”இந்துக்கள் சகிப்புத்தன்மை மிகுந்தவர்கள்...ஆனால் வலதுசாரி இந்துக்களோ தாலிபான்கள்!”


ஜாவேத் அக்தர்

இந்தி திரைப்படப் பாடலாசிரியரும் உருதுக் கவிஞரும் எழுத்தாளருமான ஜாவேத் அக்தர், “உலகிலேயே மிகவும் கண்ணியமானவர்கள், அதிக சகிப்புத்தன்மை உள்ள பெரும்பான்மை சமுதாயம் இந்துக்கள்தான்; இந்தியா என்றைக்கும் ஆப்கானிஸ்தானாகாது, காரணம் இந்தியா மத அடிப்படைவாத நாடு அல்ல” என்று பாராட்டியுள்ளார்.

ஆப்கானிஸ்தான் சம்பவங்கள் குறித்து கருத்து தெரிவித்தபோது, ஆர்எஸ்எஸ் மற்றும் விசுவ ஹிந்து பரிஷத் ஆகியவற்றையும் தாலிபான்களோடு ஒப்பிட்டார். இத்தனைக்கும் ஆர்எஸ்எஸ்ஸை அவர் பெயர் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. “அங்கே இஸ்லாமிய அரசை உருவாக்க விரும்புகின்றனர், இங்கேயோ இந்து ராஷ்ட்ரம் அமைக்க வேண்டும் என்கின்றனர்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இதை, சிவசேனை சார்பில் வெளியாகும் ‘சாம்னா’ பத்திரிகை தன்னுடைய தலையங்கத்தில் வன்மையாகக் கண்டித்தது. ஆர்எஸ்எஸ் இயக்கத்துடன் தங்களுக்குக் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அவர்களைத் தாலிபான்களோடு ஒப்பிடுவதை ஏற்க முடியாது என்று எழுதியது. இந்துத்துவம் என்ற கருத்தை தாலிபான்களுடன் பொருத்துவது, இந்து கலாச்சாரத்தையே அவமதிக்கும் செயல் என்றும் அது சாடியது.

இதையடுத்து அதே ‘சாம்னா’ பத்திரிகையில், தன்னுடைய பெயரில் ஒரு கட்டுரையைத் தன்னிலை விளக்கமாக எழுதியிருக்கிறார் ஜாவேத் அக்தர்.

“சமீபத்திய நேர்காணலில் கூறியிருக்கிறேன், உலகிலேயே மிகவும் கண்ணியமான - சகிப்புத்தன்மை அதிகமுள்ள பெரும்பான்மை சமூகத்தவர் இந்துக்கள்தான். இந்தியா எப்போதுமே ஆப்கானிஸ்தானாகாது என்பதையும் அதில் வலியுறுத்தி இருக்கிறேன். காரணம், இந்தியர்கள் தீவிரவாதிகள் அல்லர். மிதவாதம் என்பது அவர்களுடைய மரபணுவிலேயே ஊறியிருக்கிறது. எந்தக் கொள்கையாக இருந்தாலும் சார்பு எடுக்காமல் நடுநிலை வகிக்கக்கூடியவர்கள் இந்துக்கள்.

என்னைத் தாக்கி எழுதுகிறவர்களுக்குக் கோபம் ஏன் என்றால், தாலிபான்களுக்கும் ஹிந்து வலதுசாரிகளுக்கும் ஒரேவித மனப்பாங்கு இருப்பதை அவர்கள் பார்க்கிறார்கள். தாலிபான்கள் மத அடிப்படையில் அரசு அமைக்க விரும்புகின்றனர், வலதுசாரி இந்துக்கள் ஹிந்து ராஷ்ட்ரம் வேண்டும் என்கின்றனர். தலிபான்கள் பெண்களின் உரிமைகளைக் கட்டுப்படுத்த விரும்புகின்றனர். பெண்கள் சுதந்திரமாக இருப்பதைத் தாங்கள் விரும்பவில்லை என்பதை இங்குள்ள வலதுசாரி இந்துக்கள் உணர்த்திவிட்டனர்.

மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே மிகச்சிறந்த குணநலன்களைப் பெற்றிருக்கிறார். அவர் ஒருதலைபட்சமாக நடக்கிறார் என்றோ, அநீதி இழைக்கிறார் என்றோ அவரை அரசியல்ரீதியாக கடுமையாக விமர்சிக்கும் விமர்சகர்களால்கூட குற்றஞ்சாட்ட முடியாது. உத்தவ் அரசை ‘தாலிபானி’ என்று எப்படி ஒருவரால் முத்திரை குத்த முடியும் என்பதை என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை.”

இவ்வாறு அந்தக் கட்டுரையில் ஜாவேத் அக்தர் எழுதியிருந்தார்.

x