”ஒரே நாடு – ஒரே வரி ஒத்துவராது!”: அஜீத் பவார்


அஜீத் பவார்

பெட்ரோல், டீசல் மீது மத்திய அரசு உற்பத்தி வரியும், மாநில அரசுகள் விற்பனை வரியும் விதிக்கும் இரட்டை வரி விதிப்பு முறை தற்போது உள்ளது. இதைத் தவிர்த்து நாடு முழுவதும் பெட்ரோல், டீசலை ஒரே விலையில் விற்கவும் அவற்றை ஜிஎஸ்டி வரம்பில் கொண்டுவரவும் மத்திய அரசு மாநில அரசுகளின் ஒத்துழைப்பை நாடும் என்று ஒரு தகவல் வெளியானது.

மகாராஷ்டிர துணை முதல்வரும் நிதியமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் தலைவருமான அஜித் பவார் இந்த யோசனையைக் கடுமையாக எதிர்க்கிறார். இது குறித்துப் பேசும்போது,

“ஜிஎஸ்டி என்ற பொது வரி விதிப்பு வந்த பிறகு மாநிலங்களின் நிதியதிகாரங்கள் கிட்டத்தட்டப் பறிக்கப்பட்டுவிட்டன. இந்த நிலையில்தான் பெட்ரோல், டீசல் மீது வரி விதிக்கும் அதிகாரம் மாநிலங்களுக்கு விட்டுவைக்கப்பட்டது. இப்போது அதையும் மத்திய அரசு எடுத்துக்கொண்டால் மாநிலங்கள் நிதியதிகாரங்களை இழந்து மத்திய அரசின் கையை எதிர்பார்க்கும் நிலையே நிலவும். ஜிஎஸ்டி வரி விதிப்பின்போது கொடுத்த வாக்குறுதிகளை மத்திய அரசு காப்பாற்ற வேண்டும்.

பெருந்தொற்றினால் வரி வசூல் குறைந்திருப்பதால் ஏற்பட்டுள்ள இழப்பை முழுமையாக ஈடுகட்டுவோம் என்ற வாக்குறுதியையும் மத்திய அரசு நிறைவேற்றவில்லை. மகாராஷ்டிர அரசுக்கு மட்டும் ரூ.30,000 முதல் ரூ.32,000 கோடி வரை மத்திய அரசிடமிருந்து நிலுவைத் தொகை வரவேண்டியிருக்கிறது. எனவே பெட்ரோல், டீசல் மீதான வரி விதிக்கும் உரிமையை மகாராஷ்டிரம் விட்டுத்தராது. தனது வரி விதிப்பு தொடர்பாக விதிகளை உருவாக்கிக்கொள்ள மத்திய அரசுக்கு அதிகாரம் இருக்கிறது. அதைப் பயன்படுத்தி ஒரே நாடு – ஒரே வரி என்று முயற்சி செய்வது, மாநிலங்களின் நிதி சுதந்திரத்தை முற்றாகப் பறிக்கும் நடவடிக்கையாகிவிடும்.

நாளை (செப். 17) நடைபெறவேண்டிய ஜிஎஸ்டி பேரவைக் கூட்டத்தை டெல்லியில் கூட்டச் சொன்னோம். அதுதான் எங்களுக்கு வசதியாக இருந்திருக்கும். கரோனா பெருந்தொற்று அகலாமல் இருப்பதால் வீடியோ கான்பரன்சிங் மூலமாவது நடத்துமாறு கோரினோம். அதையும் ஏற்கவில்லை. உத்தரப் பிரதேசத் தலைநகர் லக்னௌவில் ஏன் அந்தக் கூட்டத்தை நடத்துகிறார்கள்? நாங்கள் சீர்திருத்தங்களை எதிர்க்கவில்லை. சீர்திருத்தம் என்ற பெயரில் மாநிலங்களின் உரிமைகளைப் பறித்துவிடக் கூடாது” இவ்வாறு அஜீத் பவார் கூறினார்.

x