அசாம், உத்தராகண்ட், கர்நாடகம், குஜராத்... அடுத்தடுத்து முதல்வர்களை மாற்றும் பாஜக


குஜராத் முதல்வர் பதவியிலிருந்து விஜய் ரூபானி ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, புதிய முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பூபேந்திர படேல் இன்று பதவியேற்கிறார். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக பாஜக ஆளும் மாநிலங்களில் முதல்வர்கள் மாற்றம் நடந்துவருவதன் பின்னணி என்ன எனும் கேள்வி எழுந்திருக்கிறது.

ஆளுமைப் போட்டி

முதலில் அசாமில் முதல்வர் மாற்றம் நிகழ்ந்தது. அம்மாநில முதல்வராக இருந்த சர்வானந்த சோனோவால், இந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றிபெற்ற நிலையிலும், முதல்வர் பதவியில் நீடிக்கும் வாய்ப்பை இழந்தார். ஏற்கெனவே முதல்வராக இருப்பவர்களையே தேர்தல்களில் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தும் பாஜக, அந்தத் தேர்தலில் அப்படி யாரையும் முன்னிறுத்தவில்லை. முந்தைய பாஜக ஆட்சியில் சர்வானந்த சோனோவாலுக்கும், அமைச்சர் ஹிமந்த் பிஸ்வ ஷர்மாவுக்கும் இடையே அதிகாரப் போட்டி இருந்தது. இந்தச் சூழலில், 2021 தேர்தலில் பாஜக வெற்றிபெற ஹிமந்த் முக்கியக் காரணமாகக் கருதப்பட்டார். நிதித் துறையுடன் சுகாதாரத் துறையையும் கையில் வைத்திருந்த ஹிமந்த், கரோனா பரவலைத் தடுப்பதில் காட்டிய முனைப்பு அவருக்கு நற்பெயரைப் பெற்றுத்தந்தது. இந்தக் காரணிகளை முன்வைத்து முதல்வர் பதவியை அவருக்குக் கைமாற்றிவிட்டது பாஜக தலைமை.

ஊழல் புகார்கள்

அதேபோல உத்தராகண்ட், கர்நாடகம் ஆகிய மாநிலங்களிலும் முதல்வர்கள் மாற்றப்பட்டனர். குறிப்பாக, கர்நாடகத்தில் உட்கட்சிக் குழப்பங்கள் உச்சமடைந்த நிலையில் எடியூரப்பா பதவிவிலக நேர்ந்தது. அவரது இளைய மகன் பி.ஒய்.விஜயேந்திரா ஆட்சி நிர்வாகத்தில் தலையிடுவதாக எழுந்த புகார்கள் அவரது பதவிக்கு உலைவைத்தன. பத்ரா நீர்ப்பாசனத் திட்டத்தில் ரூ.2,000 கோடிக்கு ஊழல் செய்திருப்பதாகவும் விஜயேந்திரா மீது குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து எடியூரப்பா பதவி விலக வேண்டும் என அம்மாநில பாஜக தலைவர்கள் பலர் போர்க்கொடி தூக்கினர். விளைவாக, எடியூரப்பா ராஜினாமா செய்தார்.

அந்த வரிசையில், கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதில் தவறிவிட்டதாகவும், வளர்ச்சிப் பணிகள் முடங்குவதற்குக் காரணமாக இருந்ததாகவும் விமர்சிக்கப்பட்ட விஜய் ரூபானிக்குக் கட்சித் தலைமையிலிருந்து அழுத்தம் தரப்பட்ட நிலையில், அவர் பதவி விலகிவிட்டார். அடுத்த ஆண்டு தேர்தலைச் சந்திக்கவிருக்கும் குஜராத்தில் இந்நகர்வு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

சாதிக் கணக்கு

தேர்தல்களில் வெற்றிபெற, எல்லாவிதமான சூத்திரங்களையும் பயன்படுத்தும் பாஜக அதிகாரத்தைக் கைமாற்றிவிடும் விஷயத்திலும் மிகுந்த கவனத்துடன் செயல்படுகிறது. ஊழல் புகார்கள், செயல்பாட்டில் சுணக்கம் உள்ளிட்ட விமர்சனங்களுக்குள்ளாகும் தலைவர்களை மாற்றுவதற்கு பாஜக தயங்குவதில்லை. இன்னொரு புறம், வெற்றியை உறுதிசெய்ய சாதிக் கணக்குகளை வைத்து சூழலைச் சமன் செய்யும் உத்தியையும் கடைப்பிடிக்கிறது.

கர்நாடகத்தில் பாஜகவின் வாங்கு வங்கியாகக் கருதப்படும் லிங்காயத்து சமூகத்தைச் சேர்ந்த எடியூரப்பாவுக்குப் பதிலாக, அதே சமூகத்தைச் சேர்ந்த பசவராஜ் பொம்மை முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். குஜராத்தைப் பொறுத்தவரை பாடிதார் சமூகத்தினர் மிகுந்த முக்கியத்துவம் கொண்டவர்கள் என்பதால், அந்தச் சமூகத்தைச் சேர்ந்த பூபேந்திர படேல் முதல்வராகத் தேர்வுசெய்யப்பட்டிருக்கிறார். குஜராத் மக்கள்தொகையில் 10 முதல் 14 சதவீதம் வரை உள்ள பாடிதார் சமூகத்தினர், அம்மாநில அரசியலிலும் பெருமளவில் ஆதிக்கம் செலுத்துபவர்கள். குஜராத்தின் 3-ல் ஒரு பங்கு எம்எல்ஏ-க்கள் பாடிதார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளையில், இந்த மாநிலங்களில் அதிகாரப் பரிமாற்றம் பெரும்பாலும் அமைதியான முறையிலேயே நடந்திருப்பது பாஜக தலைமை, கட்சியைக் கட்டுக்கோப்பாக வைத்திருப்பதற்குச் சான்று என அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

x