ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ரூ.1.5 கோடி மதிப்பிலான ஆப்பிள் பழத்தை வாங்கி, பணம் தராமல் ஏமாற்றிய சென்னை பழ வியாபாரியை, ஜம்மு காஷ்மீர் மாநில போலீஸார் கைது செய்தனர்.
சென்னை, விருகம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் தினகரன்(38). இவர், கோயம்பேடு அண்ணா மார்க்கெட்டில் மொத்த வியாபார ஆப்பிள் கடை நடத்தி வருகிறார்.
கடந்த 2018-ம் ஆண்டு, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ‘உசாம் ப்ரூட்ஸ்’ என்ற ஆப்பிள் நிறுவனத்தில் 1.18 கோடி ரூபாய்க்கு தினகரன் ஆப்பிள் வாங்கியுள்ளார். அதேபோல், மற்றொரு நிறுவனத்திடமிருந்தும் 45 லட்சம் ரூபாய்க்கு தினகரன் ஆப்பிளை வாங்கினார்.
கடந்த 3 ஆண்டுகளாக ஆப்பிள் வாங்கிய தொகையான 1.5 கோடியை தராமல், தினகரன் ஏமாற்றி வந்துள்ளார். இது தொடர்பாக ஆப்பிள் நிறுவனத்தின் உரிமையாளர் ஜம்மு காஷ்மீர் ஷோபியன் போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் தினகரன் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து, தனிப்படை அமைத்து தீவிரமாகத் தேடி வந்தனர். இந்த நிலையில் விருகம்பாக்கத்தில் வீட்டில் பதுங்கியிருந்த தினகரனை, மதுரவாயல் போலீஸாரின் உதவியோடு ஜம்மு காஷ்மீர் சோபியன் போலீஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட தினகரனிடம், விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், ஜம்மு காஷ்மீர் சோபியன் போலீஸார் டிரான்சிட் வாரன்ட் பெற்று, தினகரனை ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.