மோடி பிறந்த நாளை முன்னிட்டு பாஜக தொண்டு இயக்கம்


பிரதமர் மோடி

புதுதில்லி:

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளையொட்டி, தொடர்ந்து 20 நாட்களுக்கு தொண்டு – அர்ப்பணிப்பு பிரச்சார இயக்கத்தை மேற்கொள்ள பாரதிய ஜனதா தலைமை முடிவு செய்திருக்கிறது.

செப்டம்பர் 17-ல் மோடியின் பிறந்த நாள் வருகிறது. ஆர்எஸ்எஸ் அமைப்பின் தொண்டராக இருந்த அவர், குஜராத் மாநில முதலமைச்சரானது முதல் தீவிர அரசியலில் நேரடியாக ஈடுபடத் தொடங்கினார். அத்துடன் கட்சியின் தேர்தல் வெற்றிக்காகத் தொடர்ந்து உத்திகளை வகுத்துச் செயல்படுத்தி வருகிறார். அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் அவருடைய 20 ஆண்டு கால தீவிர அரசியல் பங்களிப்பை நினைவுகூரும் விதத்திலும், 20 நாள் பிரச்சார திட்டத்தை பாஜக தலைவர் ஜே.பி. நட்டா வகுத்திருக்கிறார்.

இந்த இயக்கத்தின்போது பாஜக தொண்டர்கள் அவரவர் ஊர்களில் சுகாதாரப் பணிகளிலும் ஏழைகளின் நல்வாழ்வுப் பணிகளிலும் ஈடுபடுவார்கள். கரோனா பெருந்தொற்று காலமாக இருப்பதால், தடுப்பூசி போடும் அவசியத்தைப் பிரச்சாரம் செய்வதுடன் தடுப்பூசி மையங்களுக்கு மக்களை அழைத்து வருவார்கள்.

காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2-ம் தேதி, வீதிகளைக் கூட்டி சுத்தம் செய்வார்கள். கதர் கிராம கைத்தொழில் அமைப்புகள் தயாரிக்கும் பொருட்களை வாங்க வேண்டும், எல்லாத் தேவைகளுக்கும் சுதேசிப் பொருட்களையே வாங்கி உள்நாட்டுத் தொழில்களை ஊக்குவிக்க வேண்டும் என்று மக்களிடையே பிரச்சாரம் செய்வார்கள்.

ஏழைகளுக்கு அரிசி, கோதுமை உள்ளிட்ட அவசியப் பண்டங்களையும் இதர உதவிகளையும் அளிப்பார்கள். கரோனா பரவாமலிருக்க அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை இந்த இயக்கத்தின்போது முழுமையாகக் கடைப்பிடிக்குமாறு தொண்டர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடிக்கு பரிசாக தரப்பட்ட பொருட்கள் செப்டம்பர் 17 முதல் பொது ஏலத்தில் விடப்பட்டு, அதில் கிடைக்கும் வருவாய் ‘நமாமி கங்கே’ என்கிற கங்கைத் தூய்மைத் திட்டத்துக்கு பயன்படுத்தப்படும். இதையும் பாஜக தொண்டர்கள் மக்களிடம் விளக்குவார்கள்.

பாஜகவின் விவசாயிகள் பிரிவான கிசான் மோர்ச்சா, மோடியின் பிறந்தநாளை ‘கிசான்-ஜவான் சம்மான் திவஸ்’ என்று கொண்டாடும். அன்றைய தினம் ராணுவ வீரர்கள், விவசாயிகளின் குடும்பத்தார் கவுரவிக்கப்படுவர். அதுமட்டுமின்றி மக்கள் பணியில் தாங்கள் ஈடுபடுவதை உறுதி செய்யும் விதமாக, இந்த இயக்கத்தின்போது பாஜகவின் பூத் கமிட்டி உறுப்பினர்கள் 5 லட்சம் பேர் கட்சித் தலைமைக்கு கடிதம் அனுப்புவார்கள்.

x