டெல்லி பாலங்களைத் தகர்க்க 1.5 கிலோ ஆர்டிஎக்ஸ் வெடி மருந்து


மும்பையில் 1993-ல் தொடர் குண்டுவெடிப்புகளை நிகழ்த்தி ஏராளமானவர்களைக் கொன்று, பொருளாதார ரீதியாகவும் விளைவித்த சேதத்தை மீண்டும் ஏற்படுத்த, பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற பயங்கரவாதிகள் தயாரிப்புகளோடு இந்தியாவுக்குள் வந்துள்ளனர் என்ற எச்சரிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது, டெல்லியில் நடைபெற்றிருக்கும் பயங்கரவாதிகள் கைது நடவடிக்கை.

கைதானவர்களிடம் ஆயுதங்கள், வெடிகுண்டுகள், வெடி மருந்துகளுடன் 1.5 கிலோ ஆர்டிஎக்ஸ் வெடி மருந்தும் இருந்ததை டெல்லி காவல் துறை கைப்பற்றியிருக்கிறது. ஒன்றரை கிலோ எடையுள்ள ஆர்டிஎக்ஸ் மிகப் பெரிய நாசத்தை ஏற்படுத்த போதுமானது.

போலீஸ்காரர்கள் டெல்லியில் கடந்த செவ்வாய்க்கிழமை பிடித்த இந்த பயங்கரவாதிகள் தவிர, இவர்களுக்கு ஆங்காங்கே தங்குமிடம், உணவு, போக்குவரத்து வசதி, தகவல் தொடர்பு வசதி ஆகியவற்றைச் செய்ய பலரும் தயாராக இருந்துள்ளனர். அவர்களைப் பற்றிய தகவல்கள் திரட்டப்படுவதால், வரும் நாட்களில் அவர்களும் கைது செய்யப்படுவார்கள் என்று அதிகாரியொருவர் தெரிவித்தார்.

ஜீஷன், ஒசாமா என்ற இருவரிடம் காவல் துறை தொடர்ந்து விசாரணை நடத்துகிறது. இவர்கள் மிக மெதுவாகத்தான் தகவல்களைத் தெரிவிக்கின்றனர். அந்தத் தகவல்களையும் காவல் துறை சரிபார்க்க வேண்டியிருக்கிறது. பாகிஸ்தானுக்குள் மோட்டார் படகில் சென்ற இவர்கள், ஓமன் நாட்டிலிருந்து சென்றதை இப்போதுதான் தெரிவிக்கின்றனர். இந்தியக் கடலோர காவல்படையோ, கப்பற்படைக் கப்பல்களோ சந்தேகப்பட்டு தங்களைப் பின்தொடரக் கூடாது என்று இவர்கள் அடிக்கடி படகுகளை மாற்றிக் கொண்டிருந்ததாகச் சொல்லப்படுகிறது.

1993-ல் மும்பை நகருக்கு எப்படிக் கடல் வழியாக வந்தனரோ, அப்படியே இப்போதும் வருவதற்கு ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். அத்துடன் மும்பையில் வெடிகுண்டு வைக்க பல்வேறு இடங்களைத் தேர்வு செய்ததைப் போல இப்போதும் சாலைப் பாலங்கள், ரயில் பாதைகள், மக்கள் அதிகம் கூடும் கடைவீதிகள் ஆகியவற்றைத் தேர்வு செய்து வைத்திருந்தனர். இந்த நாச வேலைகளில் இவர்கள் மட்டுமல்லாது உள்ளூரிலேயே இருக்கும் வேறு சிலரும் அவ்வப்போது வந்து கலந்துகொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அவர்களை எல்லைக்கு அப்பாலிருந்து ஒருங்கிணைக்க ஐஎஸ்ஐ திட்டமிட்டிருந்தது. வெவ்வேறு இலக்குகளை அடையாளம் கண்டதும் ஆங்காங்கே நிலைமைகளைக் கண்காணித்து தகவல் தரவும், நாசவேலைகளில் உதவவும் மேலும் பலர் தயாராக பயிற்சி பெற்றிருந்தனர். இவர்கள் சந்தித்துக் கொள்ளவும் திட்டங்கள் வகுக்கப்பட்டிருந்தன.

மகாராஷ்டிர மாநிலத்தின் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவு சிறப்புக் காவல்படை அதிகாரிகள் டெல்லி வந்துள்ளனர். பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற இந்த பயங்கரவாதிகளை, டெல்லி காவல்துறை அதிகாரிகளுடன் சேர்ந்து அவர்களும் விசாரிக்கவுள்ளனர்.

இந்தப் பயங்கரவாதிகள், பாகிஸ்தானின் குவேடர் துறைமுக நகரத்துக்கு அருகில் ஜியோனி என்ற இடத்தில் உள்ள பண்ணை வீட்டுக்கும் சென்றனர். அங்கே 15-க்கும் மேற்பட்டவர்கள் ஐஎஸ்ஐயிடம் பயிற்சி பெற்றனர். அவர்கள் வங்க மொழியில் பேசிக்கொண்டனர். அவர்கள் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்களாகவும் இருக்கலாம் என்று காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர்.

x