மோடிக்கு எதிராக நிறுத்தப்படுகிறாரா நிதீஷ்?


நிதீஷ் குமார்

பிஹார் முதல்வர் நிதீஷ் குமாருக்குப் பிரதமராகும் தகுதி இருக்கிறது என அவரது ஐக்கிய ஜனதா தளம் கட்சியினர் முன்வைத்திருக்கும் வாதம், அரசியல் அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அக்கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டத்தில் இதுதொடர்பாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதும், அந்நிகழ்ச்சியில் நிதீஷ் குமாரே பங்கேற்றதும் பலரைப் புருவமுயர்த்தச் செய்திருக்கின்றன.

இது நிதீஷின் அடுத்தகட்ட நகர்வா, பாஜகவை ஆழம் பார்க்கும் முயற்சியா என்றெல்லாம் ஊகங்கள் எழுந்திருக்கின்றன.

ஏகமனதாக நிறைவேறிய தீர்மானம்

ஆகஸ்ட் 29-ல் பாட்னாவில் நடந்த ஐக்கிய ஜனதா தளத்தின் தேசிய கவுன்சில் கூட்டத்தில், இந்தத் தீர்மானத்தைக் கட்சியின் தேசியத் தலைவர் லலன் சிங் முன்மொழிய, கட்சித் தலைவர்கள் அனைவரும் ஏகமனதாக ஏற்றுக்கொண்டனர். இது பிஹார் அரசியல் களத்தில் மட்டுமல்லாமல், தேசிய அரசியலிலும் விவாதங்களுக்கு வழிவகுத்திருக்கிறது.

இதுகுறித்து விளக்கமளித்திருக்கும் லலன் சிங், “நிதீஷ் குமார் ஒரு ‘பி.எம் மெட்டீரியல்’ என எங்கள் கட்சித் தலைவர்கள் பலரும் கருதுகிறார்கள். அதேவேளையில், பிரதமர் பதவிக்கான இடம் இப்போதைக்குக் காலியாக இல்லை என்பதும் எங்களுக்குத் தெரியும். பிரதமராவதற்கான எல்லாத் தகுதிகளும் நிதீஷ் குமாருக்கு உண்டு என்பதுதான் எங்கள் வாதமே தவிர, யாருடனும் போட்டி போடும் எண்ணம் எங்களுக்கு இல்லை” என மையமாகப் பேசியிருக்கிறார். சிறிய கட்சியான ஐக்கிய ஜனதா தளம், தேசிய அளவில் கோதாவில் குதிப்பதற்கான வாய்ப்பு இல்லை என்பதையும் ஒப்புக்கொண்டிருக்கிறார் லலன். கட்சியின் தேசியப் பொதுச் செயலர் கே.சி.தியாகியும் அதையே வழிமொழிந்திருக்கிறார்.

ஆனால், அக்கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் உபேந்திர குஷ்வாகா பாஜகவுக்குச் சவால்விடும் வகையில் பேசிவருகிறார். தீர்மானம் நிறைவேற்றப்பட்ட மறுநாள் அறிக்கை ஒன்றை வெளியிட்ட அவர், “ஒருவர் பிரதமராவதற்கு (எம்பி-க்களின்) எண்ணிக்கை முக்கிய விஷயம்தான் என்றாலும், அது சாத்தியமாகாத விஷயம் ஒன்றும் இல்லை” என்று கொளுத்திப் போட்டார். நிதீஷ் குமாருக்குப் பிரதமருக்கான தகுதி உண்டு எனும் கருத்தைக் கடந்த சில காலமாகவே முன்வைத்துவருபவர் குஷ்வாகா. அது தற்போது கட்சி முழுவதும் எதிரொலிப்பது, தனது வாதம் சரிதான் என்பதைக் காட்டுவதாக அவர் பெருமிதப்படுகிறார். கூடவே, “எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று யாராலும் கணிக்க முடியாது. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்” என்றும் பொடிவைத்துப் பேசியிருக்கிறார்.

