ஆசிஷ் கணக்கில் ரூ.6.2 கோடி வரவு வைக்கப்பட்டிருந்தது. குருசரண் விஸ்வாஸ் குடும்பத்தாரால் நம்பவே முடியவில்லை, ரூ.900 கோடிக்கும் மேல் அவருடைய கணக்கில் வரவு வைக்கப்பட்டிருந்தது.
பிஹார் மாநிலத்தின் கட்டிஹார் பகுதி கிராம மக்கள். அருகிலிருக்கும் தங்களுடைய வங்கிக் கிளைகளுக்கும் ஏடிஎம்களுக்கும் நேற்று (செப். 15) தொடர்ந்து படையெடுத்தனர். காரணம் இல்லாமல் இல்லை, தொலைக்காட்சி செய்தி சேனல்களும் இணையதளங்களும் வெளியிட்ட தகவல்கள் அனைவரையும் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு உள்ளாக்கிவிட்டன.
வடக்கு பிஹார் கிராம வங்கியில் கணக்கு வைத்திருக்கும் 2 பள்ளிக்கூட சிறுவர்கள் புதிதாக புத்தகம், நோட்டு, சீருடைகள் வாங்க தங்களுடைய கணக்குக்கு மாநில அரசு நேரடியாகப் பணம் அனுப்பியிருக்கும் என்ற நம்பிக்கையில் இணையதள மையத்துக்குச் சென்றனர். அவர்களுடைய நம்பிக்கை வீண் போகவில்லை/ ஆனால் நம்ப முடியாத அளவுக்குத் தொகை இருந்ததால் அவர்களுக்கு ஆகாயமே பூமிக்கு வந்ததைப் போல இருந்தது.
இதை அறிந்த வங்கி அலுவலர்கள் அரண்டு, தங்களுடைய மேலாளரிடம் விவரத்தைக் கூறினர். அதற்குள் இந்தத் தகவல் பரவி எல்லோரும் அவரவர் வங்கி பாஸ் புத்தகம், ஏடிஎம் கார்டுடன் வங்கிகளுக்கும் ஏடிஎம்களுக்கும் படையெடுத்தனர்.
6-ம் வகுப்பு படிக்கும் ஆசிஷ், இன்னொரு மாணவர் குருசரண் விஸ்வாஸ் தங்களுடைய பெற்றோர்களுடன் கிராமத்திலிருந்த இணையதள மையத்துக்கு நேற்று (செப். 15) பிற்பகல் சென்று, தங்கள் பெயருக்குப் பணம் போடப்பட்டிருக்கிறதா என்று பார்த்தனர். ஆசிஷ் கணக்கில் ரூ.6.2 கோடி வரவு வைக்கப்பட்டிருந்தது. குருசரண் விஸ்வாஸ் குடும்பத்தாரால் நம்பவே முடியவில்லை, ரூ.900 கோடிக்கும் மேல் அவருடைய கணக்கில் வரவு வைக்கப்பட்டிருந்தது. இந்தத் தகவல் அப்படியே கிராமத் தலைவர், வங்கி அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் வரை பரவிவிட்டது. கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டிருந்ததே தவிர அதை எடுக்க அவர்களால் முடியவில்லை.
இதற்குள் வங்கி மேலாளர்களும் உயர் அதிகாரிகளும் விசாரணைகளைத் தொடங்கினர். கணினியில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் இப்படி அதிகத் தொகை வரவு வைக்கப்பட்டது தெரிந்தது. இப்போது அனைவருடைய கணக்குகளும் சரிபார்க்கப்படுகின்றன. இது தவறுதலாக நடந்ததா, சதியா, மோசடியா என்றும் விசாரிக்கின்றனர்.
கட்டிஹார் மாவட்ட ஆட்சியர் உதயன் மிஸ்ரா, இன்று (செப். 16) காலை அந்த வங்கிக் கிளைக்குச் சென்றார். கணக்குகளை ஆராயுமாறு கிளை மேலாளருக்கும் இதர அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டார். வங்கியிடம் விரிவான அறிக்கையைக் கேட்டிருக்கிறார் ஆட்சியர்.
பிஹாரில் இப்படி வங்கிக் கணக்குக்கு பெரும் தொகை வருவது இது முதல் முறையல்ல. பாட்னாவின் புறநகர்ப் பகுதியில் வசிக்கும் ஒருவருடைய வங்கிக் கணக்குக்கு இப்படி 5 லட்சம் ரூபாய் கூடுதலாக வந்தது. அதை அவர் வங்கிக்குத் திருப்பித்தர மறுத்துவிட்டார். பிரதமர் நரேந்திர மோடி தனக்கு அனுப்பியது அந்தத் தொகை என்று ஒரேயடியாகக் கூறிவிட்டார். அதிகாரிகள் சும்மா விடாமல், அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.