வருங்கால வைப்பு நிதியில் கோடிக்கணக்கில் கையாடல்


வருங்கால வைப்பு நிதியில் உள்ள பணத்தை, மூடப்பட்ட நிறுவனங்களின் தொழிலாளர்களுக்கு அளித்ததாகக் கணக்கு காட்டி, புலம்பெயர் தொழிலாளர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைத்து கோடிக்கணக்கில் பணத்தைக் கையாடல் செய்தது தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் முதல் ஜுன் வரையிலான காலத்தில் மட்டும் ரூ.2.71 கோடி சுருட்டப்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக மூன்று அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்திவருகிறது.

நாடு முழுவதும் 18 லட்சம் கோடி கணக்குகளை வருங்கால வைப்பு நிதி அலுவலகம் பராமரிக்கிறது. பெருந்தொற்றுக் காலத்தில் தொழிலாளர்கள் எளிதாகப் பணம் எடுக்க வசதியாக சில விதிகளை அரசு திருத்தியதைப் பயன்படுத்திக்கொண்டு இந்த மோசடியில் அந்தத் துறையில் வேலை செய்கிறவர்களே ஈடுபட்டுள்ளனர். சந்தன் குமார் சின்ஹா, உத்தம் தகராய் (கோவை), விஜய் ஜர்பே (சென்னை) ஆகிய வைப்பு நிதி உதவி ஆணையர்களுக்கு இதில் தொடர்பு இருப்பதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் மீது ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன.

ரகசியத் தகவல்

தன்னைப் பற்றிய தகவல்களைத் தெரிவிக்க விரும்பாத ஒருவர் மே 18-ல் இந்த மோசடிகள் குறித்து மேல் அதிகாரிகளுக்குத் துப்பு கொடுத்தார். இதையடுத்து வைப்புநிதி அதிகாரிகள் துறைக்குள்ளேயே அக தணிக்கை மேற்கொண்டனர். வைப்பு நிதி கணக்கு நடைமுறைகளைத் தெரிந்தவர்கள்தான் இந்த மோசடியைச் செய்திருக்கிறார்கள் என்பது முதல் கட்டத்தில் தெரியவந்தது. இதையடுத்து ஆகஸ்ட் 24-ல் சிபிஐயிடம் வைப்பு நிதி அலுவலகம் புகார் செய்தது. இதையடுத்து இதுதொடர்பாகத் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

போலி ஆவணங்கள்

புலம்பெயர் தொழிலாளர்கள், ஏழைகள் ஆகியோரிடம் அவர்களுடைய வங்கிக் கணக்கு எண், ஆதார் எண் ஆகியவற்றைச் சிறு தொகை கொடுத்து எழுதி வாங்கிக்கொண்ட கும்பல், நாட்டின் பல்வேறு பகுதிகளில் மேற்கொண்டு தொழில் நடத்த முடியாமல் மூடிவிட்ட தொழில் நிறுவனங்களின் கணக்குகளிலிருந்து அதன் தொழிலாளர்களுக்குப் பணம் தருவதாக ஆவணங்களைத் தயாரித்து, பணத்தைச் சுருட்டிவந்தது. ஐந்து லட்சம் ரூபாய்க்கு மேல் பணம் பெறப்படும்போது மட்டும்தான் உயர் அதிகாரிகள் அவற்றை இரண்டாவது முறை சரிபார்த்தலுக்கு எடுப்பார்கள். எஞ்சியவை கீழ்நிலை அதிகாரிகள் நிலையிலேயே முடிந்துவிடும். ரூ.2 லட்சம் முதல் ரூ.3.5 லட்சம் வரையில் பணத்தைத் திரும்பப் பெறுவதாக ஆவணங்களைப் போலியாகத் தயார்செய்து ஏமாற்றியிருக்கிறார்கள்.

மும்பையைச் சேர்ந்த விஜய்குமார் ஜூவல்லர்ஸ் நிறுவனம் 2009 செப்டம்பரில் மூடப்பட்டது. அதன் ஊழியர்களின் பெயர்களில் மட்டும் 91 முறை பணம் எடுத்திருக்கிறார்கள். ரூ.2,71,45,513 மதிப்புள்ள பணப் பரிமாற்றத்தை சந்தன் குமார் சின்ஹா அனுமதித்திருக்கிறார்.

மும்பை, கோரக்பூர், நாசிக், பாட்னா, காஜியாபாத், மதுரா ஆகிய ஊர்களிலிருந்து வங்கிக் கணக்குகளுக்குப் பணம் போயிருக்கிறது. இதில் தொடர்புள்ள 800 வங்கிக் கணக்குகளை முடக்குமாறு தொடர்புள்ள வங்கிகளுக்கு வருங்கால வைப்பு நிதி அலுவலகம் கடிதம் அனுப்பியது. அந்தக் கடிதம் போய்ச் சேருவதற்குள் வங்கிக் கணக்குகளிலிருந்து பணம் எடுக்கப்பட்டுவிட்டது.

சந்தன் குமார் சின்ஹாவின் ஊதியக் கணக்கில் ரூ.30,36,560 பணம் இருந்திருக்கிறது. அவருக்கு ஏப்ரல் 2019 முதல் ஜூலை 2021 வரையில் வழங்கப்பட்ட மொத்த ஊதியமே ரூ.12,90,057 தான்! வருவாய்க்குப் பொருந்தாத வகையில் அவர் கணக்கில் பணம் சேர்ந்திருக்கிறது.

வருங்கால வைப்பு நிதியில் நடந்திருக்கும் இந்த மெகா ஊழல் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

x