கைபேசி, கணினிகளில் கடவுச்சொற்கள்


இந்தியர்களில் 3-ல் ஒரு பங்கினர் தங்களுடைய வங்கி சேமிப்புக் கணக்கு எண், ஏடிஎம் கார்டுக்கான பின் எண், நெட் பேங்கிங் பாஸ்வேர்டு, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டுகளின் எண்கள் என்று சகலத்தையும் செல்போனிலேயே சேமித்து வைக்கின்றனர் என ஓர் ஆய்வில் தெரியவந்திருக்கிறது. இணைய முறைகேடுகள் அதிகரித்துவரும் நிலையில், இந்தத் தகவல்கள் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

'லோக்கல் சர்க்கிள்ஸ்' எனும் அமைப்பின் சார்பில், இந்தியாவின் 390-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 24,000 பேரிடம் கேள்விகள் கேட்டு சமீபத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பெருநகரங்கள், சிறு நகரங்கள், கிராமப்புறங்கள் என்று அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்தவர்களிடமும் ஆய்வு நடத்தப்பட்டது. இதில், தங்களுடைய வங்கிக் கணக்கு எண், ஏடிஎம் பின் எண், பாஸ்வேர்டுகள் போன்றவற்றை 33 சதவீதம் பேர் செல்போன், கணினி ஆகியவற்றில் பதிந்துவைத்துள்ளனர் என்றும் 7 சதவீதம் பேர் செல்போன்களிலும் 15 சதவீதம் பேர் கணினி அல்லது மின்னஞ்சலிலும், 11 சதவீதத்தினர் இந்த மூன்றிலும் பதிவுசெய்து வைத்துள்ளனர் என்றும் தெரியவந்திருக்கிறது. செல்போனில் மற்றவர்களுடைய தொலைபேசி எண்களைச் சேமிக்கும் ‘கான்டாக்ட் லிஸ்ட்டி’லேயே இவற்றையும் வைத்திருப்பதாக பெரும்பாலானோர் தெரிவித்தனர்.

தவிர, மகன், மகள், வாழ்க்கைத் துணைவர், அலுவலக நண்பர், வீட்டு வேலைக்காரர்கள் என்று பலரிடமும் அவற்றைப் பகிர்ந்துகொள்கின்றனர். மறந்துவிடுவோம் என்பதாலும், சில வேலைகளை மற்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டியிருப்பதாலும் ஏதோ ஒரு நம்பிக்கையின் பேரில் இப்படிச் செய்வதாக அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

மக்கள் இப்படி தங்களைப் பற்றிய தரவுகளை, அதனால் ஏற்படக்கூடிய ஆபத்துகளை அறியாமல் பதிவுசெய்து வைத்திருப்பதால், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை இந்திய ரிசர்வ் வங்கியும் மற்ற வங்கிகளும் செய்வது அவசியம் என்று ஆய்வு முடிவு எச்சரித்திருக்கிறது.

x