ரயில் பெட்டிகள் விற்பனைக்கு: ரயில்வே அமைச்சகம் பரிசீலனை


ரயில் பெட்டிகளைத் தனியார் முழுதாக விலைக்கு வாங்கிக்கொள்ளவோ, குத்தகைக்கு சில காலம் வைத்து பயன்படுத்தவோ தகுந்த கொள்கையை உருவாக்க உயர் அதிகாரிகளைக் கொண்ட குழுவை ரயில்வே அமைச்சகம் நியமித்திருக்கிறது.

இந்தியாவில் இப்போது சுற்றுலாப் பயணிகளுக்காக வைணவ திவ்வியதேசங்கள், சிவாலயங்கள், ராமாயணம் தொடர்பான ஊர்கள், மகாபாரதம் நிகழ்ந்த பகுதிகள், பௌத்த தலங்கள், மலைவாசஸ்தலங்கள், உயிரியல் பூங்காக்கள் என்று பல்வேறு வகை தொகுப்புகளில் சுற்றுலா ரயில்கள் விடப்படுகின்றன. இவை போல தனியார் – குறிப்பாக சுற்றுலா, விருந்தோம்பல் துறையில் உள்ளவர்கள் – தங்களுக்கு உகந்தார் போல ரயில் பெட்டிகளைப் பெற்று சேவையளிக்க என்ன செய்யலாம் என்று இந்தக் குழு ஆலோசனைகளை வழங்கும். குறைந்தபட்சம் 16 பெட்டிகளாகத்தான் விற்கப்படும், ஐந்து ஆண்டுகளாவது அவற்றைக் குத்தகைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது முக்கிய நிபந்தனைகளாக இருக்கும்.

தனியாரிடம் ரயில் சேவையை ஒப்படைக்க அரசு தயார் என்று அறிவித்தாலும் அதில் உள்ள இடர்களாலும் அதற்காகும் செலவுக்கு அஞ்சியும் தனியார் யாரும் இதில் ஆர்வம் காட்டுவதில்லை. ரயில்வே துறையின் சார்பு நிறுவனம் சில ரயில்களை இப்போது சிறப்பு சேவையில் ஈடுபடுத்தி வருகிறது. அரசுத் துறை நிறுவனமான இதன் சேவையைத்தான் இப்போது ரயில்வே அல்லாத தனியார் சேவையாகக் கருத வேண்டியிருக்கிறது.

ரயில் நிலையங்களும் ரயில் பாதைகளும் இதர அடித்தளக் கட்டமைப்புகளும் ரயில்வே துறை வசம் இருக்கும்போது தனியார் இதில் எப்படி லாபகரமாகச் செயல்பட முடியும் என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. ரயில்வே துறையை 100% தனியாரிடம் ஒப்படைப்பது சாத்தியமே இல்லை எனும் நிலையில் இந்த யோசனைகள் அனைத்தும் பேசி, பிறகு கைவிடப்படும் திட்டங்களாகவே தொடர்கின்றன.

x