சத்தீஸ்கர் காங்கிரஸில் ஏற்பட்டிருக்கும் பூசல்களுக்கு மத்தியில், இன்று டெல்லியில் கட்சித் தலைமையைச் சந்தித்துப் பேசுகிறார் முதல்வர் பூபேஷ் பகேல். ராகுல் காந்தியின் அழைப்பின்பேரில் டெல்லி சென்றிருப்பதாக அவர் கூறியிருக்கிறார்.
காங்கிரஸ் கட்சிக்குள் அடுத்தடுத்து கலகங்கள் உருவாவது கட்சித் தலைமைக்குத் தலைவலியாகியிருக்கிறது. குறிப்பாக, காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் நாற்காலி யுத்தம் தொடர்கதையாகியிருக்கிறது. ராஜஸ்தான், பஞ்சாப் மாநிலங்களில் உருவான சீனியர் - ஜூனியர் சிக்கல் ஒருவழியாகத் தீர்த்துவைக்கப்பட்டிருக்கிறது. எனினும், எப்போது வேண்டுமானாலும் மீண்டும் பூகம்பம் வெடிக்கலாம் எனும் சூழல் தொடர்கிறது.
இந்நிலையில், சத்தீஸ்கர் காங்கிரஸில் சலசலப்பு தொடங்கியிருக்கிறது. முதல்வர் பூபேஷ் பகேலுக்கும், சுகாதாரத் துறை அமைச்சர் டி.எஸ்.சிங் தேவுக்கும் இடையில் ஏற்பட்டிருக்கும் பதவி மோதல் தற்போது உச்சகட்டத்தை அடைந்திருக்கிறது.
2018 சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் 68-ல் காங்கிரஸ் வென்றது. அப்போது சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த பூபேஷ் முதல்வர் முதல்வராவார் என்று முடிவாகியிருந்தது. பாஜக ஆட்சியில், எதிர்க்கட்சித் தலைவராக இருந்த டி.எஸ்.தேவும் முதல்வர் நாற்காலியில் கண் வைத்திருந்தார். இதற்கிடையே, காங்கிரஸ் எம்.பி தம்ரத்வாஜ் சாஹு முந்திச் சென்றுவிடுவார் எனும் அச்சம் இருவருக்கும் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து முதல்வர் பதவியைத் தலா இரண்டரை ஆண்டுகளுக்குப் பகிர்ந்துகொள்வது என்று பூபேஷும் தேவும் பேசித் தீர்மானித்துக்கொண்டதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், இதுதொடர்பாக, காங்கிரஸ் கட்சி சார்பில் அதிகாரபூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை.
பூபேஷ் முதல்வராகப் பொறுப்பேற்று இரண்டரை ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், வாய்மொழி ஒப்பந்தத்தைச் சுட்டிக்காட்டி முதல்வர் பதவியைக் கேட்டு அவரை அணுகினார் தேவ். ஆனால், அப்படி எந்த ஒப்பந்தமும் செய்யப்படவில்லை என்று பூபேஷ் மறுக்கவே அதிகார மோதல் தொடங்கிவிட்டது.
இதையடுத்து இருவரும் டெல்லி சென்று காங்கிரஸ் தலைமையிடம் முறையிடுவதில் மும்முரமாக இருக்கிறார்கள். ஆகஸ்ட் 24-ல் டெல்லியில் ராகுல் இல்லத்துக்குத் தனித்தனியே சென்று இருவரும் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள்.
முதல்வர் பதவியில் பூபேஷ் தொடர்வார் என்று சத்தீஸ்கர் காங்கிரஸ் பொறுப்பாளர் பி.எல்.பூனியா இருமுறை அறிவித்துவிட்ட நிலையிலும், முயற்சியைக் கைவிடாமல் டெல்லியிலேயே முகாமிட்டிருக்கிறார் தேவ். அவருக்கு ராகுலின் ஆதரவு இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
இதற்கிடையே, இப்படி கோஷ்டிப் பூசலைச் சமாளிக்கவே ஆளுங்கட்சி திணறிக்கொண்டிருந்தால், ஆட்சி நிர்வாகம் எப்படி முறையாக நடக்கும் என எதிர்க்கட்சியான பாஜக விமர்சித்துவருகிறது.
கட்சியின் தலைமைப் பொறுப்பை ராகுல் காந்தி ஏற்கும்வரை, இப்படியான பிரச்சினைகள் தொடர்வதைத் தவிர்க்க முடியாது என்றே அரசியல் பார்வையாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். பெகாசஸ், அரசு சொத்துகள் குத்தகை என பாஜக அரசுக்கு நெருக்கடி கொடுக்க ஆயிரம் பிரச்சினைகள் இருக்கும் சூழலிலும், உட்கட்சிப் பிரச்சினைகளைச் சமாளிக்கவே நேரம் போதாமல் தவிக்கிறது காங்கிரஸ்.