பெகாசஸ் விவகாரம் அனைவருக்கும் தெரிய வேண்டிய விஷயமல்ல


பெகாசஸ் உளவு விவகாரம் தொடர்பாக விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்யப் போவதில்லை என்றும், இது அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய விஷயம் இல்லை என்றும் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறது மத்திய அரசு.

இந்தியாவின் முன்னூறுக்கும் மேற்பட்ட அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், முக்கியப் பிரமுகர்கள் ஆகியோரின் செல்போன்களை பெகாசஸ் உளவு மூலம் உளவு பார்த்ததாக சர்வதேச ஊடகக் கூட்டமைப்பு தெரிவித்த புகார் இந்தியாவில் புயலைக் கிளப்பியது. இந்த விவகாரத்தை முன்வைத்து எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை முடக்கின.

இதுதொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. தலைமை நீதிபதி என்.வி. ரமணா, நீதிபதிகள் சூரியகாந்த், ஹிமா கோஹ்லி அடங்கிய அமர்வு இன்று விசாரணை நடத்தியது. அரசு சார்பில் விசாரணைக்கு வந்த சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, விரிவான அறிக்கை அளிக்க அவகாசம் தேவை என்று கோரினார். “உளவு விவகாரத்துக்கு அரசு எந்தமாதிரியான மென்பொருளைப் பயன்படுத்துகிறது என்பது மக்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை. பயங்கரவாத அமைப்புகளின் செயல்களை அறிய அரசு எந்த மென்பொருளைப் பயன்படுத்துகிறது என்பதைச் சொல்வது அந்த அமைப்புகளுக்குத்தான் சாதகமாகிவிடும். இந்த விவகாரம் குறித்து அரசுக்குக் கட்டுப்படாத நிபுணர்களைக் கொண்ட குழு விசாரித்து உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தரட்டும். தங்களுடைய தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுவதாக வழக்கு தொடர்ந்துள்ளவர்களின் புகார்கள் சரிதானா என்பதை அரசு நியமிக்கும் தொழில்நுட்ப நிபுணர்கள் குழு ஆராயும். அரசு உளவு பார்த்ததா அல்லது வேறு யாராவது அவர்களுடைய தொலைபேசிகளை இடைமறித்துக் கேட்கிறார்களா என்பது அதன் மூலம் தெரியவரும்” என்று தெரிவித்தார்.

இதையடுத்து, “இடைக்கால உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்க இரண்டு அல்லது மூன்று நாள்கள் ஆகலாம். இந்த விவகாரத்தில் அரசு சுற்றிவளைத்துப் பேச வேண்டாம். குழுவை அமைத்து அந்தக் குழு அறிக்கை அளித்தால் அது பொதுவெளிக்கு வந்துவிடும், நன்கு ஆலோசித்துக் கூறுங்கள்” என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு எச்சரித்தது. “அந்த அறிக்கையைப் பெற்றதும் அதை அனைவரும் அறியுமாறு வெளியிடுவதா, தங்களிடம் மட்டும் வைத்துக்கொள்வதா என்பதை உச்ச நீதிமன்றமே தீர்மானித்துக்கொள்ளலாம்” என்று துஷார் மேத்தா அதற்குப் பதில் அளித்தார்.

“பெகாசஸ் நிறுவனம் தங்களுடைய செல்போன்களை ஒட்டுக்கேட்டதாக மனு தாக்கல் செய்தவர்கள் செய்திகளின் அடிப்படையிலும், அரசு தங்களை உளவு பார்த்திருக்கலாம் என்ற அனுமானத்தின் பேரிலும், ஊடகங்களில் வெளியான, ஆதாரபூர்வமற்ற தகவல்களின் அடிப்படையிலும் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்” என்று மத்திய அரசு முதலில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் சுட்டிக்காட்டியிருந்தது.

“இந்த விவகாரத்தில் அரசின் நிலை என்ன என்பதை தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நாடாளுமன்றத்திலேயே விளக்கமாகத் தெரிவித்துவிட்டார்” என்பதையும் அரசு தனது பிரமாணப் பத்திரத்தில் சுட்டிக்காட்டியது. “உள்நோக்கம் கொண்ட சில சக்திகள், அரசுக்கு எதிராக வேண்டுமென்றே தவறான கருத்துகளைத் தொடர்ந்து பரப்பிவருவதால் அவற்றைக் களைய வேண்டும் என்ற நோக்கிலேயே நிபுணர்களின் குழுவை அமைக்க அரசு முன்வந்துள்ளது” என்று அரசின் அறிக்கை கூறுகிறது.

“நாட்டின் உச்ச நீதிமன்றத்தில், இந்திய அரசு தனது தரப்பைக் கூறியிருக்கிறது. இந்த விவகாரத்தில் நாங்கள் எதைக் கூற வேண்டுமோ அதை கடந்த பிரமாணப் பத்திரத்திலேயே கூறிவிட்டோம். அதை ‘எங்களுடைய நிலையிலிருந்தும்’ ஆராயுமாறு கனிவோடு கேட்டுக்கொள்கிறோம்” என்று அரசு கோரியுள்ளது.

முன்னதாக, “நாட்டின் பாதுகாப்புக்கு சேதத்தை ஏற்படுத்தக்கூடிய எதையும் அரசு வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டியதில்லை” என்று ஆகஸ்ட் 17-ல் உச்ச நீதிமன்றம் தான் அளித்த நோட்டீஸில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

x