ரயில்கள் தாமதமானால் இழப்பீடு தர வேண்டும்


‘ரயில்கள் தாமதமானால் ரயில் பயணிகளுக்கு ஏற்படும் இழப்புகளுக்கும் மன உளைச்சல்களுக்கும் உரிய வகையில் நஷ்டஈட்டை ரயில்வே நிர்வாகம் தந்தாக வேண்டும்’ என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

“பொதுச் சேவைகளில் போட்டிகளும் பொறுப்பேற்றல்களும் அதிகரித்து வரும் காலம் இது. ரயில்கள் குறித்த நேரத்தில் உரிய ஊர்களுக்குச் செல்லாவிட்டால், அங்கிருந்து இன்னொரு ஊருக்குச் செல்ல முன்பதிவு செய்த பயணிகளுக்குப் பதற்றமும் மன உளைச்சல்களும் ஏற்படுவதுடன் தொடர முடியாத பயணத்துக்குச் செய்த செலவு வீணாவதுடன், இடைவழியில் தங்கும் செலவு, மாற்றுப் போக்குவரத்துச் செலவு என்று நிதிச் செலவும் கூடுகிறது. தங்களுடைய ஆற்றலுக்கு அப்பாற்பட்ட காரணங்களால்தான் இப்படி நேர்ந்தது என்று ரயில்வே துறை நிரூபித்தால் மட்டுமே, இந்த தாமதங்களை ஏற்க முடியும். செயலில் அலட்சியம், பொறுப்பின்மை காரணமாக ரயில்கள் ஆங்காங்கே பல்வேறு ஊழியர்களின் செயல்களால் தாமதம் அதிகரித்துக்கொண்டே சென்றால், ரயில்வே துறைதான் அதற்கு ஒட்டுமொத்த பொறுப்பேற்க வேண்டும்” என்று நீதிபதிகள் எம்.ஆர். ஷா, அனிருத்த போஸ் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 7) தீர்ப்பளித்தது.

வழக்கின் பின்னணி

2016-ல் ஜம்மு நகருக்கு தனது குடும்பத்துடன் சென்ற ஒருவர், ரயில் 4 மணி நேரம் தாமதமாகச் சென்றதால் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டார். ஜம்முவிலிருந்து ஸ்ரீநகர் செல்ல முன்கூட்டியே பதிவு செய்திருந்த விமானத்தில் அவரால் செல்ல முடியவில்லை. எனவே, அதிகப் பணம் செலவழித்து காரில் செல்ல நேர்ந்தது. தால் ஏரியில் சவாரி செல்ல முன்கூட்டியே பதிவு செய்திருந்த படகிலும் தங்களுக்கான நேரத்தில் செல்ல முடியாமல் இழப்பும் மன உளைச்சலும் அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஏற்பட்டது. இதையடுத்து தனக்கு ஏற்பட்ட இழப்புகளுக்கும் மன உளைச்சல்களுக்கும் இழப்பீடு கோரி மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

பயணிகளுக்கான சேவையை ஒழுங்காக அளிக்க முடியாத வடமேற்கு ரயில்வே நிர்வாகம், டாக்சிக்கான செலவாக ரூ.15,000, முன்கூட்டியே டிக்கெட்டுகளைப் பதிவு செய்த செலவாக 10,000, தாமதங்களால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கும் வழக்குச் செலவுக்கும் 5,000 என்று மொத்தம் ரூ.30,000 இழப்பீடு வழங்க வேண்டுமென்று மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இதை எதிர்த்து மாநில, தேசிய நுகர்வோர் நீதிமன்றங்கள் வரை மேல் முறையீடு செய்தது ரயில்வே நிர்வாகம். அதேவேளையில், 4 மணி நேர தாமதம் எதனால் நேரிட்டது என்பதை அது எந்த மன்றத்திலும் கூறவேயில்லை. ரயில்கள் காலதாமதமாக ஓடினால் அதற்காக நஷ்ட ஈடு தர வேண்டியதில்லை என்ற விதிகளை மட்டுமே ரயில்வே தரப்பு சுட்டிக்காட்டியது. ரயில்கள் தாமதமாவதற்குப் பல காரணங்கள் இருக்கலாம் என்றும் அது வாதிட்டது.

இந்நிலையில், “திட்டமிட்டபடி ரயிலை இயக்க முடியவில்லை என்றால், அதற்கான காரணங்களை ரயில்வே நிர்வாகம் தெரிவிக்க வேண்டும். தங்களுடைய நிர்வாக ஆற்றலுக்கு அப்பாற்பட்ட செயல்களால்தான் தாமதம் ஆனது என்பதை நுகர்வோர் ஏற்கும் வகையில் கூறவேண்டும். இவற்றைச் செய்ய ரயில்வே நிர்வாகம் தவறிவிட்டது” என்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியிருக்கிறது.

“ஒவ்வொரு பயணியின் நேரமும் அவரைப் பொறுத்தவரை விலைமதிக்க முடியாதது. ஒவ்வொருவரும் பயண நேரத்துக்குப் பிறகு செய்ய பல்வேறு பணிகளைத் திட்டமிட்டிருப்பார்கள். அவையெல்லாம் தாமதங்களால் வீணாகிவிடும்” என்று அமர்வு சுட்டிக்காட்டியிருக்கிறது. ரயில்வே சார்பில் தாக்கல் செய்த மேல் முறையீடுகளையும் அது நிராகரித்துவிட்டது.

x