உலக அரிசி ஏற்றுமதியில் பாதி இந்தியாவிலிருந்து!


அரிசி ஏற்றுமதியில் இந்தியா இப்போது முதலிடத்தை நோக்கி விரைகிறது. சீனா, வியட்நாம், வங்கதேசம் ஆகியவற்றுடன் ஒப்பிடுகையில் இந்தியா குறைந்த விலையில் அரிசியை விற்பதால், உலக நாடுகள் இந்தியாவை நாடுவது அதிகரித்து வருகிறது.

இந்த ஆண்டு, உலக அளவில் 45 சதவீதம் இந்தியாவிலிருந்துதான் அரிசி ஏற்றுமதியாகும் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பாஸ்மதி ரக அரிசியை மத்திய கிழக்கு நாடுகள், அமெரிக்கா, பிரிட்டன் ஆகியவை விரும்பி வாங்குகின்றன. பாஸ்மதி அல்லாத ரகங்களை ஆப்பிரிக்க நாடுகளும் பிற ஆசிய நாடுகளும் வாங்குகின்றன.

மேற்கொண்டு அரிசி ஏற்றுமதியை அதிகப்படுத்த நினைத்தாலும், இந்தியாவின் துறைமுகங்கள் போதிய அடித்தளக் கட்டமைப்புகளுடன் இல்லை. 33 ஆயிரம் டன் அரிசியை ஏற்றுமதி செய்ய காக்கிநாடா துறைமுகத்துக்கு 30 நாட்கள் தேவைப்படுகின்றன. தாய்லாந்தில் 11 நாட்களிலேயே ஏற்றி முடிக்கின்றனர். ’கன்டெய்னர்’ எனப்படும் சரக்குப் பெட்டகங்களின் வாடகை அதிகரிப்பால், இந்திய ஏற்றுமதியாளர்களின் லாபம் குறைந்துவிட்டது. கப்பலில் ஏற்ற அதிக நாட்கள் பிடிப்பதாலும் சரக்குப் பெட்டகங்கள் மற்றும் கப்பல்களின் வாடகை அதிகரித்ததாலும் லாபத்தில் மேலும் சரிவு ஏற்பட்டுள்ளது. அரசும் ஏற்றுமதியாளர்களும் கூடிப்பேசி, இவற்றுக்கு நிரந்தரத் தீர்வு கண்டால் மட்டுமே அரிசி ஏற்றுமதியாளர்களுக்கும் சாகுபடியாளர்களுக்கும் லாபம் அதிகரிக்கும்.

இந்தியாவில் காக்கிநாடா துறைமுகம் அரிசி ஏற்றுமதியில் முக்கிய இடம் பிடித்துள்ளது. இந்தத் துறைமுகத்துக்கு வந்து குவியும் அரிசியின் அளவு அதிகரித்து, கப்பலில் ஏற்றும் நாட்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பது வாடிக்கையாகிவிட்டது. இந்த நெருக்கடியால் காக்கிநாடாவிலேயே இருக்கும் ஆழ்கடல் துறைமுகத்திலிருந்தும் அரிசியை ஏற்றத் தொடங்கினார்கள்.

மொத்தத்தில் இந்திய ஏற்றுமதியாளர்கள் ஒரு டன் அரிசிக்கு 100 டாலர்கள் தள்ளுபடி தருவதால், இந்தியாவிடம் அரிசி வாங்க நாடுகள் போட்டிப் போடுகின்றன.

x