இதற்கிடையே, இதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த நிதீஷ், “இதுகுறித்து சர்ச்சை எதுவும் வேண்டாம். அந்தக் கூட்டத்தில் வேறு பல விஷயங்களும் விவாதிக்கப்பட்டன. கட்சியில் ஒருவர் ஏதேனும் சொல்கிறார் என்றால், அதுவே கட்சியின் ஒட்டுமொத்தக் கருத்தாகிவிடாது” என்று கூறியதுடன், “தயவுசெய்து என்னை மன்னித்துவிடுங்கள்” என்று வேடிக்கையாகக் கைகூப்பி வணங்கியபடி நழுவினார்.

போட்டியிலேயே பங்கேற்கப்போவதில்லை எனும் நிலைப்பாடு கொண்டிருப்பவரிடம், பிரதமர் பதவிக்கான தகுதிகள் இருக்கின்றன என அவரது கட்சியினர் பேசுவது ஏன் என ராஷ்ட்ரிய ஜனதா தளம் கேள்வி எழுப்புகிறது. “பாஜகவுடனான கூட்டணியை முறித்துக்கொள்ள ஐக்கிய ஜனதா தளம் விரும்புகிறது” என காங்கிரஸும் தன் பங்குக்குக் கொளுத்திப் போட்டிருக்கிறது.

கூட்டணி முறிகிறதா?

தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து வெளியேறுவதற்கான சமிக்ஞையை நிதீஷ் வெளிப்படுத்துகிறாரோ எனும் ஊகங்களுக்கு முகாந்திரங்கள் ஏராளமாக இருக்கின்றன. 2024-ல் மக்களவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் சூழலில் பிரதமர் பதவிக்கான தகுதிகள் குறித்த சர்ச்சையை, ஐக்கிய ஜனதா தளத் தலைவர்கள் முன்கூட்டியே கிளப்புவதன் பின்னணி என்ன என்றும் கேள்விகள் எழுந்திருக்கின்றன.

ஏற்கெனவே பொது சிவில் சட்டம், என்.ஆர்.சி பட்டியல், பெகாசஸ் விவகாரம் எனப் பல்வேறு பிரச்சினைகளில் பாஜகவுடன் முரண்படுகிறது ஐக்கிய ஜனதா தளம். சமீபத்தில், சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தக் கோரி பிரதமரைச் சந்தித்து வலியுறுத்திவிட்டு வந்திருக்கிறார் நிதீஷ். இந்நிலையில், இப்படி ஒரு தீர்மானத்தை அக்கட்சியினர் கொண்டுவந்திருப்பது பாஜகவினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதில் ஆச்சரியமில்லை. பாஜகவிடம் 300-க்கும் மேற்பட்ட எம்பி-க்கள் இருக்கும்போது, கூட்டணியிலிருந்து ஐக்கிய ஜனதா தளம் விலகுவது எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தப் போவதில்லை என்று பாஜகவினர் பதிலடி கொடுத்துவருகிறார்கள்.

பிரதமர் மோடியுடன் நிதீஷ் குமார்

பழைய கணக்குகள்

2013-ல் பிரதமர் வேட்பாளராக மோடி முன்வைக்கப்பட்டபோதே, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேசிய ஜனநாயகக் கூட்டணியைவிட்டு வெளியேறியவர் நிதீஷ். “இந்த நாட்டை வழிநடத்துபவர் மதச்சார்பற்றவராக இருக்க வேண்டும்” என்று மோடிக்கு எதிராக அப்போது அவர் முழங்கினார். “மோடியுடன் கூட்டணி வைத்துக்கொள்வதைவிட பூமியின் அடியாழத்தில் புதைந்து மறைந்துபோவேன்” என்றெல்லாம் காட்டமாகப் பேசியவர் தான் நிதீஷ்.

