நாகரிக நாடுகள் தாலிபான்களை அங்கீகரிக்கக் கூடாது!


இந்திப் பாடலாசிரியர் ஜாவித் அக்தர்

‘நாகரிக மற்றும் ஜனநாயக நாடுகள் தாலிபான்களை அங்கீகரிக்கக் கூடாது’ என்று, பிரபல இந்திப் பாடலாசிரியர் ஜாவித் அக்தர் ட்விட்டரில் கருத்து தெரிவித்திருக்கிறார்.

“உலகில் உள்ள ஒவ்வொரு நாகரிக நபரும், ஒவ்வொரு ஜனநாயக அரசும், ஒவ்வொரு நாகரிக சமுதாயமும் தாலிபான்களை அங்கீகரிக்க மறுக்க வேண்டும். ஆப்கானிஸ்தானில் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் ஒடுக்குமுறையைக் கண்டிக்க வேண்டும். இல்லையெனில் நீதி, மனிதாபிமானம், மனசாட்சி போன்ற வார்த்தைகளை நாம் மறந்துவிட வேண்டும்” என ஜாவித் அக்தர் ட்வீட் செய்துள்ளார்.

“பெண்கள் அமைச்சர்களாக முடியாது. அவர்கள் வீட்டில் தங்கியிருந்து குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்” என்று தாலிபான் செய்தித் தொடர்பாளர் சையத் ஜாகிருல்லா பேசியிருப்பதையும் கடுமையாகக் கண்டித்திருக்கும் ஜாவித் அக்தர், “உலகின் நாகரிக மற்றும் ஜனநாயக நாடுகள் என்று அழைக்கப்படும் நாடுகள் தாலிபான்களுடன் கைகோர்க்க தயாராக உள்ளன. இது எவ்வளவு வெட்கக்கேடானது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

சமீபத்தில், தாலிபான்களை ஆர்எஸ்எஸ் மற்றும் விஷ்வ இந்து பரிஷத் அமைப்புகளுடன் ஒப்பிட்டுப் பேசியதாக ஜாவித் அக்தர் மீது குற்றம்சாட்டிய இந்து அமைப்புகள், அவரைக் கைதுசெய்ய வேண்டும் என்று போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

x