பொருளாதாரத்தில் வலுவான மீட்சி: : பிரதமர் பெருமிதம்


பிரதமர் மோடி

கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் மிக மோசமாக பாதிப்படைந்த இந்தியப் பொருளாதாரம், அரசு எடுத்த நடவடிக்கைகளால் வலுவாக மீட்சி அடைந்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதப்பட்டார்.

புதிய வேலைகளில் பயிற்சி பெறுவதற்காக வரும் பெண்கள் தலைநகரில் தங்கிப் படிப்பதற்கான விடுதியைத் திறந்து வைத்து உரையாற்றுகையில் இதை அவர் குறிப்பிட்டார்.

“பெருந்தொற்றுக் காலத்தில் பொருளாதார வலிமை மிக்க நாடுகள் தங்களுடைய நிலையை அப்படியே பராமரிக்க கடும் முயற்சிகளை எடுத்த வேளையில், இந்தியா மட்டுமே சீர்திருத்த நடவடிக்கைகளைத் தொடர்ந்தது. தொழில் வளர்ச்சிக்கு அவசியமான மூலப்பொருள், துணைப் பொருள், உற்பத்தியான இறுதிப் பொருள்களை வழங்கும் சங்கிலித்தொடர் கண்ணிகள் அறுந்து நிலைகுலைந்த நிலையில், இந்திய அரசு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் வரி குறைப்பு, மானிய அதிகரிப்பு, வேறு சலுகைகள் என்று ஊக்குவிப்புகளை வழங்கியது. இதனால் பல்வேறு துறைகளில் உற்பத்தி பெருகி, ஏற்றுமதியும் அதிகரித்து வருகிறது. புதிய வாய்ப்புகள் இந்தியாவுக்குச் சாதகமாகத் தோன்றியுள்ளன. இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியமான பத்து பெரிய துறைகள் அடையாளம் காணப்பட்டு அவற்றுக்கென்று சிறப்பு ஊக்குவிப்பு திட்டங்கள் தனித்தனியாக வகுக்கப்பட்டன. சமீபத்தில் ஜவுளித்துறைக்கும் வகுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டிருக்கிறது.

“இந்த நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் பொருளாதார வளர்ச்சி ஓராண்டு முன்பிருந்ததைவிட 20.1% அதிகரித்திருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி வீதம் (ஜிடிபி) 24.4% சரிந்திருந்தது. இருபத்தோராவது நூற்றாண்டில் உலகின் பொருளாதாரத் தலைமை நாடாக நம்மைக் கருதிக்கொள்ள வேண்டும், வாய்ப்புகளுக்குப் பற்றாக்குறையே இல்லை” என்றார் பிரதமர் மோடி.

x