எனினும், 2014 மக்களவைத் தேர்தலில் மோடி வென்றதையடுத்து முதல்வர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார் நிதீஷ். அந்தத் தேர்தலில், பிஹாரில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் 22-ல் பாஜகவும், இரண்டே தொகுதிகளில் ஐக்கிய ஜனதா தளமும் வென்றது தார்மிக ரீதியாக நிதீஷைப் பலவீனப்படுத்தியது. இந்த நிலையில், 2015 பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் போன்ற கட்சிகளுடன் சேர்ந்து மகா கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு வென்று முதல்வரானார் நிதீஷ். எனினும், லாலு பிரசாத் யாதவ் குடும்பத்தின் ஊழல்களை முன்வைத்து கூட்டணியிலிருந்து வெளியேறி மீண்டும் பாஜகவுடன் சேர்ந்து ஆட்சியமைத்தார். இதற்கிடையே, நம்பிக்கையுடன் முதல்வர் நாற்காலியில் தன்னால் அமர்த்தப்பட்ட ஜித்தன் ராம் மாஞ்சி தனக்கு எதிராகவே திரும்பியது உள்ளிட்ட பிரச்சினைகளையும் எதிர்கொண்டார்.

2020 பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளத்தைப் பலவீனப்படுத்த, சிராக் பாஸ்வானுடன் சேர்ந்து பாஜக வகுத்த ரகசிய வியூகத்தால், 43 இடங்களில் மட்டுமே ஐக்கிய ஜனதா தளம் வெல்ல முடிந்தது. அது நிதீஷை ரொம்பவே காயப்படுத்திவிட்டது. 74 இடங்களில் வென்ற பாஜக, முதல்வர் பதவியை நிதீஷுக்குத் தந்துவிட்டாலும் அவ்வப்போது அரசுக்குக் குடைச்சல்களை ஏற்படுத்திவருகிறது. இந்தப் பிரச்சினைகளுக்கு முடிவுகட்ட, தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட வேண்டும் என்று கே.சி.தியாகி தொடர்ந்து வலியுறுத்திவருவது கவனிக்கத்தக்கது. இந்நிலையில், பாஜகவுக்கான மறைமுக எச்சரிக்கையாகவும் இந்தத் தீர்மானத்தைக் கருதலாம் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

லாலுவுடன் நிதீஷ்

எதிர்க்கட்சி வரிசையில்?

மோடி அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் முகாமில் உறுதியான தலைவராக யாரும் உருவாகாத நிலையில், நிதீஷின் இந்த வியூகம் கவனம் பெற்றிருக்கிறது. மேற்கு வங்கத்துக்கு வெளியே திரிணமூல் காங்கிரஸ் கட்சியை வளர்த்தெடுக்கும் முயற்சியில் மம்தா ஈடுபட்டிருந்தாலும், அவரைப் பிரதமர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ள பிற கட்சிகள் முன்வருமா என்பது கேள்விக்குரிய விஷயம். அதேவேளையில், அடிக்கடி நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளும் நிதீஷுக்கும் எதிர்க்கட்சி முகாமில் பிரதான இடம் கிடைக்குமா என்பது சந்தேகம்தான்.

மறுபுறம், சரத் பவார், சரத் யாதவ், முலாயம் சிங் யாதவ், அகிலேஷ் யாதவ், சிராக் பாஸ்வான் என பல தலைவர்களைச் சந்தித்து அரசியல் வியூகம் வகுப்பதில் லாலு பிரசாத் யாதவ் மும்முரமாக இருக்கிறார். இடையில் “நிதீஷ் குமார் என் இதயத்துக்கு நெருக்கமானவர்” என்று நிதீஷுக்கு சென்டிமென்ட் வலையும் வீசினார். வயது, அரசியல் அனுபவம் என கனிந்த நிலையில் இருக்கும் இருவரும் கைகோர்க்கக்கூடும் என்றுகூட ஒரு எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. தற்போது டெல்லியில் தனது மகள் மிசா பாரதியின் வீட்டில் தங்கியிருக்கும் லாலு பிரசாத், பாட்னாவுக்குத் திரும்பினால் அரசியல் களத்தில் காட்சிகள் மாறத் தொடங்கலாம் என்கிறார்கள். பார்க்கலாம்!

x