நீதித் துறைக்கு அலுவலகங்கள், அடிப்படை வசதிகள் குறைவு


போதிய அடித்தளக் கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் நீதிமன்றக் கட்டிடங்களும் நீதித் துறை சார்ந்த அலுவலகங்களும் செயல்பட வேண்டிய அவலநிலை இருப்பதாக உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா வேதனை தெரிவித்திருக்கிறார்.

உத்தர பிரதேசத்தின் அலாகாபாத் உயர் நீதிமன்றம் செயல்பாட்டுக்கு வந்து 150 ஆண்டுகள் கடந்ததைக் குறிக்கும் நிகழ்ச்சி நேற்று (செப்.11) நடந்தது. அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய என்.வி.ரமணா, “நீதித் துறைக்குத் தேவைப்படும் கட்டிடங்கள், அலுவலகங்கள் இதர வசதிகள், வழக்காட வரும் மனுதாரர்கள், நீதித்துறை ஊழியர்கள், வழக்கறிஞர்கள் ஆகியோருக்கு தேவைப்படும் அடிப்படை வசதிகள் போன்றவை பெரும்பாலும் போதாது என்பது மிகையான கருத்தே அல்ல. இந்த நிலையில்தான் நீதிமன்றங்களில் விசாரிக்கப்படாமல் தேங்கும் வழக்குகளின் எண்ணிக்கை குறித்தும் கவலை அதிகமாகிறது. பணியாற்றுவதற்கு உற்சாகமான சூழல் இல்லை. எனவே மிகுந்த சிரமத்துக்கிடையேதான் நீதித் துறை செயல்பட வேண்டியிருக்கிறது” என்று கூறினார்.

மேலும், “அலாகாபாத் உயர் நீதிமன்றத்தில் தேங்கியுள்ள வழக்குகளின் எண்ணிக்கை தொடர்பாக நான் யாரையும் சுட்டிக்காட்டி குறைகூற வரவில்லை. இது மிகவும் கவலையளிக்கும் எண்ணிக்கையாகும். அலாகாபாத் நீதிபதிகளும் வழக்கறிஞர்களும் இணைந்து ஒத்துழைத்து இந்த எண்ணிக்கை குறைய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.

உத்தர பிரதேசத்தின் அலாகாபாத் உயர் நீதிமன்றத்தில் மட்டும் 1.8 லட்சம் குற்றவியல் வழக்குகள் விசாரணையின்றி நிலுவையில் இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் சமீபத்தில் அளித்த தகவலில் அலாகாபாத் உயர் நீதிமன்றமே குறிப்பிட்டிருக்கிறது. 2000-வது ஆண்டு முதல் முயன்று 31,044 வழக்குகளைத் தீர்த்திருப்பதாகவும் கூறுகிறது.

சட்ட வரலாற்றில் தனியிடம் பிடித்த தீர்ப்பு

“150 ஆண்டுகளைக் கடந்த அலாகாபாத் உயர் நீதிமன்றம் நெடிய, மரியாதைக்குரிய பாரம்பரியம் பெற்றது. இந்த நீதிமன்றத்தின் பல தீர்ப்புகள் நாடு முழுவதும் பேசப்படும் அளவுக்கு முன்னுதாரணங்களாகத் திகழ்கின்றன. 1975-ல் அன்றைய பிரதமர் இந்திரா காந்தியின் தேர்தல் செல்லாது என்று நீதிபதி ஜக்மோகன்லால் சின்ஹா அளித்த தீர்ப்பு இந்திய அரசியல், சட்ட வரலாற்றில் தனியிடம் பிடித்துவிட்டது. அந்தத் தீர்ப்புக்குப் பிறகு நாடாளுமன்றத்தில் தனக்கிருந்த பெரும்பான்மை வலு காரணமாக, தீர்ப்பையே செல்லாதாக்கிய இந்திரா காந்தி, நாட்டில் நெருக்கடி நிலை நிலவுவதாக அறிவித்து மக்களுடைய அடிப்படை உரிமைகளைக்கூட முடக்கினார். பிறகு எதிர்க்கட்சித் தலைவர்களை சிறையில் அடைத்தார். அதன் பிறகு நடந்தவை தனி வரலாறு” என்று நினைவுகூர்ந்த தலைமை நீதிபதி என்.வி.ரமணா, துணிச்சலான அந்தத் தீர்ப்பை எழுதும் அளவுக்கு அலகாபாத் நீதிமன்றம் தனித்துவத்துடன் செயல்பட்டதைப் பாராட்டினார்.

x