வீடு வீடாகச் சென்று தடுப்பூசி போடுவது சாத்தியமல்ல!


தடுப்பூசி போடும் நடைமுறைகள் மேம்பட்டுவரும் நிலையில், வீடு வீடாகச் சென்று தடுப்பூசி போடுமாறு அரசுக்கு உத்தரவிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது.

“கோவிட் பெருந்தொற்று வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறு விதமாகப் பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது. நோய்த்தடுப்பு நடவடிக்கைகளாலும் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இந்த நிலையிலும் தடுப்பூசி போடுவது ஏற்கத்தக்க அளவில் முன்னேற்றம் அடைந்திருக்கிறது. எனவே, வீடு வீடாகச் சென்று தடுப்பூசி போடுங்கள் என்று உத்தரவிட முடியாது” என்று நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட், விக்ரம்நாத், ஹிமா கோஹ்லி அடங்கிய அமர்வு இன்று (செப்டம்பர் 8) கூறியிருக்கிறது.

கோவிட் நோயால் இறந்த அனைவருக்கும், மருத்துவ சிகிச்சை அளித்ததில் அலட்சியம் நிலவியதாகக் கருதி இழப்பீடு வழங்க வேண்டும் என்ற பொதுநலன் மனுவையும் அமர்வு விசாரணைக்கு ஏற்க மறுத்துவிட்டது. கோவிட் பெருந்தொற்றால் துரதிருஷ்டவசமாக ஏராளமானோர் இறந்திருந்தாலும், அவை அனைத்துமே அரசின் மருத்துவத் துறை அலட்சியத்தால்தான் ஏற்பட்டது என்று கருதிவிட முடியாது. அப்படியொரு கண்ணோட்டத்தைக் கொள்ள முடியாது என்று கூறியிருக்கும் உச்ச நீதிமன்ற அமர்வு, இது தொடர்பாக இழப்பீடு பெற மத்திய அரசை உரிய வகையில் அணுகுமாறு மனுதாரருக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

x