கேரளத்தில் ‘லவ் ஜிகாத்’தும் ‘போதைப்பொருள் ஜிகாத்’தும் பரவுவதாகவும், முஸ்லிம் அல்லாத மதங்களைச் சேர்ந்த பெண்கள் இந்த வலைகளில் வீழ்ந்துவிடாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் பேசிய பலா மறைமாவட்ட ஆயர் ஜோசப் கள்ளரங்காட்டுக்கு, அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
இதுதொடர்பாக, திருவனந்தபுரத்தில் பேசிய முதலமைச்சர் பினராயி விஜயன், “போதைப்பொருள் பழக்கம் என்பது ஒரு சில மதங்களை மட்டுமல்ல, அனைத்து மதத்தவருக்குமே தீங்கை விளைவிப்பது. அதற்கு மதச்சாயம் பூசக் கூடாது. எந்த ஒரு குற்றச்சாட்டுக்கும் ஆதாரமும், தரவுகளும் அவசியம். ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளால் கேரளத்தின் மீது மற்றவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையும் மதிப்பும் குறைந்துவிடும். பலா மறை மாவட்ட ஆயர் செல்வாக்கு மிக்க மதத் தலைவர். இப்போதுதான் முதல்முறையாகப் ‘போதைப்பொருள் ஜிகாத்’ என்ற வார்த்தையைக் கேள்விப்படுகிறோம். போதைப்பொருள் பழக்கம் அதிகரிப்பதாக வரும் தகவல்கள் குறித்து கவலைப்படுகிறோம். அதைத் தடுக்க சட்டபூர்வமான நடவடிக்கைகளை வலுப்படுத்திக்கொண்டிருக்கிறோம். போதைப்பொருள் குற்றத்துக்கு மதச் சாயம் கிடையாது. அது ஒட்டுமொத்த சமூகத்துக்கே எதிரானது. பொறுப்பான பதவிகளில் இருப்பவர்கள் நிதானத்துடன் பேச வேண்டும். தங்களுடைய பேச்சு, சமூகத்தில் மத அடிப்படையில் பிளவுகளை உண்டாக்கிவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும்” என்று கண்டிப்புடன் கூறியிருக்கிறார்.
மறைமாவட்ட ஆயரின் பேச்சு மாநிலத்தில் சமூகங்களுக்கு இடையிலான ஒற்றுமையைப் பாதிக்கும் என்று கேரள பிரதேச காங்கிரஸ் கட்சித் தலைவர் பி.டி. தாமஸும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இந்திய ஜனநாயக வாலிபர் சங்க செயலாளர் ஏ.ஏ. ரஹீமும் பேராயரின் சர்ச்சைப் பேச்சைக் கண்டித்திருப்பது குறிப்பிடத்தக்கது.