ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு; இந்தியாவில் 168 பேர் கைது


இந்தியாவில், ஐஎஸ் பயங்கரவாத அமைப்பை ஆதரிப்பவர்கள், அதன் கட்டளைகளை நிறைவேற்றிவருபவர்கள் என168 பேரைக் கைது செய்திருப்பதாக தேசியப் புலனாய்வு முகமை (என்ஐஏ) தெரிவிக்கிறது. இதுவரை 37 வழக்குகளைப் பதிவு செய்திருப்பதாகவும் கூறியிருக்கிறது.

இதுகுறித்து என்ஐஏ இன்று (செப்.18) வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ஐஎஸ் அமைப்பு இந்தியாவில் பரவ முயற்சிக்கிறது. இணையம் மூலம் தொடர்ந்து பிரச்சாரம் செய்கிறது. அப்பாவி இளைஞர்களுக்கு வெளிப்படையாகவே சமூக ஊடகங்கள் மூலம் வலை விரிக்கப்படுகிறது. ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராமில் அவர்களுக்காகவே சிலர் பிரச்சார வேலைகளைச் செய்கின்றனர். அவர்கள் வெளியிடும் தகவல்களைப் படித்துவிட்டு, ‘ஆமாம், நீங்கள் சொல்வது சரிதான்’ என்று ஆமோதித்தாலோ, உணர்ச்சி மேலிட கூடுதலாகக் கருத்து தெரிவித்தாலோ, மேலதிகத் தகவல்களுக்கு இந்த எண்களைத் தொடர்பு கொள்ளுங்கள் என்று வெளிநாட்டிலிருக்கும் தங்கள் இயக்கப் பிரச்சாரகர்களிடம் ஐஎஸ் அமைப்பினர் தொடர்பை ஏற்படுத்தித் தருகின்றனர். அவர்கள் ரகசிய சங்கேத வார்த்தைகளுடன் தகவல் தொடர்பை வலுப்படுத்துகின்றனர்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும், “புதிதாகச் சேரும் அனுதாபிகளின் அப்பாவித்தனத்துக்கேற்ப அவர்களுக்கு வேலைகளைத் தருகின்றனர். சில தகவல்களைக் கூறி அவற்றைப் பதிவேற்றம் செய்யுங்கள் என்கின்றனர். ஐஎஸ்ஸின் பிரச்சாரங்களை உள்ளூர் மொழிகளில் மொழிபெயர்க்குமாறு கூறுகின்றனர். துணிச்சலானவர்கள் என்று அடையாளம் காண்போரை தங்களுடைய இயக்க வேலைகளுக்குக் கையாள்களாகப் பயன்படுத்துகின்றனர். ஆயுதங்களையும் வெடிமருந்துகளையும் சேகரித்து வைக்கவும், டிரான்சிஸ்டர், டிபன் பாக்ஸ் வடிவங்களில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகளைத் தயாரிக்கவும் பயிற்சி அளிக்கின்றனர். பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு உள்ளூரிலேயே நிதி திரட்டவும் தாக்குதல் நடத்தவும்கூட அவர்களைப் பயன்படுத்துகின்றனர்” என்று கூறியிருக்கும் என்ஐஏ, யாராவது ஐஎஸ் அமைப்புடன் இணையவழித் தொடர்பில் இருப்பதாகத் தெரிந்தால், தங்களுக்குத் தெரியப்படுத்துமாறும் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறது.

x