பெட்ரோல், டீசல் மீது மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் வரிகளால் ஏற்படும் சுமையைக் குறைப்பது குறித்து வெள்ளிக்கிழமை (செப்.17) நடக்கவிருக்கும் ஜிஎஸ்டி பேரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்று தெரிகிறது.
பெட்ரோல், டீசல் மீது மத்திய அரசு உற்பத்தி வரியையும் மாநில அரசுகள் விற்பனை வரியையும் விதிக்கின்றன. இந்த வருவாய் கணிசமானது என்பதாலும் பெருந்தொற்றால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டு வரி விதிப்பின் மூலம் கிடைக்க வேண்டிய வருவாய் குறைந்துவிட்டதாலும் எந்த அரசும் இந்த வருவாயை இழக்கத் தயக்கம் காட்டுகின்றன. எனவேதான் வரியைக் குறைக்குமாறு மாநில அரசுகள் மத்திய அரசையும், மத்திய அரசு மாநிலங்களையும் பரஸ்பரம் கேட்டுக்கொள்கின்றன. தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்கள் வரியைச் சிறிது குறைத்தாலும், நுகர்வோருக்கு அதிக பலன் கிடைக்காதபடிக்கு சர்வதேச சந்தையில் தொடர்ந்து உயர்ந்துவரும் கச்சா பெட்ரோலிய எண்ணெய் விலை நீர்த்துப்போகச் செய்கிறது.
அதே வேளையில், நுகர்வோரை இந்த விலையுயர்வு பாதிப்பதும் இதனால் பணவீக்க விகிதம் அதாவது விலைவாசி உயர்வதும் ரிசர்வ் வங்கியால் கவலையுடன் பார்க்கப்படுகிறது. பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைத்தால் அவற்றின் நுகர்வு அதிகமாகி அரசுக்கு மேலும் வருவாய் கிடைக்கும் என்பதைத் தமிழக அரசின் நடவடிக்கை உணர்த்தியிருக்கிறது. அது மட்டுமல்லாமல், பல தொழிற்சாலைகளின் உற்பத்திச் செலவு கூடுவதால் அவற்றால் சந்தையில் போட்டி போட முடியாமல் உற்பத்தியே பாதிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. சரக்கு, சேவைக் கட்டணங்களும் இதனால் அதிகரித்துவருகிறது.
இந்தக் காரணங்களால், அனைத்து மாநில நிதியமைச்சர்களும் ஏற்றால் பெட்ரோல், டீசல் மீதான வரி விதிக்கும் அதிகாரத்தை மத்தியப் பட்டியலுக்கு மாற்ற மத்திய அரசு விரும்புகிறது. ஜிஎஸ்டி அறிமுகத்தால் ஏற்கெனவே நிதியதிகாரத்தை இழந்துவிட்ட மாநில அரசுகள், காமதேனுவாகத் திகழும் பெட்ரோல், டீசல் மீதான வரிவிதிப்பு அதிகாரத்தையும் விட்டுத்தருமா என்பது கேள்விக்குறி. 3-ல் இரண்டு பங்கு பேரவை உறுப்பினர்கள் சம்மதித்தால்தான் எந்த முடிவையும் மத்திய அரசால் எடுக்க முடியும்.
இப்போது பாஜகவும் அதன் தோழமைக் கட்சிகளும் ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கைக்குச் சமமாக பிற எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களும் இருக்கின்றன. மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளம், மகாராஷ்டிரம், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்கள் மத்திய அரசுக்கு எதிரான நிலையையே பெரும்பாலும் எடுக்கின்றன. எனவே இந்த முயற்சி பலன் அளிக்குமா அல்லது பழைய நிலையே தொடரட்டும் என்று முடிவு செய்வார்களா என்று பார்க்க வேண்டும்.
பெட்ரோல், டீசல் வரி விதிப்பு குறித்து ஜிஎஸ்டி பேரவைக் கூட்டம் விவாதிக்குமா என்பதுகூட அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆனால், தகவல் அறிந்த வட்டாரங்கள் தங்களை மேற்கோள் காட்டவேண்டாம் என்ற நிபந்தனையுடன் இதைத் தெரிவித்துள்ளன. மத்திய நிதியமைச்சர் தலைமையிலான ஜிஎஸ்டி பேரவையில் அனைத்து மாநில நிதியமைச்சர்களும் உறுப்பினர்களாக இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.