சத்தீஸ்கர் மாநிலத்தின் கோர்பா மாவட்ட நீதிபதி பி.பி. வர்மா, தனது கருணை மிக்க செயல்மூலம் நீதித் துறை வரலாற்றில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியிருக்கிறார். துவாரகா பிரசாத் கன்வர் (42) காரோட்டிச் சென்றபோது ஒரு டிரெயிலர் மீது மோதி விபத்தில் சிக்கினார். அப்போது அவருக்கு முதுகுத்தண்டு உள்பட உடலின் பல பகுதிகளிலும் பலத்த காயம் ஏற்பட்டது. சில நாள்களுக்கெல்லாம் அவருக்குப் பக்கவாதமும் ஏற்பட்டது. இதனால் நடமாட முடியாமல் படுக்கையிலேயே முடங்கினார்.
சாலை விபத்தில் படுகாயமடைந்து வாழ்வாதாரம் இழந்த தனக்குத் தகுந்த இழப்பீடு வேண்டும் என்று தான் காப்புறுதி செய்த நிறுவனத்திடம் முறையிட்டார். அந்த வழக்கு, விபத்து நடந்த டிசம்பர் 2018 முதல் விசாரணையிலேயே இருந்தது. இந்நிலையில், கடந்த சனிக்கிழமை தேசிய அளவில் மக்கள் நீதிமன்ற விசாரணை மூலம் இத்தகைய வழக்குகளில் தீர்ப்புகள் வழங்கப்பட்டன. இந்த வழக்கின் தீர்ப்பைப் படிக்க நீதிபதி வர்மா முற்பட்டபோதுதான் வழக்கு தொடுத்தவர் நீதிமன்றத்துக்கு வர முடியாமல் தன்னுடைய காரிலேயே வெளியில் காத்திருப்பதாக வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
கன்வர் சார்பில் வாதாடிய பி.எஸ். ராஜ்புத், இன்சூரன்ஸ் நிறுவனம் சார்பில் ஆஜரான ராம்நாராயண் ரத்தோர் உடன் வர நேராக வாகன நிறுத்துமிடத்துக்கே சென்ற நீதிபதி, ரூ.20 லட்சம் இழப்பீடு தர வேண்டும் என்ற உத்தரவைப் படித்துவிட்டு அதில் கையெழுத்திட்டு அவரிடம் அளித்தார். நீதிபதியின் கருணையையும் பெருந்தன்மையையும் கண்ட கன்வர் கண்ணீர் பொங்க நன்றி தெரிவித்தார். அது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.