பனாரஸ் இந்து பல்கலையில் பாரதியார் பெயரில் இருக்கை


மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் நினைவு நாள் நூற்றாண்டை ஒட்டி, பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் அவருடைய பெயரில் தமிழ் ஆய்வுக்கான இருக்கையை அறிவித்திருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.

பாரதியின் நினைவுநாளான இன்று, அவருக்கு ட்விட்டரில் புகழஞ்சலி செய்திருக்கும் மோடி, பாரதியின் பெருமைகள் குறித்து கடந்த ஆண்டு பேசிய காணொலியை இணைத்திருக்கிறார். “உலகிலேயே மிகவும் பழமையான மொழி தமிழ். தமிழ்நாட்டிலே பிறந்து நாட்டுப் பற்றும் மொழிப்பற்றும் மிக்கவராகத் திகழ்ந்த பாரதியார் தனது கவிதைகளால் மக்களுக்கு தேசபக்தியையும் போராட்ட உணர்ச்சியையும் ஊட்டினார்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும், “தமிழ் மொழியின் ஆய்வுக்கு பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் வசதிகள் செய்யப்பட வேண்டுமென்று விரும்பினார். அவருடைய விருப்பம் இப்போது நிறைவேற்றப்படுகிறது. பாரதியார் பல்துறையிலும் ஞானம் பெற்றவராக விளங்கினார். நாட்டின் விடுதலை மட்டுமல்லாமல் பெண் விடுதலை, பெண் கல்வி, சமூக சீர்திருத்தம், சமத்துவம் ஆகியவற்றைப் பற்றியும் அவர் சிந்தித்தார். சுதந்திரம் அடைந்த பிறகு நாட்டின் வளர்ச்சிக்கு என்னென்ன செய்யப்பட வேண்டும் என்று தனது பாடல்களில் எழுதிவைத்தார். அவருடைய ‘பாஞ்சாலி சபதம்’, ‘குயில் பாட்டு’, தேசபக்தி கீதங்கள் காலம் கடந்தும் அவருடைய புகழைப் பரப்பி நிற்கும்” என்று மோடி குறிப்பிட்டிருக்கிறார்.

தமிழக அரசும் பாரதியைப் போற்றும் வகையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அவருடைய நினைவுநாள் மகாகவி தினமாகக் கடைப்பிடிக்கப்படும் என்பது அவற்றில் ஒன்று.

x