மேற்கு வங்கத்தின் பவானிபூர், ஷம்ஷேர்கஞ்ச், ஜாங்கிபூர் சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு செப்டம்பர் 30-ல் இடைத் தேர்தல் நடத்தப்பட்டு, அக்டோபர் 3-ல் முடிவு வெளியிடப்படும் என்று மத்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
பேரவைத் தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரியிடம் தோற்றுவிட்டாலும், முதலமைச்சராகப் பதவியேற்றார் மம்தா பானர்ஜி. 6 மாதங்களுக்குள் அவர் பேரவை உறுப்பினராகாவிட்டால், முதலமைச்சர் பதவியிலிருந்து இறங்கியாக வேண்டும். மேற்கு வங்கத்தில் சட்ட மேலவை கிடையாது. ஓரிரு நாள் இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் முதலமைச்சராக பதவியேற்க சட்டத்தில் இடம் உண்டு என்றாலும் தார்மிக அடிப்படையில் அதை எதிர்க்கட்சிகள், குறிப்பாக பாஜக விமர்சிக்கும்.
மேற்கு வங்கம் மட்டுமல்ல... ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, அசாம், பிஹார், ஹரியாணா, இமாசல பிரதேசம், மத்திய பிரதேசம், மேகாலயம், ராஜஸ்தான், உத்தராகண்ட், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் தாத்ரா – நாகர் ஹவேலி என்ற மத்திய ஆட்சிப் பகுதியிலும் கூட இடைத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும். கோவிட் பெருந்தொற்று நோய் நீடிப்பதாலும் வட இந்தியாவிலும் கிழக்கு இந்தியாவிலும் வெள்ளச் சேதம் கடுமையாக இருப்பதாலும் இடைத் தேர்தலை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.
கடந்த மாதம் புதுதில்லி வந்த முதல்வர் மம்தா, பிரதமர் மோடியைச் சந்தித்தபோது பேரவை இடைத் தேர்தலை நடத்தாவிட்டால், தன்னால் பதவியில் தொடர்வதில் ஏற்படக்கூடிய சட்டச் சிக்கலை எடுத்துரைத்து, விரைந்து தேர்தலை நடத்த உதவுமாறு கோரினார். அது ஏற்கப்பட்டிருக்கிறது. ஏனென்றால், மேற்கு வங்கத்திலேயே காலியாக இருக்கும் தின்ஹடா, சாந்திப்பூர், கார்தாஹா, கோசபா பேரவைத் தொகுதிகளுக்குத் தேர்தல் அறிவிக்கப்படவில்லை. அங்கு வெள்ளச் சேதம் கடுமை. மம்தா போட்டியிட்டால், பவானிபூரில் வெல்வதும் முதல்வராக நீடிப்பதும் உறுதி. நவராத்திரி தொடங்குவதற்கு முன்னதாகவே தேர்தல் முடிவும் வந்துவிடும் என்பதால், இதை மோடியின் நவராத்திரிப் பரிசாகவே அரசியல் நோக்கர்கள் பார்க்கின்றனர்.