பாஜகவில் இணைந்தார் ஜைல் சிங்கின் பேரன்


முன்னாள் குடியரசுத் தலைவர் ஞானி ஜைல் சிங்கின் பேரன் இந்தர்ஜீத் சிங், பாரதிய ஜனதாவில் சேர்ந்தார். டெல்லியில் பாஜக கட்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, கட்சியின் பஞ்சாப் மாநிலப் பொறுப்பாளர் துஷ்யந்த் கௌதம் முன்னிலையில் அவர் உறுப்பினர் ஆனார்.

“காங்கிரஸ் கட்சி என்னுடைய தாத்தாவை கண்ணியமாக நடத்தவில்லை. டெல்லியில் மதன்லால் குரானாவுக்காகச் சிறு வயதில் தேர்தல் பிரச்சாரம் செய்தேன். நான் பாஜகவில் உறுப்பினராகச் சேர வேண்டும் என்று என்னுடைய தாத்தா ஜைல் சிங் விரும்பினார். அவர் என்னை அடல் பிஹாரி வாஜ்பாய், லால் கிருஷ்ண அத்வானி ஆகியோருக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். தாத்தாவின் விருப்பத்தை இதன் மூலம் நிறைவேற்றியிருக்கிறேன்” என்று இந்தர்ஜீத் சிங் தெரிவித்தார்.

பஞ்சாப் மக்களுடைய மனதில் பாஜக இடம்பிடித்து வருவதை இந்தர்ஜீத் சிங்கின் வருகை உணர்த்துகிறது என்று துஷ்யந்த் கௌதம் பின்னர் நிருபர்களிடம் தெரிவித்தார்.

சீக்கியர்களில் ராம்கடியா என்ற பிரிவைச் சேர்ந்தவர் ஜைல் சிங். சீக்கிய மத நூல்களை நன்கு கற்றவர் என்பதால் அவருக்கு ‘ஞானி’ என்ற அடைமொழி தரப்பட்டது. ராம்கடியா சீக்கியர்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர். பஞ்சாபின் தோபா, மாஜா பிரதேசங்களில் கணிசமான எண்ணிக்கையில் வசிக்கின்றனர்.

x