விவசாயியின் கணக்கில் ரூ.52 கோடி வரவு; பிஹாரில் மீண்டும் ஒரு வங்கிக் குளறுபடி


பிஹாரின் ககரியா மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயியின் வங்கிக் கணக்கில், ரூ.5.50 லட்சம் வரவு வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பான பரபரப்பு அடங்குவதற்குள், அம்மாநிலத்தின் முஸஃபர்பூர் மாவட்ட விவசாயி ராம் பகதூர் ஷாவின் கணக்கில் ரூ.52 கோடி வரவு வைக்கப்பட்டிருக்கும் விநோத செய்தி வெளியாகியிருக்கிறது.

சிறு விவசாயியான ராம் பகதூர் ஷா, தனக்கு அரசு தரும் ஓய்வூதியம் வந்துவிட்டதா என்று பார்க்க, அருகில் உள்ள வாடிக்கையாளர் சேவை மையம் (இணையவழி) சென்றிருந்தார். சேவை மைய ஊழியர், அவரை விநோதமாகப் பார்த்துவிட்டு, “உங்கள் கணக்கில் ரூ.52 கோடி வரவு வைக்கப்பட்டிருக்கிறது” என்றார். இதைக் கேட்ட ராம் பகதூர் ஷா, “நான் விவசாயம் மட்டும்தானே செய்கிறேன், என் கணக்கில் இவ்வளவு பணம் வருவதற்கு வாய்ப்பே இல்லையே” என்று ஆச்சரியப்பட்டார்.

தகவல் அறிந்த காவல் துறையினர், அங்கு வந்து விசாரித்தனர். வங்கி நிர்வாகத்தை எச்சரித்துள்ளனர். வங்கியில் இந்தப் பணத்தைக் கணக்குகளில் சேர்க்கும் வேலையைச் செய்யும் ஊழியர்களிடம் தீவிர விசாரணை நடைபெறும் என்று தெரிகிறது.

சில நாட்களுக்கு முன்னால், கட்டிஹார் மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிஷ் குமார் என்ற பள்ளிக்கூடச் சிறுவனின் கணக்குக்கு ரூ.62 கோடியும், குருசந்த் விஸ்வாஸ் என்ற சிறுவனின் கணக்குக்கு ரூ.900 கோடியும் வரவு வைக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவித்தன. ஆனால், உண்மையில் அந்த மாணவர்களின் கணக்கில் இருந்த தொகை முறையே, ரூ.100 மற்றும் ரூ.128 மட்டுமே என்று வடக்கு பிஹார் கிராம வங்கி மேலாளர் ராம்நாத் மிஸ்ரா பின்னர் தெரிவித்தார்.

ககரியா மாவட்ட விவசாயின் கணக்கில் ரூ.5.50 லட்சம் வரவு வந்ததைத் தொடர்ந்து, பணத்தைத் திரும்ப வங்கிக்கே தர சலான் எழுதித்தர அவர் மறுத்துவிட்டார். “கோவிட்-19 பெருந்தொற்றில் வருமானமில்லாமல் அவதிப்படுவதால் பிரதமர் மோடி என் கணக்குக்கு இதை அனுப்பியிருக்கிறார், இதைத் திருப்பித் தர மாட்டேன்” என்று அடம்பிடித்தார். காவல் துறையினர் அவரை உரியமுறையில் கவனித்த பின்னர்தான் விவகாரம் முடிவுக்கு வந்தது.

இந்தச் சூழலில், கடந்த சில நாட்களாக வங்கிக் கணக்குகளில் தவறுதலாக பெருந்தொகை சேர்கிறது, பிறகு வங்கி அதிகாரிகள் மிரட்டி எழுதி வாங்குகிறார்கள் என்பதை மற்றவர்களிடமிருந்து அறிந்துகொண்ட ராம் பகதூர் ஷா, “சரி போகட்டும். இவ்வளவு பணம் எனக்கு வேண்டாம், மிகுந்த கஷ்டத்தில் இருக்கிறேன். அதைப் பார்த்து அரசு இதில் சிறு தொகையை என் கணக்கில் சேர்த்தால் வாழ்க்கையின் எஞ்சிய காலத்தை நிம்மதியாகக் கழித்துவிடுவேன்” என்று நம்பிக்கையுடன் சொன்னார். அப்படியெல்லாம் நடந்துவிடுமா என்ன?

x