வாகா எல்லையில் மீண்டும் கொடி இறக்கும் நிகழ்வு


இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் உள்ள அமிர்தசரஸ் நகரத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கட்டாயம் பார்க்க விரும்பும் நிகழ்ச்சி, அட்டாரி என்ற இடத்தில் 2 நாடுகளின் வீரர்களும் தத்தமது நாட்டு தேசியக் கொடியை இறக்கும் நிகழ்வாகும். இந்தியாவின் அட்டாரி, பாகிஸ்தானின் வாகா என 2 கிராமங்களின் எல்லையில் நடக்கும் இந்த நிகழ்வு மிகப் புகழ்பெற்றது. கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக 2020 மார்ச் முதல் இந்நிகழ்வு நிறுத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இந்நிகழ்வு மீண்டும் தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிகழ்வின்போது, இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் கம்பீர நடைபோட்டு தேசியக் கொடியை இறக்கிச் செல்வது, கொடியை வாங்கி அழகாக மடிப்பது ஆகியவற்றைப் பார்க்கும் இந்தியப் பார்வையாளர்கள் மெய்மறந்து கைதட்டுவார்கள். இதற்கு இணையாக பாகிஸ்தான் நாட்டு மக்கள் அவர்களுடைய வீரர்களின் அணிவகுப்பைப் பார்த்து கைதட்டி மகிழ்வார்கள்.

தென்னிந்தியா போன்ற கடைக்கோடி மாநில மக்கள், வட எல்லைக்குச் சென்று அங்கே பக்கத்து நாட்டு நில எல்லையில் நடக்கும் இந்த நிகழ்வைப் பார்க்கும்போது மிகுந்த உணர்ச்சிவசப்படுவார்கள். மிகப் பெரிய இந்த நாட்டின் எல்லையின் ஒவ்வொரு அங்குலத்தையும் எப்படி எல்லைப் பாதுகாப்புப் படையினரும் ராணுவத்தினரும் தங்களுடைய இன்னுயிரைப் பணயம் வைத்து காக்கிறார்கள் என்ற சிந்தனையோடு வெளியே வருவார்கள்.

பொதுவாக சராசரியாக 20,000 இந்தியர்கள் இதை நேரில் பார்ப்பார்கள். தற்போது, 300 பேர்தான் அனுமதிக்கப்படுவார்கள் என்று பஞ்சாப் எல்லை எல்லைப் பாதுகாப்புப் படை மக்கள் தொடர்பு அதிகாரி குல்தீப் சிங் கூறியிருக்கிறார்.

ஆனால், இந்தத் தகவலே அமிர்தசரஸ் நகர டாக்ஸி, ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் உணவகங்களை நடத்துவோருக்கும் காதில் தேன் பாய்ந்ததைப் போல இனிக்கத் தொடங்கிவிட்டது. சுற்றுலாப் பயணிகளால் இவர்களுக்கு நிறைய வருவாய் கிடைத்து வந்தது. கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளாக வருமானமில்லாமல் வாடுகிறார்கள். இந்நிலையில் இந்த அறிவிப்பு அவர்களுக்கு உற்சாகம் தந்திருக்கிறது. பாகிஸ்தானின் வாகா பகுதியில் வசிக்கும் மக்களும் மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார்கள்.

இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் இருந்தாலும் போர்ச்சூழல் நிலவினாலும் இந்நிகழ்வை நிறுத்திவைப்பார்கள். தற்போது இந்நிகழ்வு மீண்டும் நடக்கிறது என்பதால், 2 நாடுகளுக்கிடையே பெரிய பிரச்சினை இல்லை என்பது உறுதியாகிறது.

x