விளையாட்டுக்கு ரூல்ஸ் எப்படியோ அப்படியேதான் நீட் தேர்வுக்கும்!


‘முது மருத்துவப்பட்டதாரி மாணவர்களுக்கான நுழைவுத் தேர்வுகளில் கடைசி நேர மாற்றம் செய்தது ஏன்’ என்று விளக்குமாறு, மத்திய அரசுக்கும் தேசிய மருத்துவக் கவுன்சிலுக்கும் (என்எம்சி) உச்ச நீதிமன்றம் இன்று (செப்.20) நோட்டீஸ் அனுப்பியது.

நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட், பி.வி.நாகரத்னா அடங்கிய அமர்வு இந்த நோட்டீஸை பிறப்பித்துவிட்டு, அடுத்த விசாரணை இம்மாதம் 27-ல் நடைபெறும் என்று அறிவித்தது.

நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த, முதுகலை மருத்துவம் படித்த 41 மாணவர்கள், சிறப்பு மருத்துவர்கள் பட்டப்படிப்பில் சேருவதற்காக இந்தத் தேர்வுக்குத் தயார் செய்துகொண்டிருக்கின்றனர். அவர்கள் இந்த வழக்கைத் தொடுத்துள்ளனர். கடைசி நேர வினாத்தாள் பாணி மாறுதல் முடிவைக் கைவிடுமாறு மனுவில் கோரியுள்ளனர்.

மருத்துவத்தில் உயர் படிப்பு பயில்வதற்கான மாணவர்களைத் தேர்வு செய்ய வரும் நவம்பர் மாதம் இந்தத் தேர்வு நடைபெறவிருக்கிறது. இதற்கான அறிவிப்பு ஜூலை 23 அன்று முதலில் வெளியானது. ஆனால், ஆகஸ்ட் 31-லேயே இன்னொரு அறிவிக்கை மூலம், இந்தத் தேர்வுக்கான வினாக்கள் எந்தெந்த பிரிவுகளில் இருந்து கேட்கப்படும் என்பதில் மாறுதல்களைச் செய்தது. நவம்பர் 13, 14 தேர்வுக்கு 2 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், இந்த மாறுதல் பற்றிய அறிவிக்கை வந்துள்ளது.

”பொது மருத்துவம் மட்டுமே படித்த மாணவர்களுக்குச் சாதகமாக, அவர்கள் அதிக மதிப்பெண் பெறவேண்டும் என்ற நோக்கத்தில் இந்த மாறுதல் செய்யப்பட்டிருக்கிறது” என்று மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சியாம் திவான் கூறினார். ”விளையாட்டைத் தொடங்கிய பிறகு விதிமுறைகளை எப்படி மாற்றக்கூடாதோ, அப்படி மாணவர்களுக்குத் தேர்வு பற்றிய அறிவிப்பை வெளியிட்டுவிட்டு வினாத்தாள் முறையில் முக்கியமான மாறுதல்களைச் செய்வதும் தவறாகும்” என்று சுட்டிக்காட்டினார்.

’சூப்பர் ஸ்பெஷாலிட்டி கேர்’ என்றழைக்கப்படும் சிறப்பு மருத்துவம் தொடர்பான கேள்விகள் பொது மருத்துவப் படிப்பிலிருந்தே கேட்கப்படுகின்றன. இதனால் சிறப்புப் பிரிவுகளை, ஏற்கெனவே படித்துத் தேர்வுக்குத் தயாராகவிருந்த மாணவர்களுக்கு அவர்கள் படித்த பகுதிகளிலிருந்து கேள்விகள் வரவில்லை என்றால் அதிக மதிப்பெண் பெறமுடியாது. அது அவர்களுடைய மேல்படிப்பு வாய்ப்பை மறுப்பது போலாகிவிடும். எனவே, இந்தக் கடைசி நேர மாறுதல் குறித்து விளக்க வேண்டும் என்று மனுதாரர்கள் கோரியுள்ளனர்.

x