ஒரு தேவதை வந்துவிட்டாள்! மகள் பிறந்ததை இலவச பானிபூரி வழங்கிக் கொண்டாடிய வியாபாரி


மாதிரிப் படம்

பெண் குழந்தைகள் பிறந்தால், உதட்டில் சிரிப்பைக் காட்டி உள்ளுக்குள் மருகும் தந்தைமார்களே அதிகம் உள்ள இந்த நாட்டில், போபாலைச் சேர்ந்த பானி பூரி விற்பனையாளர் அன்சல் குப்தா (28), தனக்கு மகள் பிறந்ததை முன்னிட்டு அனைவருக்கும் இலவச பானி பூரி வழங்கி அசத்திவிட்டார்!

அன்சல் குப்தாவுக்கு சில நாட்களுக்கு முன்னால் பெண் குழந்தை பிறந்தது. அதைக் கேட்ட சக வியாபாரிகளும் வாடிக்கையாளர்கள் பலரும் முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு, “பார்த்துப்பா... நிறைய சம்பாதித்து சேமித்துக்கொள். மகள் திருமணத்துக்கு செலவழிக்க வேண்டும்” என்று அறிவுரை கூறினார்கள். இதைக் கேட்டு அவர் வியப்பும் வருத்தமும் அடைந்தார். 'பெண் குழந்தை என்றாலே ஏன் இப்படி துக்கம் கொண்டாடுகிறார்கள்? இது சரியில்லை என்று இவர்களுக்கு எப்படி உணர்த்துவது?' என்று சிந்தித்தார்.

இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை (செப்.12) ‘பிற்பகல் 1 மணி முதல் 6 மணி வரை இங்கு பானி பூரி இலவசம்’ என்று அறிவித்து 3 இடங்களில் வழங்க ஆரம்பித்தார். கூட்டம் கட்டுக்கடங்காமல் பெருகியது. யாரும் கோவிட் பெருந்தொற்றுக்கால நடைமுறைகளைப் பின்பற்றத் தயாராக இல்லை. பானி பூரியை வாங்குவதிலேயே குறியாக இருந்தார்கள். பலமுறை சொல்லிப் பார்த்தும் கேட்காததால், மனதை கல்லாக்கிக் கொண்டு அறிவித்தபடி அனைவருக்கும் பானி பூரி வழங்கினார்.

‘பானி பூரியை ஏன் இலவசமாக வழங்குகிறீர்கள்’ என்று கேட்டவர்களுக்கு, தனக்கு மகள் பிறந்திருப்பதையும் அதை பெருமையுடனும் உற்சாகமாகவும் கொண்டாடவே இப்படிச் செய்வதாகவும் தெரிவித்தார். பெண் குழந்தைகள் குறித்த முற்போக்குச் சிந்தனை கொண்ட அன்சல் குப்தாவை, அனைவரும் பாராட்டினர்!

x