண்டனைச் சட்டம் 408, 420 பிரிவுகளின்கீழ் டெல்லி அரசின் நடவடிக்கை சட்டவிரோதமானது, எதேச்சாதிகாரமானது, அரசியல் சட்டத்துக்கே முரணானது என்று மனு கூறுகிறது. அரசியல் சட்டத்தையும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 29(ஏ) (5) ஆகியவற்றையும் மீறியிருப்பதால், டெல்லி முதலமைச்சராக அர்விந்த் கேஜ்ரிவாலும் அமைச்சர்களாக மற்றவர்களும் செயல்படக்கூடாது என்று தடை விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனு கோருகிறது.

x