யோகி ஆதித்யநாத் அரசை ரத்தக் காட்டேரி அரசு என்று விமர்சித்த முன்னாள் ஆளுநர் அஜீஸ் குரேஷி மீது தேசத்துரோக வழக்கு பதிவுசெய்யப்பட்டிருப்பது உத்தரப் பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
உத்தராகண்ட், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஆளுநராகப் பதவிவகித்தவர் அஜீஸ் குரேஷி. 81 வயதாகும் அவர், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக அறியப்பட்டவர்.
இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சமாஜ்வாதி கட்சித் தலைவர் ஆசம் கானின் வீட்டுக்குச் சென்ற குரேஷி, அவரது மனைவியைச் சந்தித்துப் பேசிவிட்டுத் திரும்பினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தர பிரதேச அரசு ரத்தம் குடிக்கும் காட்டேரியைப் போல கொடூரமான ஆட்சியை நடத்துகிறது. அரசுக்கு எதிரானவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்துத் துன்புறுத்துகிறது” என்று தெரிவித்தார்.
இதையடுத்து, 2 சமூகங்களுக்கு இடையில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையிலும், சமூகத்தில் அமைதியின்மைக்கு வழிவகுக்கும் வகையிலும் பேசியதாக ராம்பூர் மாவட்ட பாஜக தலைவர் ஆகாஷ்குமார், சக்ஸேனா காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். குரேஷியின் பேட்டிப் பதிவுகளையும் காவல் துறையினரிடம் அவர் அளித்தார். 153ஏ, 153பி, 124ஏ, 505(1)(பி) ஆகிய சட்டப் பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்திருப்பதாகக் காவல் துறை மூத்த அதிகாரி நிருபர்களிடம் கூறியிருக்கிறார்.
இதற்கிடையே, தனது கருத்துகள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருப்பதாக விளக்கமளித்திருக்கும் குரேஷி, “அரசின் கொள்கைகளை எதிர்ப்பது எனது உரிமை. எனது இறுதி மூச்சுவரை அதற்காக ஜனநாயக வழியில் போராடுவேன்” என்றும் கூறியிருக்கிறார்!