பட்டாசுக்கு டெல்லியில் இந்த ஆண்டும் தடை


டெல்லி மத்திய ஆட்சிப் பகுதியில் இந்த ஆண்டும் தீபாவளிக்காகப் பட்டாசுகளை விற்கவும் வெடிக்கவும் கூடாது என்று ஆம்ஆத்மி அரசு இன்று (செப் 15) தடை விதித்தது.

பெருந்தொற்றுப் பரவல் இன்னமும் முழுமையாக முடிவுக்கு வராமல் இருப்பதாலும், கடந்த ஆண்டு நகரக் காற்றின் மாசு அளவு படுமோசமாக உயர்ந்து ஏராளமானோர் மருத்துவமனைக்குச் செல்லும் நிலை ஏற்பட்டதாலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இந்தத் தடை தீபாவளியையொட்டி அறிவிக்கப்பட்டதால் ஏற்கெனவே பட்டாசுகளை வரவழைத்துவிட்ட வியாபாரிகள் நஷ்டப்பட நேர்ந்தது. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வெடிக்க வேண்டாம் என்றும், இந்துமத ஆர்வலர்கள் - ஒரு நாள் வெடித்தால் என்ன என்றும் எதிரும் புதிருமாக மல்லுக்கு நின்றதால் பதற்றமும் ஏற்பட்டது. இவற்றுக்கு இடம் தரக்கூடாது என்பதற்காக முன்கூட்டியே இந்த முடிவை எடுத்து அறிவிப்பதாக டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார். பட்டாசுகளை வாங்குவதோ, கையிருப்பில் வைத்திருப்பதோ, தீபாவளியையொட்டிய நாள்களில் வெடிப்பதோ கூடாது என்று தடை ஆணை சொல்கிறது.

காற்றில் மாசுத்துகள்கள் குறைந்தபட்சம் இவ்வளவு இருக்கலாம் என்று அனுமதிக்கப்பட்ட அளவைக்காட்டிலும் ஆறு மடங்கு தீபாவளியையொட்டிய நாள்களில் காணப்பட்டன. இது நுரையீரல் பாதிப்பு, காசநோய், இருமல், ஆஸ்துமா நோயாளிகளுக்கு நோயின் தீவிரத்தை அதிகப்படுத்தியது. கோவிட்-19 காய்ச்சலால் அவதிப்பட்டவர்களும் காற்று மாசால் மேலும் துயரப்பட்டனர். மக்களின் உடல் நலன் கருதி இந்த முடிவை டெல்லி அரசு எடுத்திருக்கிறது.

x